அந்த அரபிக் கடலோரம் நடந்த மெகா தமிழ் குடும்ப சங்கமம்!
ரியாத்: கடந்த 24.04.15 அன்று சவுதி அரேபியா அல் ஜுபைல் கடற்கரை மண்டபத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் ஒன்றிணைந்த மெகா குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிழக்கு மாகாண இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம்(IFF) தமிழ் பிரிவும், யுனிவர்சல் இன்ஸ்பெக்சன்(UIC) கம்பெனியும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் தமிழ் கலாச்சார விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. காலை 10 மணிக்கு மாநாட்டு கண்காட்சியை இந்தியன் சோஷியல் ஃபோரம் தேசிய தலைவர் கர்நாடகாவை சேர்ந்த வசீம் துவக்கி வைத்தார். முன்னதாக மௌலவி சபீர் பைஜி திருமறை ஓதினார்.

இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரத்தின் பொதுச் செயலாளர் அஃப்ஸர் ஹுசைன் வரவேற்றார். இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் பொதுச் செயலாளர் காயல் அபூபக்கர் வாழ்த்துரை வழங்கிட முகம்மது ஃபைஸல் அறிமுக உரையுடன் கண்காட்சி துவங்கியது.
காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை குழந்தைகளுக்கான நினைவாற்றல், பாட்டு, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் நடுவர்களாக ஜித்தா மஹபூப் சரீப், கீழை அரூஸி, மௌலவி இக்பால் ஆகியோர் மதிப்பெண் வழங்கினர்.

மாநாட்டு திடலில் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது. யார் வறியவர்கள்? என்ற தலைப்பில் மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி குத்பா பேருரையாற்றினார். 1:30 மணிக்கு கண்காட்சி திடலை அபுபக்கர் திறந்து வைத்தார். மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்
மதிய உணவுக்கு பின்னர் சிறியவர் பெரியவர்களுக்கான(ஆண்,பெண்) பானை உடைத்தல், கயிறாட்டம், மியூசிக்கல் சேர், பலூன் உடைத்தல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மாலை 4.30 மணிக்கு மனமகிழ்வோடு வாழ்வதெப்படி? என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. மனோதத்துவ பேராசிரியர் டாக்டர் பீர் முஹம்மது ஒலி, ஒளி மூலமாக பயிற்சி கொடுத்தார். பெண்களுக்கு சகோதரி ஆமினா ஹஸன் - நியூட்ரிஷியன் வகுப்பு எடுத்தார்.

நிறைவாக மாலை 7.30 மணிக்கு குடும்ப சங்கமம் ஏன்? என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நாஞ்சில் கபீர், ரியாத் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் தலைவர் ரபீக், கிழக்கு மாகாண இந்தியன் சோஷியல் ஃபோரம் தேசிய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.ஜித்தா மஹபூப் சரீப் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அல்ஹஸ்ஸா, கோபார், சிஹாத், தம்மாம், ஜுபைல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆண்களும், பெண்களும், சிறார்களுமாய் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் விளம்பரதாரர்களாக சவூதி அல் நஜிம், மலபார் கோல்டு ஹவுஸ், லூலூ ஹைபர் மார்க்கெட், இந்தியா கேட் ரெஸ்டாரண்ட், ஐசிஎஸ் கார்கோ, எஸ்டி கார்கோ, டாலி சவுதி, லைலா அபாயா நிறுவனத்தார் பேராதரவு வழங்கினர்.












Click it and Unblock the Notifications