• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுயம் பிரிந்து...- சசிகுமார்

By Staff
|

சன்னல் வழி சாரல்

மொட்டைமாடி மாலைக்காற்று

சாத்தியமில்லை இங்கு

மெரினா மணற்பரப்பில்

கால்புதைத்து கால்புதைத்து

அலைசேர்ந்து கால் நனைத்து

கையுடன் காலணியேந்தி

அலை விளிம்பில் நடப்போம்

அரவமற்ற மணல்வெளியில்

சிறுவட்டமாய் சேர்ந்தமர்வோம்

கன்யாகுமரி வயலின்

காணாமல் போன கண்ணகி

மணிரத்னம் மருதுவின் கைவண்ணம்

மீராவின் கவிதைகள்

அன்றைய டிசம்பர் கச்சேரி

அறுசுவை அரசின் இடியாப்பம்

சச்சினும் லாராவும்

தவறாதுண்டங்கு

சுஜாதாவை சிலாகிக்கையில்

சுண்டல்சிறுவன் வெறிப்பதை ரசிப்போம்

திடுதிப்பென்று ஒரு ஹைக்கூ

திடீரென்று வந்து விழுவார்

வேதியியல் ஆசிரியர்

அரைவேக்காட்டு கல்லூரி காதல்கள்

அம்பலம் ஏறும் அன்று

வீரப்பன் காவிரி தவிர

விட்டு வைத்தது

நாம் எதுவுமில்லை

நூலறுந்த பட்டமாய் நம்வாதம்

நில்லாது ஓரிடம்

சலித்து சூரியன்

தொலைவில் எங்கோ மூழ்கிவிட

காக்கிநிறம் கண்ணில் விழும்வரை

எஞ்சி நிற்பது

நாமும் நட்ச்சத்திரங்களும்

அறை நோக்கி சீறுகையில்

அஞ்சப்பரோ ஆரியபவனோ

நிச்சயம் வாய்க்காது

நட்பு வட்டம் இங்கொன்று

ஒத்த மனத் தோழன்

ஒருவனில்லை இங்கு

நண்பன் நாடு சென்றான்

விடுமுறையில் ஓர் மாதம்

வைரமுத்துவை வாங்கிவா என்றேன்

வழியெல்லாம் விழியாய்

வரும் விமானத்திற்கு வந்து நின்றேன்

நண்பனின் வருகைக்கல்ல

கல்கியும் வைரமுத்துவும் கூடவருவார்கள்

சிரித்துவிட்டு மெல்ல சொன்னான்

கல்கிக்கும் பாரதிக்கும் இடமில்லை

கைமுறுக்கும் சாம்பார் பொடியும்

சம்படத்தில் கொண்டுவந்தேன்

கடியாமல் கை நீட்டினேன்

கைமுறுக்கும் வேண்டும் எனக்கு

அண்ணாந்து காயம் பார்த்து

முகத்தில் சாரல் வாங்கி

சிலிர்த்த காலம் செத்து

கண்ணாடி பின் நின்றும்

மழை ரசிக்க மனமில்லை

விரைந்தோடி வலைதளத்தில்

நெடுஞ்சாலை நிலவரம் மேய்வேன்

போக்குவரத்தில் அகப்பட்டு

நத்தையாய் நான் நகர்கையில்

என் மனம்

காட்டாற்றில் சிறுகிளையாய் எனை

கடத்திக்கொண்டு பின் போக

சிலீரென்ற சாரல்

பின் எழும் மண்வாசனை

வேண்டிவிரும்பி தலை நனைந்து

வீடு சென்று சேர்கையில்

பதறி தலைகலைத்து துவட்டும்

என் அம்மா

ஆவி பறக்க தேநீர்

அடுத்துவரும் சிறு உணவு

எங்கு விட்டாலும்

அன்னை நோக்கி அடிபயிலும்

மழலையாய் என்மனம்

சேருவதோ சென்னையில்தான் !

பின்தொடரும் வண்டி

ஒலித்து என்னை எழுப்ப

அனிச்சையாய் இயந்திரமாகிறேன்

கூட்டினடையும் குருவியாய்

கதவை அறைந்து சாத்த

காலையில்தான் திறக்கும்

ஒரு வழியாய் உணவுமுடித்து

மீண்டும் என் மல்யுத்தம்

தொலைக்காட்சியுடன் தொடங்கும்

தமிழ்சேனல் இங்குண்டு

அமெரிக்கா வரை துரத்தும்

அழுகை தொடர்கள்!

அணைத்துவிட்டு அப்படியே சாய்வேன்

அதிகாலை அலாரம் அடித்தெழுப்பும்

என் வாழ்வின் மற்றொருநாள்

இரைதேடும் எறும்புகளாய்

சாலை எங்கும் கார்கள்

மனித முகம் தெரியவில்லை

சத்தமில்லா தீபாவளி

சக்கரை இல்லா பொங்கல்

சகோதரியின் வாழ்த்து அட்டை

சரியாய் வந்து சேராவிடின்

பிறந்த நாள் மறந்துபோகும்

திருநாளெல்லாம் மறுநாளாய் விடியும்

இத்திருநாட்டில்!

வெற்று சிரிப்புகளும்

தேன் தடவிய வார்த்தைகளும்

சுவரையும் நலம் விசாரிப்பார்களோ

சந்தேகம் வருகிறது!

விடுமுறைக்கு தவமிருந்து

தாமஸ்குன்றின் மேல்

விமானம் தாழ்வாய் பறக்கையில்

இருப்புக் கொள்ளாது

மனம் இருக்கையில்

சுங்கம் தாண்டி

சீறிப்பாய்ந்து

கோடை மழைக்கு

வானம் வெறிக்கும்

நம் விவசாயிபோல்

வாசலில் தவமிருக்கும்

பெற்றவர்கள்

முன்நெற்றி சிறுவழுக்கை

அம்மாசொல்லி அறிவோம்

இளநரைகளை எண்ணுவாள்

என் சகோதரி

உனக்கிது மூன்றாவது

விடுமுறை

இன்றோடு எனக்கு

ஐந்து பிரசவம்

சொல்லிவிட்டு சிரித்தாள்

என் அம்மா

உள்ளுக்குள் ஏதோ

உடைந்து விழ

வார்த்தை வராமல் தவிப்பேன்!

இளமையில் டாலர்

ஒளவையும் சொல்லவில்லை !

நேசம் பிரிந்து

மண்வாசம் மறந்து

பங்குச்சந்தை வர்த்தகத்தில்

இழந்தது சுற்றமட்டுமல்ல

சுயத்தையும்

இந்தியா ஒளிர்கிறது!

தேர்தல் சுவரொட்டி அல்ல

நாடு சிறக்குதென்று

நாற்புறமும் செய்திவர

நான் திரும்பும்நாள்

நெடுந்தொலைவில் இல்லை

நம்பிக்கை விதையூன்றி

விருட்ச்சமாக காத்திருப்பேன்

காலம் சொல்லும் கதை

நான்கு வருடம் உருண்டோடி

கூசாமல் தருவேனோ

இது போல இன்னொன்று!

பின் நரைகூடி கிழப்பருவமெய்தி

வீழ்வேனோ அந்நிய மண்ணில்

வெற்றிடம் நிரப்ப

விழைகிறேன் வெறுமையாய்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X