தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதும் நல்லதுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

ஒரே அறையில்
பன்னாள்கள் இருப்பதன் பலனை
அறிவாயா, நான் அறிவேன்.

ஒரே அறையில்
மூன்றாண்டுகள் இருந்தேன்.

அது நான்காம் தளக் கட்டடம்.
தேநீரும் உணவும்
நேரத்துக்கு வந்துவிடும்.
குளிர்ப்புக்கும் கழிப்புக்கும்
அதே தளத்தில் சிற்றறைகள்.
இருக்கும் ஐந்தாறு உடைகளைக்
குளியலறையிலேயே துவைத்து
உலர்த்தி அணிவேன்.

Magudeswaran's poetry

தனக்குள்ளேயே சுருண்டுகொள்ளும்
சுழல்மனமிருந்தால்
ஒரே அறைக்குள் இருந்துவிடலாம்.
நம் மனத்துக்குள் இல்லாத
சுழல்களா அலைகளா ?

வெளியே ஓர் உலகம் இருப்பதுதான்
நம் பெருந்துன்பம்.

அவ்வறைச் சுவர்கள்தாம்
அவ்வுலகை நம்மிடமிருந்து
துண்டித்துப் பாதுகாக்கிறது.

பாழடைந்த வீடுகளின்
சுவர்களைக்கூட யாரும் இடிப்பதில்லை...
அவை குற்றிச்சுவர்களாக
இருந்துவிட்டுப் போகட்டும்.
முதுகுச் சுமைகளிலிருந்து
தப்பி வரும் ஒரு கழுதை
ஒளிந்து நிற்கட்டும் என்று
விட்டு வைக்கிறார்கள்.

ஞாலம்
நம்மைத் தொடர்புகொள்ள கொள்ள
நமக்கு எல்லாமே நேர்ந்துவிடும்.

கன்னிமையின் கழிதூய்மையைக்கூட
தொடர்புகொள்ளும் உலகம்தான்
கெடுத்து விடுகிறது.

தொடர்பு எல்லைக்கு
வெளியே இருப்பது என்பது
சுவர்களுக்குள் போய்ப் பதுங்கிக்கொள்வதும்தான்.

நம்மோடு தொடர்பில் இருப்பவர்கள்
பார்த்துச் செய்வதுதான் நம் வாழ்க்கை.

அவர்கள் இரக்கம் பாராமல்
செய்தவற்றால் நேர்ந்தவையே
நம் துன்பங்கள்.

இவற்றைத் துறந்து
ஓரறைக்குள்
முடங்கிக் கொள்வதைப்போல் அமைந்தால்
என்ன கெட்டுவிடப் போகிறது ?

மலைக்குள் காட்டுக்குள் குகைக்குள்
சென்றொளியும் முனியும்
சுவர்க்குள் ஒளிவோரும் வெவ்வேறல்லர்.

உனக்குள் எண்ணிப்பார்க்க
ஆயிரம் சிந்தனைகள் இருந்தால்தான்
நீ தனிமையை விரும்ப முடியும்.

உன்னுள் வெற்றிடமே இருந்தால்
தனிமையின் உறுமலைத் தாங்குவாயா ?

எந்நேரமும் வேலை செய்பவர்கள்
தனிமையில் இருக்கிறார்கள்.

வெறுமனே நேரங்கடத்துபவர்கள்
அரட்டைக்குரிய ஆள்களை வைத்திருக்கிறார்கள்.

அது சிறை வாழ்க்கையைப்போல் ஆகாதா
என்று கேட்கலாம்.

நினைத்த மணித்துளியில்
வெளியேற முடியாத எல்லாமே
சிறைகளே.

குடும்பத்தளையிலிருந்து
உன்னால் வெளியேற முடியுமா ?

உடனே தொழிலிருந்து
வெளியேற இயலுமா ?

கடனிலிருந்து
வெளியேற வழியுண்டா ?

அடுத்த நொடியில்
உன் கடையைப் பூட்டுவாயா ?

எல்லாமே சிறைதான்.

ஓர் அறைதான்
இங்கே ஓரளவு பாதுகாப்பு.
அதற்குள் முடங்கி வாழும் தனிவாழ்க்கை
அமுதுதான்.

எங்கேனும் ஓர் அறைக்குள்
யாரேனும் உன்னைப் பிடித்தடைத்தால்
புடம்போட்ட தங்கமாய்
வெளிவருவதற்குக் கிடைத்த வாய்ப்பு
என்று கருது.

காத்திருக்கும் நேரத்தை
இருப்பூர்தியில் செல்லும் நேரத்தை
வரிசையில் நிற்கும் நேரத்தை
அடைபட்ட நேரமாகத்தான் கருதுகிறேன்.
அதில் எண்ணியவற்றை
இன்னும் எழுதிக்கொண்டே இருக்கலாம்.
அவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறேன்.

வாழ்க்கையில் எங்கேனும்
அடைபடும் வாய்ப்பு
சிறைப்படும் வாய்ப்பு கிடைத்தால்
விட்டுவிடாதே.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Magudeswaran's poetry on Big Boss show
Please Wait while comments are loading...