• search

சினிமா விமர்சனம்: டிக்..டிக்..டிக்..

By Bbc Tamil
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  தமிழில் விண்வெளியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் என்ற வாசகத்துடன் வந்திருக்கும் படம். 1963ல் எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்து வெளியான கலை அரசி படத்தில் சில காட்சிகள் விண்வெளியில் நடப்பதாக உண்டு. ஆனால், இந்தப் படத்தின் பெரும் பகுதி விண்வெளியில்தான் நடப்பதாக உள்ளது.

  டிக்..டிக்..டிக்..
  BBC
  டிக்..டிக்..டிக்..

  மிகப் பெரிய விண்கல் ஒன்று வங்கக் கடல் பகுதியில் விழும் என்றும் அதனால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் கடலில் மூழ்கும் என்று கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த விண்கல்லை விண்வெளியிலேயே அழிக்க 200 டன் வெடிமருந்துள்ள அணு ஆயுதம் தேவைப்படுகிறது. அம்மாதிரி ஒரு அணு ஆயுதத்தை விண்வெளியில் வைத்திருக்கிறது அண்டை நாடு ஒன்று.

  ஆகவே அதைத் திருடி, விண்கல்லை தாக்க முடிவுசெய்கிறார்கள். அதற்கு சில உள்ளூர் திருடர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள் (அணு ஆயுதத்தை விண்வெளியில் திருட லோக்கல் திருடனா என்று கேட்கக்கூடாது). இதற்கிடையில் அந்த அணு ஆயுதத்தை கடத்தி தன்னிடம் தர வேண்டுமென மர்ம குரல் ஒன்று கதாநாயகனுக்கு கட்டளையிடுகிறது. கதாநாயகன், அணு ஆயுதத்தை கடத்தினானா, விண்கல்லை அழித்தானா என்பது மீதிக் கதை.

  விண்வெளியிலிருந்து பூமிக்கு மிகப் பெரிய அழிவு ஏற்படும் சூழலில் அரசும் கதாநாயகனும் சேர்ந்து உலகைக் காப்பாற்றும் கதைகள் ஹாலிவுட்டில் பல வந்துவிட்டன. ஆனால், தமிழுக்கு இந்தக் கதை மிகவும் புதிது. ஆனால், அதற்காக விண்வெளி சாகஸக் கதைகளை இப்படி காமெடி ஆக்கியிருக்க வேண்டாம்.

     

  திரைப்படம்

  டிக்..டிக்..டிக்..

     

  நடிகர்கள்

  ஜெயம் ரவி, நிவேதிதா பெத்துராஜ், ரித்விகா, ஜெயப்பிரகாஷ், வின்சன்ட் அசோகன், அர்ஜுன், ரமேஷ்

     

  இசை

  டி. இமான்

     

  ஒளிப்பதிவு

  எஸ். வெங்கடேஷ்

   

  இயக்கம்

  சக்தி சவுந்தரராஜன்

  ஒரு விண்கல் இந்தியாவைத் தாக்க வரும்போது, அந்த விவகாரத்தை இஸ்ரோ கையாளாமல், இந்திய ராணுவம் கையில் எடுப்பது ஏன் என்பதே முதலில் புரியவில்லை. அதுபோக, அணு ஆயுதத்தை விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கும் ஆய்வு நிறுவனத்தில் இருந்து கைப்பற்ற ஆளே இல்லாமல், சென்னை ரிச்சி சாலையில் ஹேக்கர்களாக இருக்கும் இருவரையும் மேஜிக் செய்யும் கதாநாயகனையும் அழைத்து ஐந்து நாள் பயிற்சி கொடுத்து விண்வெளிக்கு அனுப்புகிறார்கள் என்பதெல்லாம் தலைசுற்றவைக்கும் சமாச்சாரம்.

  இது போதாதென்று, விண்வெளியில் சென்றுகொண்டிருக்கும் ராக்கெட்டில் எரிபொருள் தீர்ந்து நிலவில் விழுந்துவிடுகிறது. பிறகு அங்கிருந்து விமானம் புறப்படுவதுபோல ராக்கெட் புறப்பட்டு மற்றொரு விண்வெளி ஆய்வு மையத்தை அடைகிறது. பூமிக்கு மேலே மிதந்துகொண்டிருக்கும் விண்வெளி ஆய்வு மையத்தை அடையச் செல்லும்போது, வெகுதூரத்தில் இருக்கும் நிலவு எப்படி நடுவில் வந்தது என்ற கேள்விக்கெல்லாம் பதிலே இல்லை.

  டிக்..டிக்..டிக்..
  BBC
  டிக்..டிக்..டிக்..

  விண்வெளி அறிவியலுக்கும் இந்தப் படத்தில் காட்டப்படும் விண்வெளி சம்பவங்களுக்கும் துளிகூட சம்பந்தம் கிடையாது. அதுவும் படத்தின் இறுதிக் காட்சியில், 200 டன் எடையுள்ள அணு ஆயுதத்தை தண்ணீர் குடம் தூக்குவதைப் போல ஜெயம் ரவி தூக்கிக்கொண்டு திரிவதெல்லாம், பயங்கரமான காட்சி. தவிர விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கும் ஆய்வு நிறுவனத்தில் அடியாட்களை வைத்திருப்பது, அங்குள்ள கம்யூட்டர்களை கதாநாயகனின் நண்பர்கள், சர்வசாதாரணமாக ஹேக் செய்வது என திகைக்க வைக்கிறது படம்.

  கதாநாயகனாக வரும் ஜெயம் ரவி படம் நெடுக, சோகம் ததும்ப முறைத்துக் கொண்டேயிருக்கிறார். 'என்ன செய்யறது இப்போ?' என்ற பாணி முகம் நிவேதிதா பெத்து ராஜுக்கு. ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன் என பல நல்ல நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள்.

  கலை இயக்குனரின் பணியும், கிராஃபிக்ஸ் காட்சிகளும் பாராட்டத்தக்கவை. ஆனால், திரைக்கதையில் சொதப்பியிருப்பதால், ஒரு கட்டத்தில்கூட படத்தோடு சீரியஸாக ஒன்ற முடியவில்லை.

  ஆனால், காதல், டூயட், தனியான காமெடி டிராக் போன்றவை இல்லாததால் படம் நேர்கோட்டில் செல்கிறது என்பது ஒரு ஆறுதல். 'சினிமாவுக்கு வந்துவிட்டோம். என்ன சொன்னாலும் நம்புவோம்' என்ற எண்ணத்தோடு ஒன்றினால், ஒரு வேளை ரசிக்க முடியும்.

  பிற செய்திகள்:


  BBC Tamil
  English summary
  அணு ஆயுதத்தை விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கும் ஆய்வு நிறுவனத்தில் இருந்து கைப்பற்ற ஆளே இல்லாமல், சென்னை ரிச்சி சாலையில் ஹேக்கர்களாக இருக்கும் இருவரையும் மேஜிக் செய்யும் கதாநாயகனையும் அழைத்து ஐந்து நாள் பயிற்சி கொடுத்து விண்வெளிக்கு அனுப்புகிறார்கள் என்பதெல்லாம் தலைசுற்றவைக்கும் சமாச்சாரம்.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற