• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைச் செம்புச் சடங்கும் மூதேவி வழிபாடும்

By Super Admin
|

தமிழ்நாடு போன்ற வறண்ட வெப்ப மண்டல நாடுகளில் உள்ள மக்கள், குறிப்பாக உழவர்கள் மழை வேண்டிப் பல சடங்குகளைச் செய்கின்றனர். மழைச் செம்புஎடுத்தல், மழைக்கஞ்சி காய்ச்சுதல், கொடும்பாவி கட்டி எரித்தல், ஒப்பாரி வைத்தல், கழுதைகளுக்கு மணம் செய்து வைத்தல் போன்றன அவற்றுள் சில.

பொதுவாக, மழைச்சடங்குகள் என்பன மந்திரச் சடங்குகள் (Magical Rituals) ஆகும். இங்கே அது ஒத்த மந்திரச் சடங்காக (Imitative Magic)அல்லது பாவனை மந்திரச் சடங்காக நிகழ்த்திக் காட்டப்படுகிறது. ஒத்தது ஒத்ததை உருவாக்கும் என்பதே இம்மந்திரச் சடங்கின்அடிப்படையாகும். அதாவது, ஏற்பட வேண்டிய விளைவும் அதனை அடையச் செய்யும் செயலும் ஒத்திருக்கும். (1)

இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது நெல்லை மாவட்டம் (சங்கரன் கோவில்- புளியங்குடி முதன்மைச் சாலையிலுள்ள) முள்ளிக்குளம்எனும் சிற்றூரில் நடக்கும் மழைச்செம்புச் சடங்கையே. நெல்லை மாவட்டத்தின் வறண்ட பகுதிகளுள் சங்கரன்கோவில் பகுதியும் ஒன்றுஎன்பது நினைவில் கொள்ளத்தக்கது. மழைக்குரிய காலமாகிய ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை பெய்யாத போது இச்சடங்குநிகழ்த்தப்படுகின்றது. ஏதாவது ஒரு செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் மாலை வேளையில் இது நடைபெறுகின்றது. இச்சடங்கைமுன்னின்று செய்பவர்கள் பெண்களே.

பூப்பெய்தாத மூன்று சிறுமிகள் செம்புகளில் தண்ணீர் நிரப்பி அவற்றை எருக்கலங்குழையால் மூடி எடுத்து வருவர். அச்செம்புகளுக்குமுறையே மழை (அ) குளச்செம்பு, வெள்ளாமைச்செம்பு, பஞ்சச் செம்பு என்று பெயர் கொடுப்பர். பின்னர் அவற்றை ஊர்ப்பொதுஇடத்தில் வைப்பர். அவற்றின் அருகே நிறைநாழிக்கு மாற்றாக முக்கால்வாசி நெல் நிரப்பிய நாழி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அதில்பெண்கள் தங்கள் தலையில் இருந்து ஒரு பேனை எடுத்துவிடுவர். பின்னர் நாழியை முழுவதும் நெல்லால் நிரப்புவர். அதன்மீது எருத்துண்டு,மஞ்சள் துண்டு, கரித்துண்டு மூன்றையும் வைப்பர். பின்னர் செம்புகளில் உள்ள தண்ணீரில் விளக்கெண்ணையைச் சொட்டுச் சொட்டாகமூன்று முறை விடுவர். அப்படி ஒவ்வொரு செம்பிலும் விடும்போது, மழை! மழை! (அ) குளம்! குளம்! என்று ஒரு சொட்டும், வெள்ளாமை!வெள்ளாமை! என்று ஒரு சொட்டும், பஞ்சம், பஞ்சம் என்று ஒரு சொட்டும் சொல்லிக்கொண்டே விடுவர். பின்னர் செம்புகளை மீண்டும்எருக்கலங்குழையால் மூடிவிடுவர்.

பிறகு 7 (அ) 9 வீடுகளில் பழஞ்சோறு வாங்கி அதை அவ்வூரைச் சேர்ந்த வண்ணார் சமூகப் பெண்ணிடம் (வண்ணாத்தியிடம்) கொடுப்பர்.அதன் பின்பு அந்தப் பெண்ணை எருக்கலங்குச்சி ஒன்றினால் அடித்து விரட்டுவது போன்று பாவனை செய்வர். அந்தப் பெண் மழை! மழை!என்று சத்தமிட்டபடியே ஊரின் வடக்குத் திசையை நோக்கி ஓடிப் போய்விடுவார். (மாறிவரும் சமூகச் சூழ்நிலைகளையொட்டிஇவ்வழக்கத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும், இவ்வழக்கம் அண்மைக் காலங்களில் மாறிவருவதாகவும், மழைச் செம்புச்சடங்கை நடத்தும் பெண்களில் ஒருவர் குறிப்பிட்டார்.)

பின்னர் பஞ்சம் என்ற பெயர் கொடுக்கப்பட்ட செம்பை ஊருக்கு வெளியே வடக்கில் உள்ள ஒரு முச்சந்தியில் கொண்டு விட்டுவிட்டுத்திரும்பிப் பாராமல் வந்துவிடுவர். மற்ற இரண்டு செம்புகளில் உள்ள நீரையும் ஊருக்கு நடுவில் அல்லது கிழக்கு, தெற்குத் திசைகளில்விடுவர். மேற்குத் திசையில் விடுவதில்லை. ஊருக்கு மேற்கே மழை நீர் கொண்டுவரும் மேற்கு மலைத்தொடர் இருப்பது குறிக்கத்தக்கது.

பின்னர் சடங்கு நடைபெறும் ஊர்ப் பொது இடத்தில் பொங்கல் வைத்து அனைவரும் பகிர்ந்துண்ணுவர். இச்சடங்கில் நெல்லில் விடப்பட்டபேன் ஊர்ந்து எருவின் மீது ஏறினால் மிகுந்த செழிப்பு, மஞ்சளின் மீது ஏறினால் விளைச்சல் உறுதி, கரியின் மீது ஏறினால் நிலமும்கரியாகிவிடும் என்பதும், ஒவ்வொரு செம்பிலும் உள்ள பஞ்சச் சொட்டு மற்ற இரண்டுடனும் சேராது தனித்து இருந்தால் மழை பெய்யும்.சேர்ந்து விட்டால் மழை பெய்யாது என்பதும் இச்சடங்கின் வழி பெறப்படும் நம்பிக்கை ஆகும். (2)

இங்கே மழைவேண்டிச் செய்யப்படும் இத்தகைய நிறைநாழிப் பேன் சடங்கு தென் மாவட்டங்களில் வேறு சில இடங்களில் பெண்வீட்டாரால் மாப்பிள்ளையைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படுகிறது எனத் தெரிகிறது. இச்சடங்கில், மழைச் செம்புச் சடங்கில்இடம்பெறும் எருத்துண்டுக்குப் பதிலாக தங்க நகை வைக்கப்படும். நெல்லில் விடப்படும் மணப்பெண்ணின் தலைப்பேன் மஞ்சளில்ஏறினால் அந்தச் சம்பந்தம் மிகச் சிறந்தது. தங்க நகையில் ஏறினால் பெண்ணைக் கொடுக்கலாம். கரித்துண்டில் ஏறினால் மண உறவுநடைபெறாது என்பது இச்சடங்கின் மூலம் பெறப்படும் நம்பிக்கையாகும். (3)

மழைச்சடங்கு போன்றதொரு நாட்டார் சடங்கை, சமூக இயல் நோக்கில் ஆராயும்போது, அதில் பங்குபெறும் சாதிகளையே முதலில்கணக்கில் கொள்ள வேண்டும். அவ்வகையில் முள்ளிக்குளம் சிற்றூரில் நடைபெறும் சடங்கில் இரண்டு சாதியினர் பங்கு பெறுகின்றனர்.முதலாமவர், அச்சடங்கை நடத்துகின்ற கோனார் சாதியினர். இவர்களே அந்த ஊரில் ஆதிக்க சாதியினராகவும் நிலவுடமைச்சாதியினராகவும் உள்ளனர். இரண்டாமவர், அடித்தட்டு மற்றும் சேவைச்சாதியினரான வண்ணார் சாதியினர். சமூக இயல் ஆய்வுகளில்அடித்தட்டு மக்களின் சமூக வரலாற்றுப் பாத்திரத்தை முதன்மைப்படுத்தி ஆராயும் போக்கு தற்போது வளர்ந்து வருகின்றது. இவ்வகையில்இச்சடங்கில் இடம் பெறும் வண்ணார் சாதியினரை, அவர்கள் இச்சடங்கில் பெறும் இடத்தின் காரணமாக, அச்சாதியினருடைய வழிபாடுமற்றும் தொல்சமயச் சடங்கியல் தொடர்புகள் குறித்து கவனமாக ஆராய்வது இங்கே அவசியமாகிறது.

வண்ணார் சாதி போன்ற அடித்தட்டு மற்றும் அவைதீகச் சாதிகளிடையே இன்றுள்ள சூழலில் எல்லாத் தெய்வங்களையும் வழிபடும் வழக்கம்உள்ளது. எனினும் சாதிய நிலையில் அவற்றோடு குறிப்பான உறவுடையவை எனக் கற்பிக்கப்பட்ட சில நாட்டார் தெய்வங்களை அல்லதுஅவைதீகத் தெய்வங்களை நம்மால் பட்டியலிட இயலும். இதை, பறையர்- காத்தவராயன், சக்கிலியர் - மதுரை வீரன், கொல்லாசாரிகள்-உலைக்கூடத்தான் (முள்ளிக்குளம்), வேளாளர்- கருப்பசாமி, நாடார்கள்- பத்திரகாளியம்மன் என்கிறவாறு நாம் காணலாம். தெளிவானவரையறை இல்லாத காரணத்தால் வண்ணார் சாதியும் அதற்குரிய தெய்வமும் இப்பட்டியலில் இடம் பெறவில்லை.

ஆனால் நாம் ஏலவே விவரித்த மழைச் செம்புச் சடங்கும், அதில் வண்ணார் சாதி பெறும் இடமும், அச்சாதிக்குரியதாகக் கற்பிக்கப்பட்டதெய்வம் இன்னது என்பதைக் குறியீட்டு மற்றும் சடங்கு அடிப்படையில் வரையறை செய்ய உதவுகின்றன. இக்குறியீடுகளையும்,சடங்குகளையும் ஆராய்வதற்கு ஏதுவாக இச்சடங்கோடு தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட அவைதீகப் பெண் தெய்வத்தைப்பற்றி அறிவதுஅவசியமாகிறது. அவ்வகையில் மூத்ததேவி எனப்படும் மூதேவி பற்றிச் சில செய்திகளை ஒருங்கு திரட்டிக் காணவேண்டும்.

மூத்தவள் என்று பொருள்படும் பெயர் கொண்ட மூதேவி, இனக்குழு காலத்திய வளமை மற்றும் தாய்த்தெய்வம் ஆகும். வடமொழியில்ஜேஷ்டா என இவளை அழைப்பர். ஜேஷ்டா என்றால் மூத்த என்று பொருள். தமிழ்நாட்டில் குறிப்பாக வடதமிழ்நாட்டில் பல்லவர்காலத்திய மூதேவிச் சிற்பங்கள் தற்போது பெருமளவில் கண்டறியப்பட்டுள்ளன. 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் படைப்பானகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள ஐம்பத்தெட்டுச் சுற்றுக் கோவில்களில், ஜேஷ்டாதேவிக்கு மூன்று கோவில்கள் உள்ளன.நெல்லை மாவட்டத்தில் ஆய்வாளருக்குத் தெரிந்து ஊர்க்காட்டுச் சிற்றூரில் இத்தெய்வத்துக்குச் சிலை இருக்கிறது. இதனைக் கண்டறிந்ததொல்லியல் அறிஞர் மா.செந்தில் செல்வக்குமரன், உருவ இயல் அமைதி கொண்டு இதன் காலம் கி.பி.10ம் நூற்றாண்டு என வரையறைசெய்துள்ளார்.

பெருத்த வயிறும், பருத்துச்சரிந்து காணப்படும் மார்பகங்களும் இத்தெய்வச்சிலையின் பொது இயல்பாகும். இது இவள் வளமை காட்டும்தாய்த் தெய்வம் என்பதை உறுதிப்படுத்தும். அமர்ந்த கோலத்தில் வலது கை அபய முத்திரையுடனும், இடது கை தொடை மீது தொடை மீதுபதிந்தும் காணப்படும். சில இடங்களில் வலது கையில் நீலோற்பல மலரும், இடது கை இருக்கை மீதும் காணப்படும். இவள், கரியநிறமுடையவள், என விஷ்ணு தர்மோத்திர புராணம் குறிப்பிடுகிறது. மாட்டுமுகம் கொண்டு, வலது கையில் தண்டமும், இடது கையில்கயிறும் ஏந்தியவாறு மூதேவியின் வலப்புறம் காணப்படும் ஒரு ஆண் உருவம் இவளது மகனாகக் கருதப்படுகிறது. மாந்திகன் என இவன்அழைக்கப்படுகிறான். இவளின் இடப்புறம் காணப்படும் பெண் உருவம் இவளது மகள் எனக் கருதப்படுகிறது. இவள் மாந்தி எனஅழைக்கப்படுகிறாள். மூதேவியின் கொடி காக்கைக் கொடி, வாகனம் கழுதை, கைக்கருவி விளக்குமாறு. மூதேவியின் தோற்றம் பற்றிவிஷ்ணு தர்மோத்திர புராணம் குறிப்பிடும் போது,

பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடையும்போது அதிலிருந்து பல பொருட்களும், உயிர்களும் தோன்றின. அவற்றுள் லட்சுமிதேவியும் தோன்றினாள். அவளுக்கு முன்பு தோன்றியவள்தான் மூதேவி என்கிறது. லிங்க புராணம் இவள் தோற்றம் பற்றிக் கூறும்போது,பாற்கடலில் காலகூடம் எனும் உலகையே அழிக்கும் நஞ்சு தோன்றியது அதனைத் தொடர்ந்து மூதேவி தோன்றினாள் என்கிறது. மேலும்,(வேத மரபுக்கு எதிரான) பவுத்தர்கள் வாழும் இடங்களும், வைதீகமல்லாத சடங்குகள் நடைபெறும் இடங்களும் மூதேவி விரும்பி வாழும்இடங்கள் என்கிறது. (4 )

இவற்றோடு அரசமரத்தின் நிழல், விளாமரத்தின் அடி, விளக்கின் நிழல், மனிதர் நிழல், இருள், சாரமில்லாத அந்தணன் நிழல், உண்ட நீரின்எச்சில், ஆடை துவைத்த நீர், விளக்குமாற்றின் புழுதி, வெந்த சாம்பல், வேகாத கரிப்புழுதி, ஆட்டுத்தூசு ஆகியனவும் மூதேவிவாழிடங்களில் சிலவாக குறிப்பிடப்படுகின்றன. (5 )

மேலும், அவள் தனது கணவனான துசாக முனிவரால் கைவிடப்பட்டவளாகவும், உணவு, உறைவிடத்துக்காக அலைந்து திரிபவள் எனவும்,விஷ்ணுவின் கருணையைப் பெற்ற பின் விஷ்ணு பக்தர்களாலும், பெண்களாலும் உணவு படைக்கப்படுபவள் எனவும் லிங்க புராணம்விவரிக்கிறது. (6)

தமிழ் நிகண்டுகள் இவளைத் தவ்வை, காலடி, மூதேவி, காக்கைக் கொடியாள், கஸிதை வாகனத்தாள், முகடி, ஏகவேணி(ஒற்றைச்சடையாள்)என பல பெயர்களால் சுட்டுகின்றன. லிங்கபுராணம் இவளை லட்சுமி அல்லாதவள் என்று பொருள்பட அலெட்சுமி என்றும் அழைக்கிறது.தமிழ் நிகண்டுகள் இவளைத் திருவின்முன் செழுங்கடற் பிறந்தாள், திருவினுக்கு மூத்தாள் என்றும் அழைக்கின்றன. (7 )

இதே போன்று மூதேவியை லட்சுமிக்கு எதிர்வாகவும், சோம்பலின் வடிவாகவுமே வள்ளுவரும் பார்க்கிறார்.

மடி உளாள் மாமுகடி என்ப மடி இலான்

தாள் உளாள் தாமரையினாள் (அதி.62 ஆள்வினையுடைமை)

பார்ப்பனர்கள் துஷ்டர்களாக இருந்தாலும் வணங்கத்தக்கவர்களே, மாறாக அடித்தள மக்களான சூத்திரர்கள் நல்லவர்களாக இருந்தாலும்கீழ் மக்களே என்பதை ஓர் எடுத்துக்காட்டு மூலம் கற்பிக்க முயலும் பராசர ஸ்மிருதி,

பசுவொன்று துஷ்டத்தனம் பண்ணிக்கொண்டிருக்கிறது. குட்டிபோட்ட கழுதையொன்று சாதுவாகவும் வீட்டிலிருக்கிறது. இவ்விருமிருகங்களில் அறிஞன் பசுவை விட்டுவிட்டு கழுதையைக் கறந்து பாலைக் கிரகிப்பானா? என்று கேட்கிறது. (8)

இங்கே மேட்டிமையின் குறியீடாகக் காட்டப்படும் பசுவுக்கு எதிராக அடித்தள மக்களின் சார்பில் குட்டி போட்ட பெண் கழுதைகாட்டப்படுகிறது. மூதேவியின் வாகனம் கழுதை என்பதே இதற்குக் காரணம் ஆகும்.

மேலும் போரில் தோற்ற பகை அரசனை இழிவுபடுத்த வேண்டி அவனது நாட்டைக் கழுதை ஏர் பூட்டி உழுத இலக்கியச் செய்திகளும்,குற்றம் செய்தவர்களை இழிவுபடுத்தித் தண்டிப்பதற்காக அவர்களைக் கஸிதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து வருவது அண்மைக்காலம்வரை வழக்கமாக இருந்தது என்பதும், அத்தகைய தண்டனை பெற்றவர்கள் ஊர்ச்சபையின் வாரியப் பெருமக்களாக இருக்கத்தகுதியற்றவர்கள் என்று கூறும் உத்திரமேரூர் கல்வெட்டுச் செய்தியும் இங்கு நினைவு கூரத்தக்கன. (9)

தமிழ் நிகண்டுகள் மூதேவியை கேட்டை, கெடலணங்கு, கேடி என அழைப்பதால் துன்பத்துக்கும், துரதிருஷ்டத்திற்கும், சோம்பலுக்கும், தீட்டுகண்ணேறு ஆகியவற்றுக்கும், அழுக்கிற்கும், அழகின்மைக்கும் குறியீடாக இன்றைக்கு ஆக்கப்பட்டிருக்கும் இத்தெய்வம் ஒரு காலத்தில்மக்களால் பரவலாக வழிபடப் பெற்றதாகும். பொதுவாக வழிபாட்டுச் சடங்குகளை இருவிதமாகப் பகுக்கின்றனர் மானுடவியல் அறிஞர்கள்.

ஒன்று வேண்டுதல் வழிபாடு மற்றொன்று விலக்குதல் வழிபாடு. திருமகளை வழிபடும் மக்களே மூதேவியையும் வழிபட்டது எதிர்மறைவழிபாட்டு முறையாகும் (விலக்குதல் வழிபாடு). மூதேவியே எங்களுக்கு தீமை, சோம்பல், வறுமை, நோய் இவைகளை வழங்காதே என்றுவேண்டிக் கொள்வதற்கே இவ்வழிபாட்டு முறை அமைந்ததாகும். (10 )

மேலும், சிறந்த கடவுளான திருமால் இருக்கையில் மூதேவியை வழிபடும் மக்களின் செய்கையைத் தொண்டரடிப்பொடி ஆழ்வார் கேலிசெய்வதிலிருந்தும்,

சேட்டை தன் மடியகத்துச்

செல்வம் பார்த்திருக்கின்றீரே!(தொண்டரடிப்பொடி திருமாலை-881)

இரண்டாம் பக்கம்...

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

தென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2014
டாக்டர் ஜெ. ஜெயவர்த்தன் அஇஅதிமுக வென்றவர் 4,38,404 41% 1,36,625
டி.கெ.எஸ். இளங்கோவன் திமுக தோற்றவர் 3,01,779 28% 0
2009
ராஜேந்திரன் சி அஇஅதிமுக வென்றவர் 3,08,567 42% 32,935
பாரதி ஆர்.எஸ். திமுக தோற்றவர் 2,75,632 38% 0

 
 
 

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more