Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தக் காலத்துப் பொண்ணுகளுக்கு கல்யாணம், பிள்ளைகுட்டி பிடிக்கவில்லையா?- அ. குமரேசன்

Subscribe to Oneindia Tamil

பெண்கள் மீதான தாக்குதல்களை, அதுவும் நவீன காலத்துப் பெண்கள் மீதான தாக்குதல்களை ஏதோ ஒரு சமுதாயக் கடமையை நிறைவேற்றுவது போன்ற எண்ணத்துடன் சிலர் செய்துகொண்டிருக்கிறார்கள். கலாச்சார மெய்க்காவலர்களாகத் தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்டு அவர்கள் தொடுக்கும் தாக்குதல்களில் ஒன்றுதான், இந்தக் காலத்துப் பெண்கள் மேற்கத்தியக் கலாச்சாரக் கவர்ச்சியால் குடும்பப் பொறுப்புகளை ஏற்காமல் சுதந்திரமாகத் திரிய விரும்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டு.

அந்தக் காலத்திலேயே, அன்றைய நவீனப் பெண்கள் மீதும் வீசப்பட்ட இந்தச் சாட்டையை இப்போது இந்தக் காலத்து நவீனப் பெண்களுக்கு எதிராகச் சுழற்றுகிறவர்களோடு சேர்ந்திருக்கிறார் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே. சுதாகர். அக்டோபர் 10 உலக மனநல நாள் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, பெங்களூருவில் தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனத்தின் நிகழ்வில் உரையாற்றிய அவர், நவீனப் பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமல் தனித்திருக்கவே என்று கூறியிருக்கிறார். "இதைச்சொல்வதற்கு வருந்துகிறேன். இந்தியாவில் ஏராளமான நவீனப் பெண்கள் ஒற்றையாளாய் இருக்கவே விரும்புகிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் கூட பிள்ளை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. வாடகைத்தாய் ஏற்பாடுகளைச் செய்துகொள்கிறார்கள். நமது சிந்தனையில் மிகவும் குறிப்பிடத்தக்கதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது நல்லதல்ல," என்று சொல்லியிருக்கிறார் அமைச்சர். அத்துடன், "துரதிர்ஷ்டவசமாக நாம் மேற்கத்திய வழியில் சென்றுகொண்டிருக்கிறோம்..." என்ற காரணத்தையும் தெரிவித்திருக்கிறார்.

சுதாகர் என்ற தனி மனிதர் இவ்வாறு பேசியிருந்தால் பொருட்படுத்த வேண்டியதில்லை. பாஜக தலைவர்களில் ஒருவராக இவ்வாறு பேசியிருந்தால் அவர்களுடைய வழக்கமான பேச்சுதான் என்று கடந்துவிடலாம். ஆனால் ஒரு மாநில அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக, அரசு நிறுவனத்தின் நிகழ்வில் இவ்வாறு பேசுகிறபோது, இது அவருடைய சொந்தக் கருத்தா அல்லது மாநில அரசின் அதிகாரப்பூர்வமான கருத்தா என்ற கேள்வி எழுகிறது.

பிள்ளை பெறுவதற்கும் அப்பால்

அமைச்சரின் பேச்சை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சௌம்யா, "நடந்தது மனநலப் பயிலரங்கம். அமைச்சர் அதிலே கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து, அந்த நிகழ்வில் குறிப்பாகப் பெண்கள் பற்றிப் பேசியிருப்பது பெண்களைச் சிறுமைப்படுத்துகிற கண்ணோட்டத்திலிருந்தே வந்திருக்கிறது. அவர் ஓர் இளைஞர், ஒரு மருத்துவர், சுகாதார அமைச்சர். அப்படிப்பட்டவரிடமிருந்து இத்தகைய கருத்து வருவது சங்கடத்தைத் தருகிறது," என்று கூறியிருக்கிறார். குழந்தைப் பேறு இல்லாததால் ஏற்படும் மனநலச் சிக்கல்களுக்கு உள்ளாகிற பெண்களுக்கு எதிரான பாலின வன்மத்தோடு கூடிய தாக்குதல்தான் இது என்றும் சௌம்யா கூறியிருக்கிறார்.

அகில இந்திய முற்போக்குப் பெண்கள் சங்கத்தின் கர்நாடக மாநிலச் செயலாளர் நிர்மலா, "பெண் ஒரு தாய், ஒரு மனைவி, குழந்தை பெற்றுத் தருகிறவள் என்ற பங்களிப்பைத்தான் செய்துகொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற அமைச்சரின் கருத்துகள் அதிர்ச்சியளிக்கின்றன. பெண்களாக நாங்கள் பிள்ளை பெற்றுக்கொள்கிறோமா இல்லையா, திருமணம் செய்துகொள்கிறோமா இல்லையா என்று எங்களுடைய சொந்த உடல் சார்ந்து நாங்கள் சொந்தமாக முடிவு செய்வது தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகிறது. ஆனால் பிள்ளை பெறுவதற்கும் அப்பால் பெண்களுக்கான வாழ்க்கை இருக்கிறது," என்று விமர்சித்திருக்கிறார். பெண்களின் பாலியல் சுகாதாரத்திற்காகவும், மகப் பேறு சுகாதாரத்திற்காகவும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டிய அமைச்சர் இப்படிப் பேசுவது கண்டனத்திற்கு உரியது என்றும் நிர்மலா கூறியிருக்கிறார்.

மனநல நாள் கருத்தரங்கத்தை நடத்திய நிறுவனத்தைச் சேர்ந்தோரும் அமைச்சரின் பேச்சுக்குத் தங்களின் ஏற்பின்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். "இது ஒரு மோசமான கருத்து," என்று ஒரு பேராசிரியர் விமர்சிதித்திருக்கிறார். ஒரு கல்வி நிறுவனத்தின் உலக மனநல நாள் நிகழ்வில் இப்படிப் பேசியிருப்பதை எப்படித் தள்ளுபடி செய்வது என்று கேட்டிருக்கிறார் ஒரு ஆய்வாளர்.

இந்தக் காலத்துப் பெண்கள் இப்படி வாழத்தான் விரும்புகிறார்கள் என்று ஏதாவது ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறதா? அரசாங்கத்திடம், குறைந்தது கர்நாடாக மாநில அரசாங்கத்திடம், சுதாகரின் அமைச்சகத்திடம் இதுதொடர்பான புள்ளிவிவர அறிக்கை இருக்கிறதா? அப்படியெல்லாம் இருந்தாலாவது அவற்றை வாதத்திற்கான அடிப்படையாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் அப்படிய ஆய்வறிக்கை எதையும் அவர் சுட்டிக்காட்டவில்லை. மாறாக, பெண்ணுரிமை இயக்கங்கள் சுட்டிக்காட்டுவது போல, பெண் என்றால் மனைவியாகவும் தாயாகவும்தான் இருக்க வேண்டுமென்ற கலாச்சாரக் கட்டளையையே அவரும் படியெடுத்துப் பிரதிபலித்திருக்கிறார். ஒரு பெண் பூப்புனித நீராடலில் முழுகுவதில் தொடங்குகிற பெண்மையின் பயணம் "முழுமையடைவது" (?) அவள் தாயாகிறபோதுதான் என்று காலங்காலமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது.

Article on Girls and Marriage

அதுதான் பெண்ணின் பெருமை எனப் புனிதப்படுத்தப்பட்டதன் விளைவு - இயற்கையான காரணங்களால் (ஆணின் உடல்சார்ந்த குறைபாடும் முக்கியமான இயற்கைக் காரணங்களில் ஒன்று) ஒரு பெண் கருவுறவில்லை என்றால் அவளுடைய மற்ற எல்லாத் தகுதிகளும் புறக்கணிக்கப்படுகின்றன. மருத்துவ அறிவியல் சிகிச்சைக்கு அப்பால் கருவுறச் செய்வதற்கான பூசைகளும் சடங்குகளும் நேர்த்திக்கடன்களுமாய் பெண் அலைக்கழிக்கப்படுகிறாள். வம்சத்தின் வேர்த்தொடர்ச்சியையே அவள் அறுத்துவிட்டாளென்று பட்டயம் மாட்டிவிடப்பட்டு ஆணின் இன்னோர் இணைத்தேடல் நியாயப்படுத்தப்படுகிறது. ஆண் அவ்வாறு கூடுதல் இணையைக் கூட்டிக்கொள்வது அவனது கட்டாயச்சூழல் என்றும், பெண் அவ்வாறு தேடிக்கொள்வது அவளது கள்ளக்காமம் என்றும் சித்தரிக்கப்படுகிறது. கள்ளக்காதல் செய்திகளிலெல்லாம் ஆகப்பெரும்பாலும் எரித்துச் சாம்பலாக்கப்படுவது அந்தப் பெண்களின் உண்மைக் கதைகள்தான்.

மாற்றத்தை நாடும் மனங்கள்

இயற்கையான நிகழ்வாகிய தாய்மை பற்றிய செயற்கையான புனைவுகளால் அயர்ச்சியடையும் நவீனப் பெண்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நவீனப் பெண்கள் என்றால் தற்போதைய நூற்றாண்டில், தொழில்நுட்பக் கருவிகளைக் கையாளத் தெரிந்த பெண்களென்று பொருளாகாது. பெண்ணின் இயல்பான சுயம், தேர்வுச் சுதந்திரம், சம உரிமை உள்ளிட்டவற்றில் புதுமைப்பெண்ணாகச் சிந்திக்கிற பெண்கள்தான் நவீனர்கள். இதிகாசத்தில் புகுந்து பார்த்தால் இந்த நவீனர்கள் பாஞ்சாலிகளுக்கும் கைகேயிகளுக்கும் உள்ளே வாழ்ந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. சாவித்திரிபாய், கேப்டன் லட்சுமி உள்ளிட்ட பெண்கள் மட்டுமல்லாமல் பாரதி பெரியார் அம்பேத்கர் போன்ற ஆண்களும் அந்த நவீனப் பெண்கள் கையூன்றி நிற்பதற்குத் தோள் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த வரலாறுகளை அறிந்துகொண்டால், அமைச்சரின் பேச்சுக்கு ஆதாரமாக ஆய்வறிக்கை ஏதாவது இருக்கிறதா என்ற கேள்வியே தேவையில்லை எனப் புரிந்துவிடும். அந்த வரலாறுகளை அறியாமலே கூட வாழ்க்கை அனுபவத்தில் சமத்துவ மரியாதைகளோடு நவீனப் பெண்களுக்கு ஆதரவாகக் கைகொடுக்கத் தோன்றும்.

பெண்களின் குழந்தைத் தேர்வு விருப்பம் தொடர்பாக வேறு சில ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 2017ல் அமெரிக்க அரசின் வேளாண் துறை (யுஸ்டீஏ) வெளியிட்ட, ஊட்டச் சத்து உணவு உள்ளிட்ட பொருளாதாரம் தொடர்பான அறிக்கையில், குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கிற அல்லது தள்ளிப்போடுகிற பெண்கள் பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள் என்று தெரிவிக்கிறது. குறிப்பாக உணவு, மருந்து உள்ளிட்ட செலவுகளிலிருந்து பள்ளிக் கல்வி முதல் மேற்படிப்பு வரையிலான செலவுகள் வரையில் அவர்களை அச்சுறுத்துகின்றன. ஸ்வீடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு, குடும்பத் தேவைகளுக்காக வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலோர், மகப்பேறு விடுமுறையில் சென்றால் மறுபடி அதே வேலை, அதே ஊதியத்தில் கிடைக்கும் என்ற உறுதி இல்லாததால், வேலையையும் குழந்தை மீதான ஆசையையும் விடமுடியாதவர்களாகத் தவிக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது. உடல் சார்ந்த அறிவியல் கல்வி பெண்களுக்கு சரியாகப் போய்ச்சேரவில்லை, ஆகவே தேவையற்ற அச்சங்களில் சிக்கியவர்களாகப் பல பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கிறார்கள் என்று பிரிட்டனில் 2002ல் நடத்தப்பட்ட தேசிய பிறப்பு மற்றும் தாய்மை ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் தேடினால், நீங்காத கசப்புடன் முறிந்துபோன மண உறவுகளைப் பார்த்தது, அத்தகைய கசப்பனுபவங்கள் தங்களுக்கே கூட நேர்ந்தது என பெண்களின் இந்த மனநிலை தொடர்பான வேறு பல ஆய்வுத் தகவல்களும் கிடைக்கக்கூடும்.

கதவிடுக்கு வழியாக

இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக மறுக்கப்பட்டு வந்த கல்வி சட்டப்பூர்வமாக உறுதிப்பட்டுவிட்ட நிலையில், தொழில், முதலீடு, வணிகம், அறிவியல், கலை என அனைத்துத் துறைகளிலும் நுழைகிற வாய்ப்பு பரவலாகியிருக்கும் பின்னணியில், ஆண்களுக்குச் சமமாக முடிவெடுக்கிற இடத்திற்கு இந்த அளவுக்கேனும் வந்திருக்கிற பெண்கள், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுயமாகத் தீர்வு காண முயல்கிறார்கள். இந்த மாற்றம் ஒரு சிறிய அதிகார வலிமையை அவர்களுக்கு வழங்கியுள்ளது. திருமணம் செய்துகொள்வதா வேண்டாமா, பிள்ளை பெற்றுக்கொள்வதா வேண்டாமா என்ற பிரச்சினைகளையும் முன்போலப் பெற்றோர்களும் பெரியார்களும் பார்த்துச் செய்தால் போதுமென்று விட்டுவிடாமல், தாங்களே கையாள விரும்புகிறார்கள். இத்தகைய வாய்ப்புக் கதவு இன்னமும் எல்லாப் பெண்களுக்குமாக முழுசாகத் திறக்கப்பட்டுவிடவில்லை. ஆயினும், திறந்த கதவுகளின் இடுக்குகள் வழியே நுழைந்து முன்னேறிய பெண்கள், கதவுக்கு அந்தப் பக்கம் முட்டி மோதிக்கொண்டிருக்கிற மற்ற பெண்களுக்கு ஊக்கமளித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண்ணுரிமையில் மேலும் கூடுதலாக ஓரடி முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த ஓரடி முன்னேற்றத்தையும் சகித்துக்கொள்ள முடியாத ஆணாதிக்கப் புத்திதான் மறுபடி மறுபடி பெண்களுக்குத் தாய்மைச் சிறப்பின் மகத்துவம் பற்றிப் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது. அந்த வகுப்புகளை நடத்துவதில் பெண்களே கூட ஈடுபடுத்தப்படுவார்கள். பெண் சுதந்திரத்தைப் பெண்ணைக் கொண்டே ஒடுக்குவது ஆணாதிக்க உத்தியல்லவா? பெண் படிக்கப் போனால், பெண் வேலைக்குப் போனால், ஆணைப் போலவே எல்லாத் தொழிலையும் செய்தால் - சுருக்கமாகச் சொல்வதனால் பெண் நவீனமடை,ந்தால் - பிள்ளை பெற்றுக்கொள்வதை நிறுத்திக்கொள்வார்கள் என்று பன்னெடுங்காலமாகவே எச்சரிக்கப்பட்டு வந்திருக்கிறது.அந்த எச்சரிக்கைகள் உண்மையாகியிருந்தால் நமது பூமி இன்றைக்கு 785 கோடி மனிதர்களைச் சீராட்டிக்கொண்டிருக்காது.

இங்கிலாந்தின் டீசைட் வட்டாரத்தில் நூந்த்ரோப் நகரைச் சேர்ந்த ஸ்டெஃப்னீ டெய்லர் என்ற பெண், மகப்பேறு தொடர்பான இணையத்தள ஏற்பாடுகளின் வழியாக ஒரு ஆணின் விந்தணுவையும், அதனைச் செலுத்திக்கொள்வதற்கான கருவியையும் வரவழைத்து, தன் முயற்சியாகவே பயன்படுத்தி, தற்போது ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். கணவரிடமிருந்து பிரிந்து ஒற்றையாக வாழ்கிறவரும், கணவரின் வழியாகப் பிறந்த நான்கு வயது ஃபிராங்கி என்ற பையனைப் பாசத்துடன் வளர்த்துவருகிற, இணைய வழி ஏற்பாட்டில் பிறந்த பெண்குழந்தைக்கு ஈடன் என்று பெயரிட்டுள்ளவருமான 33 வயது ஸ்டெஃப்னீ ஒரு நவீனப்பெண்தானே?

ஆகவே, நவீனப் பெண்கள் வாடகைத்தாய் ஏற்பாடுகளுக்குள் போய்விடுவார்கள் என்று பொருமிக்கொண்டிருக்காமல், அந்த வாடகைத் தாய் ஏற்பாடுகளில் முறைகேடுகள் நடப்பது பற்றியும், அதிலே கூட சாதி நுழைந்திருப்பது பற்றியும் வந்திருக்கிற ஆய்வுச் செய்திகளைப் படித்து, முறைகேடுகளையும் சாதியக் கேடுகளையும் தவிர்ப்பது எப்படி என்று அமைச்சர்மார்கள் யோசிக்கட்டும்.

மிதிபடும் பயிர்

ஆய்வறிக்கைகள் சொல்வதைக் கடந்து, அறிவியல்நுட்பங்கள் செய்வதைத் தாண்டி வேறொரு பயிர் இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக மிதிக்கப்பட்டும், மீறி மீறித் துளிர்த்துக்கொண்டே இருக்கிற பயிர் அது. இப்போது அமைச்சர் ஒருவராலும் தனது வாரிசுரிமை போல மிதிக்கப்படுகிற அந்தப் பயிர்தான் பெண்ணின் சுயம். யாரைத் தனது வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்வதென முடிவு செய்வதோடு, வாழ்க்கைத் துணையெனத் தேர்வு செய்யத்தான் வேண்டுமாவென முடிவு செய்வதும் எல்லோருக்கும் உள்ள உரிமை. எல்லாச் சமயங்களிலும் சமூகங்களிலும் இந்த உரிமை இருக்கிறது. ஆனால், எந்தச் சாமியின் சமயமானாலும் எந்தச் சாதியின் சமூகமானாலும் பெண்களுக்கும் அந்த உரிமைக்கும் இடையே கலாச்சாரச் சுவரெழுப்பித் தடுக்கப்பட்டிருக்கிறது. தடுக்கிற அந்தச் சுவரைத் தகர்க்கிற வேலையைத்தான் நவீனப் பெண்கள் செய்கிறார்கள்.

"திருமணம், குழந்தை பெறுதல் உள்ளிட்டவை அவரவரின் தனிப்பட்ட உரிமைகள். சிலர் வேண்டாம் என்ற முடிவுக்குப் போகிறார்கள் என்றால் அதற்கான அகக் காரணங்களையும் புறக் காரணங்களையும் ஆராய்ந்தால்தான் விவரம் புரியும்," என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மூத்த தலைவர்களில் ஒருவரான வாசுகி. அந்தக் காரணங்களைத் தேட முயலாமல் நவீனப் பெண்களைப் பரிகசிப்பது தானாக வருவதல்ல. அதன் பின்னால் ஒரு சித்தாந்த போதனையின் வலுவான தாக்கம் இருக்கிறது.

"கர்நாடக அமைச்சரின் பேச்சு, பெண்ணின் சுயத்தை மறுக்கும் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிப்பதன் பிரதிபலிப்புதான். பெண்ணுக்குக் கல்வி, சொத்து, ஆயுதம் கூடாது என்கிற கீதை போன்றவற்றின் ஆணாதிக்க, சாதியக் கூறுகளைப் பின்தொடர்வோரின் பிதற்றல் இது," எனக்கூறும் வாசுகி, அரசியல்-சமூக நடப்புகள் மீதான அறச்சீற்றத்தோடு, "பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் கூட்டத்திற்குப் புதுமைப் பெண்களை விமர்சிக்கவோ அவர்களுக்கு அறிவுரை கூறவோ தகுதி இருக்கிறதா," என்று கேட்கிறார்.

நவீன காலத்துப் பெண்கள் வேறு, நவீனப் பெண்கள் வேறு. நவீன காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற பெண்களிலேயே கூட பலர் இப்படிப்பட்ட, "இந்தக் காலத்துப் பொண்ணுகளுக்கு நம்ம கலாச்சாரம் பத்தி ஒண்ணும் தெரியலை," என்று பேசுகிறவர்கள் இருக்கக்கூடும். ஆணாதிக்க ஒடுக்கல்களிலிருந்து மட்டுமல்லாமல், ஆணாதிக்கச் சிந்தனைகளுக்கு ஆதரவான மனநிலையிலிருந்தும் விடுபட்டவர்கள் நவீனப் பெண்கள். நட்பைப் பேணுவது, திருமணம் செய்துகொள்வது, வயிற்றில் புழு பூச்சி வளர்வது என அடிப்படைக் குடும்பம் முதல் அரசியல் களம் வரையில் எதிலேயும் சுயமாக முடிவெடுக்க அனுமதிக்கப்படாத மற்ற பெண்களுக்காகவும் வாதாடுகிற பண்பாட்டுக் காவலர்கள் நவீனப் பெண்கள். அவர்கள் திருமணம் செய்துகொள்ளவும் பிள்ளை பெற்றுக்கொள்ளவும் விரும்புகிறார்களா இல்லையா என்று கலாச்சார முகவராக ஆராய்வதை விட்டுவிட்டு, எல்லாப் பெண்களுக்குமான சட்டப்பூர்வமான சுகாதார உரிமைகளை உறுதிப்படுத்துவதில் மாநில அமைச்சராகக் கவனம் செலுத்தலாம். இந்தக் காலத்துப் பொண்ணுகளுக்கு கல்யாணம், பிள்ளைகுட்டி பிடிக்கவில்லையா?- அ. குமரேசன்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+