For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 8 #Margazhi,#Thiruppaavai

மார்கழி நோன்பின் எட்டாம் நாள் நாள் திருப்பாவை, திருவெம்பாவையின் எட்டாவது பாடலை பாடி இறைவனை வணங்குவோம்.

Google Oneindia Tamil News

சென்னை: மார்கழி மாதத்தில் இன்று எட்டாம் நாள் . மார்கழி நோன்பின் எட்டாம் நாளின் திருப்பாவை, திருவெம்பாவையின் எட்டாவது பாடலை பாடி இறைவனை வணங்குவோம். இந்த பாசுரத்தில் விடியற்காலைப்பொழுதின் அழகையும், கண்ணனை வணங்குவதால் கிடைக்கும் சிறப்புக்களையும் தெரிவித்துள்ளனர்.

Margazhi Pavai nonbu Tirupavai, Tiruvempavai songs 8

திருப்பாவை பாடல் - 8

கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்; கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்,
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.

விளக்கம்:

அன்பிற்குரிய தோழியே!...பொழுது புலர்ந்து விட்டது... நன்றாக விடிந்து விட்டது... நீராட எழுந்திரு என்று எழுப்புகிறார்கள். கறுமையாக இருந்த வானம் கிழக்குத் திசையில் வெளுத்து விட்டது. மிகவும் மந்தமான எருமைகளே எழுந்து மேய்ச்சல் நிலம் நோக்கிப் போய்விட்டன. பெண்ணே நீ இன்னும் தூங்குவது சரியா? நீ வரவேண்டும் என்பதற்காகப் பலர் கோயிலுக்குப் போகாமல் காத்திருக்கின்றனர். அவர்களின் காலும் மனமும் கடுக்க வைக்காமல் வேகமாய்த் எழுந்து வா.... என்று அழைக்கின்றனர்.

ஓர் அசுரனின் வாயைப்பிளந்து கொன்று, "சிறுவனுக்கு இவ்வளவு வலிமையா?' என நம்மை வாய்பிளக்க வைத்தவன் கண்ணபிரான். தாய்மாமன் கம்சன் ஏவிய பல அசுரர்களை துவம்சம் செய்தவன். அவனது புகழைப் பாடியபடி, கோயிலுக்குச் செல்வோம். அவனருள் கிடைத்தால், நம்மை குற்றமும், பாவமும் செய்ய வைக்கும் ஆசை அசுரனை, மமதை மல்லனை நாமே கொன்றுவிடலாம் என்று இந்த பாசுரத்தில் குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.

அதிகாலையில் கீழ்வானம் சட்டென்று வெளுப்பதில்லை. இருண்டிருந்த வானம், மெல்லச் சிவந்து, வண்ணக் கலவையாகிய நிலையிலிருந்து மெல்ல பூரண வெண்மையை அடைகிறது! அது போல, அடியார்களும் பலவித அனுபவ நிலைகளைக் கடந்து பின் ஞானத்தெளிவு பெறுகிறார்கள்!

திருவெம்பாவை பாடல் - 8

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.

பாடல் விளக்கம்:

இனிய காலை பொழுது விடிந்து விட்டது, கோழிகள் எல்லாம் கூவத் தொடங்கி விட்டன. சிறு பறவைகள் ஒலியெழுப்ப ஆரம்பித்து விட்டன. அவைகளின் ஒலி சிவ சிவ என்று ஒலிக்கின்றது. ஆலயங்களில் எங்கும் வெண் சங்குகள் முழங்குகின்றன. நாங்கள் அனைவரும் தனக்குவமையில்லாத பேரொளியை, ஒப்பற்ற பேரருளை, மேலொன்றுமில்லாத மெய்ப் பொருளை, பரஞ்சோதியை பாடினோமே அது உனது செவிகளை எட்டவில்லையா?

உன் உறக்கம் தான் எப்படிப்பட்டதோ! வாயைத் திறந்து ஒரு வார்த்தையாவது சொல்லேன். நீ இறைவனை வணங்கும் முறை இதுதானோ? பிரளய காலத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் அந்த எம்பெருமானது திருவடிகளிலே அடங்க தனி முதல்வனாய் விளங்கும் ஒப்பற்ற தலைவனை, உமையொரு பாகனை, ஏழைப் பங்காளனை பாட வேண்டாமா? இன்னும் என்ன உறக்கம் எழுந்திரு... பெண்ணே என்று உறங்கும் பெண்ணை தோழியர் எழுப்புகின்றனர்.

English summary
Margazhi Pavai nonbu Tirupavai, Tiruvempavai songs 8
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X