For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்கழி நோன்பு: திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்

மார்கழி மாதத்தில் சிவ பெருமானை வணங்குபவர்கள் திருவெம்பாவை பாடுவார்கள். பெருமாளை வணங்கும் வைணவர்கள் திருப்பாவை பாடுவார்கள்.

Google Oneindia Tamil News

மதுரை: மார்கழியில் நோன்பிருப்பது சிறப்பு. அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு நீராடி பூஜை அறையில் விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடுவது மனதிற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
மார்கழி மாதம் 21வது நாளில் திருப்பாவையின் 21வது பாசுரத்தை பாடலாம். நப்பின்னை பிராட்டி துயில் கலைந்து எழுந்து, வந்திருந்த ஆயர் சிறுமிகளுடன் இணைந்து கண்ணபிரானை துயிலெழுப்பும் பாடல்.

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையின் 20 பாடல்கள் முடிவடைந்துவிட்டது. தன்னை ஆட்கொண்ட, திருபெருந்துறையில் உறையும் இறைவனுக்காக, மாணிக்கவாசகர் பாடியருளிய 10 திருப்பள்ளியெழுச்சி பாடல்களை மார்கழியின் இறுதி 10 நாட்களுக்கு பாட வேண்டும். எல்லாம் வல்ல அவனை வணங்கி, இன்று தொடங்கலாம்.

Margazhi Month Special Prayers Tirupavai, Tirupalliyeluchi songs 21

திருப்பாவை பாடல் 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்:

நப்பின்னை பிராட்டி துயில் கலைந்து எழுந்து, வந்திருந்த ஆயர் சிறுமிகளுடன் இணைந்து கண்ணபிரானை துயிலெழுப்பும் பாடல். பால் கறப்பதற்காக வைத்துள்ள பாத்திரங்கள் நிரம்பி, அந்த பாத்திரங்களிலிருந்து பால் பொங்கி வழியுமாறு, பால் கறப்பவர்கள் சிறுவர்களாயினும் பெரியோர்களாயினும், தங்களது தன்மையில் மாற்றம் ஏதுமின்றி, வாரிக் கொடுக்கும் வள்ளல்கள் போன்று பால் சுரக்கும் பெருமை மிகுந்த பசுக்களை உடைய நந்தகோபனின் மகனே, நீ உறக்கம் தெளிந்து எழுவாயாக; வேதங்களால் புகழப்படுபவனே, வேதங்களும் அளக்க முடியாத பெருமை வாய்ந்தவனே, உலகத்தவர் கண்டு மகிழும் வண்ணம் உலகில் தோன்றியவனே, ஒளி மிகுந்து பிரகாசிப்பவனே, நீ துயிலெழுவாயாக. உன்னிடம் போரிட்டு உனது வலிமைக்கு முன்பு நிற்க முடியாமல் தோற்றவரெல்லாம் உனது அடியாராக மாறி உன் அடி பணிந்து வந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு உனது அடிகளைப் பற்றிப் பணிந்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலை. அதேபோல ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண்களாகிய நாங்களும், உனது குணநலன்களைப் போற்றிப் பாட வந்து உன் மாளிகை முன்பு காத்திருக்கிறோம். துயில் எழுந்து வந்து எங்களைக் காத்து அருள் வாயாக.

திருப்பள்ளி எழுச்சி பாடல் - 1

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பாடல் விளக்கம்:

உயிர்களுக்கு முதல்வன் நீ, எங்கள் வாழ்வுக்கும் முதல்வன் நீ. உன்னை மலர்களால் அர்ச்சித்து, உன் திருமுகத்தில் காண்கின்ற அந்த அழகிய புன் முறுவலைப் பார்த்து மகிழ்ந்து வணங்குகிறோம். சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே! என்னையும் ஆட் கொண்டவனே! என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது. உனது பூப்போன்ற திருவடிகளில் அவற்றுக்கு பொருத்தமான மலர்களைத் தூவி வழிபடும்போது, உன்னுடைய திருமுகத்தில் எமக்கு அருள் புரியவென மலர்கின்ற அழகிய புன்முறுவலைக் கண்டு மகிழ்ந்து, உன்னடிகளைத் தொழுகின்றோம். எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!

English summary
Margazhi Month Special Prayers Tirupavai, Tirupalliyeluchi songs 21
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X