• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண்பொழி திருமலைக்குமாரசாமியை வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் - திருப்பம் ஏற்படும்

|

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பண்பொழி அருள் மிகு திருமலைக்குமாரசாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பதி சென்று வந்தால் மட்டுமல்ல... பண்பொழியில் அருள்பாலிக்கும் இந்த திருமலைக்குமாரசாமியை மலைமீது ஏறி வழிபட்டாலும் வாழ்வில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும். அற்புதமான வாரிசுகள் பிறப்பார்கள்.

கடந்த 9ஆம் தேதி அனுக்ஞை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. புதன்கிழமையன்று லட்சுமி ஹோமம், தனபூஜை, கன்யா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. வியாழக்கிழமையன்று காலையில் மூர்த்தி ஹோமம், சம்கிதா ஹோமம், பிரசன்னாபிஷேகம், பரிவார மூர்த்திகள் கலாகர்சணம், அக்னி சங்கிரகணம், மாலை யில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், ஆச்சார்ய ரக்‌ஷாபந்தனம், கும்ப அலங்காரம், மூலவர் கலாகர்சணம், யாத்ரா தானம், கடம் யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவை நடந்தன.

பின்னர் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. இன்று காலை 9.20 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் ராஜகோபுரம், விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு மகா அபிஷேகம் இடம் பெறுகிறது. மாலை 5 மணிக்கு தங்க தேர் உலா வரும் வைபவமும், இரவு 9 மணிக்கு பண்பொழி நகரீஸ்வரமுடையார் திருக்கோயிலில் சண்முகர், வள்ளி,தெய்வானை திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

மலையே ஓம்

மலையே ஓம்

நெல்லை மாவட்டத்தில் பழைமையான பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திருமலைக்குமாரசாமி கோவிலாகும் இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 520 அடி உயரத்த்தில் உள்ளது இந்த கோவிலில் சுமார் 600 படிக்கட்டுகள் உள்ளது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தான் இங்கு மலைப்பாதை அமைக்கப்பட்டது. மேற்குத்தொடர்ச்சி மலைச்சரிவில் ஓம் என்ற வடிவம் கொண்ட உயர்ந்த குன்றில் நானூறு அடி உயரத்திற்கு மேல் இக்கோயில் உள்ளது.

கனவில் முருகன்

கனவில் முருகன்

இத்திருமலையில் ஆதிகாளி கோவிலின் அர்ச்சகராக இருந்த பூவன் பட்டர்தான் இங்கு பூஜைகள் செய்துவந்தார். தினமும் அங்கிருந்த வேலுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்த்துவந்தார். ஒருநாள் பூஜையை முடித்துவிட்டு மதியம் ஓய்வாக ஒரு புளியமரத்தடியில் படுத்திருந்தபோது, அவரது கனவில் முருகப்பெருமான் தோன்றி அச்சன்கோயிலுக்குப் போகிற வழியில் புழுதியாற்றுக் கோட்டையில் ஓர் வனத்தில் தான் கோயில் கொண்டிருந்ததாகவும், மழை வெள்ளத்தில் குமரன் கோயில் அழிந்து, குமரப்பெருமானின் திருஉருவம் ஆற்று மணலில் புதைந்தது இருப்பதாகவும். அதை தோண்டியெடுத்து எனக்கு கோவில் எழுப்பு.

எறும்புகள் காட்டிய முருகன்

எறும்புகள் காட்டிய முருகன்

நான் புதைந்திருக்கும் இடத்தை ஒற்றை வரிசையாகச் செல்லும் எறும்புக்கூட்டம் நின்று காட்டும் என அடையாளம் கூறினார்.

இதே செய்தியைப் பந்தள அரசர் கனவிலும் தெரிவித்திருப்பதாக முருகன் கூறி மறைந்தார். கனவில் முருகன் இட்ட கட்டளையை ஏற்று பூவன் பட்டரும் பந்தள மன்னரும் முருகன் சிலை புதைந்து கிடந்த இடத்தைக் கண்டுபிடித்து, பயபக்தியுடன் எடுத்து வந்து திருமலையின் மீதுள்ள குவளைப் பொய்கையின் அருகே உள்ள புளியமரத்தினடியில் வைத்து முதன்முதலில் பூஜைகள் செய்தார்கள். அப்போது பந்தளத்தை ஆண்ட மன்னர் உடனே மலைமேல் ஏறுவதற்கு வசதியாக 623 படிக்கட்டுக்கள் கொண்ட இக்கோவிலை எழுப்பினார். அந்த படிக்கட்டுகள் ஸ்கந்த கோஷ்டப்பித்ருக்கள் வசிக்கும் தேவ படிக்கட்டுக்கள் எனச் சொல்லப்படுகிறது. ஆகையால், இந்த தலத்திற்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் நம் சந்ததிகளுக்கு நல்ல சிறப்பான வாழ்வு அமையும், நல்ல வாரிசுகள் உருவாகுமென ஐதீகம் உள்ளது.

வேல் இருந்த இடம்

வேல் இருந்த இடம்

பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள்தான் பூவன் பட்டரின் வேண்டுகோளின்படி இப்பொழுது கேரள எல்லையாக இருக்கிற திருமலைக் கோயிலையும் எழுப்பியுள்ளனர். இந்த இடத்தை சுற்றிதான் ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை இருக்கிறது. இங்கே ஆதிஸ்தானம்ன்ற ஒரு கோவில் இருக்கிறது. இதுதான் முதலில் வேல் இருந்த இடமாகும்.

2000 ஆண்டு பழமையான கோவில்

2000 ஆண்டு பழமையான கோவில்

இங்கு நாகராஜருக்கும் ஒரு சந்நிதி இருக்கிறது. இந்த மூலஸ்தானம் என்று சொல்லப்படுகிற மரம் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான மரமாகும். அதனாடியில் உள்ள சன்னதியை இன்றும் உத்தண்ட வேலாயுதம் எனச்சொல்கிறார்கள். பல நூறாண்டுகளுக்கு முன்னர் நெல்லையம்பலம் மயிலப்பன் என்கிற முருக பக்தர்தான் இப்பொழுது இருக்கும் ஆலயதை தொடக்கி முருகன் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து, மானியங்களையும் கொடுத்தாராம்.

அதை தொடர்ந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடகரையார் என்னும் சொக்கம்பட்டி ஜமீன், அம்பலவாண முனிவர் மற்றும் நெல்லை மாவட்டம் நெடுவயலைச் சார்ந்த சிவகாமி பரதேசி என்னும் அம்மையார் ஆகியோர் பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளனர்.

திருமலைக்குமாரசாமி

திருமலைக்குமாரசாமி

இந்த தலத்து மூலவரான திருமலை முருகன் நான்கு கைகளுடன் மேல்நோக்கிய வலது கையில் சக்தி ஆயுதமும், மேல்நோக்கிய இடது கையில் வச்சிராயுதமும், கீழ்நோக்கிய வலது கையில் அபயக்கரமும், கீழ்நோக்கிய இடது கையில் சிம்ம கர்ண முத்திரையுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இம்முருகனுக்குப் பார்வதி தேவி தன் வாயால் அருளிச் செய்த "தேவி பிரசன்ன குமார விதி"ப்படி எட்டுக்கால பூசைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோவிலில் மற்ற கோவில்கள் போன்று பள்ளியறையில் சுவாமியைப் பாதுகை செய்வது இல்லையாம்,மூலவருக்குப் பால், பழம், ஊஞ்சலுடன் சயனப் பூஜை மட்டுமே செய்யப்படுகிறது.

திருமலைக்காளி கோவில்

திருமலைக்காளி கோவில்

இது திருமலைக்காளி கோவில். இங்கு காளிதேவி மலைமேல் நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமலையின் வெளிப்பிரகாரத்தில் வடமேற்குப் பகுதியில் தனிக்கோயிலாகத் திருமலைக்காளி கோயில் அமைந்துள்ளது. இங்கே காளியம்மன் வடதிசை நோக்கி (கோட்டைத் திரடு) அமர்ந்து அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயில் முருகக் கடவுள் பிரதிஷ்டைக்கு முன்பே அமைந்தது என்கிறார்கள். இடும்பன் சன்னதி படிகள் செல்லுமிடத்தின் மேற்கே, தனிச்சன்னதியாக அமைந்துள்ளது. இந்த காளி திருமலையின் காவல் தெய்வமாகும்.

கால பைரவர்

கால பைரவர்

திருமலைக்கோயிலின் உள்பிராகாரத்தில் வடகிழக்கில் ஈசானத்தில் தெற்கு நோக்கி கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. ஐந்தரை அடி உயரமுள்ள கம்பீரமான தோற்றத்துடன் பைரவர் இங்கு வீற்றிருக்கிறார். இங்கு முருகன் சந்நிதியை அடுத்து 16 படிகள் ஏறிச்சென்றால் விநாயகருக்கென தனி சன்னதி இருக்கிறது. அவர் உச்சிப்பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.

திருப்பம் தரும் கோவில்

திருப்பம் தரும் கோவில்

விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நளமூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன. செல்வவிருத்திக்காக, திருமலைசெடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியாவிட்டாலும் இங்கு சென்று வந்தவர்களின் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது பலருக்கு கண்கூடாக நடத்த அனுபவம்.

விசாகன் முருகன்

விசாகன் முருகன்

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து வழிபட்டால் அவர்கள்வாழ்க்கை விருத்தியாகும் என்பது ஐதீகம்.‘வி' என்றால் உயர்வானது, ‘சாகம்' என்றால் ஜோதி எனப்படும்.‘விசாகம்' என்றால் மேலான ஜோதி என்று பொருள். இந்த நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக் கிரணங்களை உடையது என்றும், இந்த மூன்று ஒளிக்கிரணங்களும் இந்த மலை மீது படுவதால், விசாக நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட, தங்கள் தோஷங்கள் அனைத்தும் நீங்கி, புனர்வாழ்வு கிட்டுமென்றும், செல்வங்கள் பெருகும் என்றும் விசாக நட்சத்திரத்தினர் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

பூஞ்சுனை தீர்த்தம்

பூஞ்சுனை தீர்த்தம்

இத்திருத்தலத்தின் தீர்த்தமான பூஞ்சுனை,அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது. நாள்தோறும் ஒரு தாமரை மலர் இச்சுனையில் மலரும். அதை இந்திராதி தேவர்களும் சப்த கன்னியர்களும் பறித்து முருகனுக்குச் சூட்டி வழிபட்டு வந்த அற்புத தீர்த்தமாகும்.

கும்பாபிஷேகம் கோலாகலம்

கும்பாபிஷேகம் கோலாகலம்

இந்த கோவிலில் அருணாசலம் என்பவர் உபயத்தில் 5 நிலை ராஜ கோபுரம் அமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பரிவார மூர்த்திகள் , ராஜ கோபுரம், மூலவர் என கலசங்களில் யாக சாலை பூஜைகளில் வைக்கப்பட்ட கும்பங்களில் இருந்து புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பக்கத்து மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தரகள் வசதிக்காக இலவச வேன் வசதி செய்யப்பட்டிருந்தது மேலும் 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்

 
 
 
English summary
Kumbabhisekham Thirumalai Kumaraswamy Temple Panpoli. Thousands of Tamils and Kerala devotees attended the function. Thirumalai Kumaraswamy Temple is dedicated to Hindu God Murugan located at Panpoli near Tenkasi in Thirunelveli District
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X