For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சித்திரை திருவிழா 2020: மீனாட்சி சொக்கநாதரையும், கள்ளழகரையும் தரிசிக்க காத்திருக்கும் மக்கள்

மதுரை மாநகரமே குலுங்க குலுங்க நடைபெறும் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நடக்குமா? நடக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா சித்ரா பவுர்ணமியை ஒட்டி 18 நாட்கள் நடைபெறும். மீனாட்சி திருக்கல்யாணமும், தேரோட்டமும், கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவமும் காண கண்கோடி வேண்டும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஆலயங்களில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணத்தையும் வைகையில் இறங்கும் கள்ளழகரையும் காண முடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் இருக்கின்றனர் மதுரைவாசிகள்.

Recommended Video

    மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது

    தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரைத்திருவிழா. ஆண்டு தோறும் சித்திரை மாதம் பவுர்ணமியை முன்னிட்டு மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் மே 7ஆம் தேதி கள்ளழகர் வைகையில் இறங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நாட்களில் தென்மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் மதுரைக்கு வருவார்கள். மதுரை மாநகரமே குலுங்க குலுங்க சித்திரை திருவிழா நடைபெறும். மீனாட்சி சொக்கநாதர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா வருவதை காணவும், கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காணவும் தூங்கா நகரமே விடிய விடிய விழித்திருக்கும்.

    இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 24ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு, தற்போது மே 3ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பங்குனி மாதம் மாரியம்மன் கோவில்களில் திருவிழாக்கள் ரத்துசெய்யப்பட்டன. அதே போல சித்திரை திருவிழாவும் ரத்தாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    மீனாட்சி அம்மன் சொக்கநாதர்

    மீனாட்சி அம்மன் சொக்கநாதர்

    கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். சித்திரை திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் மக்கள் கூட்டம் மதுரை வீதிகளில் அலை மோதும் தலை நிறைய மல்லிகை மணக்க மதுரையில் இளம் பெண்களும், திருமணமான பெண்களும் தங்கள் குடும்பத்தினருடன் அம்மை அப்பனை தரிசிக்க கூடுவார்கள்.

    மீனாட்சி பட்டாபிஷேகம்

    மீனாட்சி பட்டாபிஷேகம்

    சித்திரை திருவிழாவின் 8வது நாளான்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். அன்னைக்கு முடி சூட்டுவதற்காக ராயர் கிரீடம் எனப்படும் வைரக் கிரீடமும் செங்கோலும் அனுக்ஞை விநாயகர் சந்நிதியில் இருந்து கொண்டு வரப்படும். அன்றைய தினம் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, கிரீடம் சூட்டி, செங்கோலும் வழங்கப்படும். பின்னர் மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்படும். அன்றைய தினம் முதல் மதுரையில் மீனாட்சி ஆட்சி தொடங்குவதாக ஐதீகம்.

    திருக்கல்யாணமும் தேரோட்டமும்

    திருக்கல்யாணமும் தேரோட்டமும்

    திருவிழாவின் பத்தாம் நாள் மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும். அதற்கு மறுநாள் மீனாட்சி, பிரியாவிடை சமேதராக சுந்தரேஸ்வரர் பிரம்மாண்ட தேரில் ஏறி நான்கு மாட வீதிகளிலும் வலம் வருவதை நான்கு மாட வீதிகளிலும் கூடி நின்று மக்கள் தரிசிப்பார்கள்.

    கள்ளழகர் வருகை

    கள்ளழகர் வருகை

    இந்த திருமணத்தை காணவும், வைகை ஆற்றில் தனக்காக தவம் இருக்கும் மாண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவதற்காகவும் அழகர்மலையில் இருந்து இறங்கி தங்கப்பல்லாக்கில் மதுரைக்கு வரும் கள்ளழகரை தல்லாகுளத்தில் எதிர்கொண்டு அழைப்பார்கள் பக்தர்கள். இதற்காக 40 நாட்கள் விரதம் இருந்து கள்ளழகர் வேடம் போட்டு வருவார்கள். தங்க குதிரை வாகனத்தில் ஆடி ஆடி அசைந்து வரும் அழகர் வைகையில் இறங்கும் போது கோவிந்தா முழக்கம் விண்ணை எட்டும். இந்த ஆண்டு எதுவுமே நடக்காமல் அமைதியாக இருக்கிறது மதுரை நகரம். காரணம் கொரோனா வைரஸ் என்னும் கொடிய அரக்கன்தான்.

    சித்திரை திருவிழா நடக்குமா

    சித்திரை திருவிழா நடக்குமா

    மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்க வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. காரணம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டியது அவசியம். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பத்து லட்சம் மக்கள் கூடும் இந்த திருவிழா நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நூற்றாண்டுகாலமாக நடந்த இந்த திருவிழாவை எப்படி நடத்துவது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    English summary
    Work for the annual Chithirai festival, which is to begin on April 25, has been put on hold by Meenakshi Sundareswarar temple and Alagarkoil’s Sundararaja Perumal temple authorities.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X