குரு பெயர்ச்சி பலன் 2022: குரு பார்க்க கோடி நன்மை இந்த ராசிக்காரர்களுக்கு உண்மையாகும்
குரு பெயர்ச்சி இந்த மாதம் 30ஆம் தேதி ஏப்ரல் 13 ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த குரு பெயர்ச்சியால்எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும் யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
சென்னை: ஏப்ரல் 13ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த குரு பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு அளவிட முடியாத அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. குரு பகவான் இப்போது கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். சனிபகவானின் வீட்டில் இருந்து தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் குரு பகவான். இந்த இடப்பெயர்ச்சியால் சிலருக்கு சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்படும். குருவின் சஞ்சாரம் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குரு பார்வையால் கோடி நன்மையை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
குரு பெயர்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் என்றாலும் சில மாதங்கள் அதிசாரமாகவும் சில மாதங்கள் வக்ரகதியிலும் செல்வார் குருபகவான். மனிதர்களின் கல்வி, வேலை, திருமணம், புத்திரபாக்கியம் போன்றவை நல்ல முறையில் கிடைக்க குருபகவானின் அருள் அவசியம். எனவேதான் நவகிரகங்களில் குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
குரு பகவான் கோச்சாரப்படி 2,5,7,9,11ல் சஞ்சரித்தால் நன்மையை செய்யும் என்று சொல்வார்கள். நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு எந்த இடத்தில் குரு அமர்கிறார் எந்தெந்த இடங்களில் பார்வையிடப்போகிறார் அதன் மூலம் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

துலாம் - ருண ரோக சத்ரு குரு
குரு பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு வருகிறார். இது ருண ரோக சத்ரு ஸ்தானமாகும். கடன் எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும். உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படும். சிகிச்சை மூலம் எளிதில் குணமடையும். வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது. கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். எனவே யாருக்கும் இந்த கால கட்டத்தில் கடன் கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையேயான சிக்கல்கள் நீங்கும். வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம் - பூர்வ புண்ணிய குரு
பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டில் குரு பயணம் செய்யப்போவதால் புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். சில பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. இதுவரை இருந்த அழுத்தங்கள் நீங்கும். பதவியில் மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். குருவின் பார்வை லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானங்களின் மீது விழுகிறது. ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்பு தேடி வரும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். அப்பாவழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் அதிகரிக்கும்.

தனுசு - சுக ஸ்தான குரு
உங்கள் ராசி அதிபதி குரு பகவான் சுக ஸ்தானமான நான்காவது வீட்டில் அமர்வதால் வீடு வாங்கலாம். புது வீடு கட்டி குடியேறலாம். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், தொழில் ஸ்தானம், எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தின் மீது விழுகிறது. நோய்களும் மரணத்திற்கு ஒப்பான கண்டங்களும் நீங்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அதிகாரப்பதவி தேடி வரும். புரமோசனும், சம்பள உயர்வும் கிடைக்கும். வெளிநாடு வேலை வாய்ப்புகள் தேடி வரும். குருவின் பார்வையால் சனிபகவானால் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவுக்கு வரப்போகிறது.

மகரம் - தைரிய குரு
உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தில் பயணித்த குருபகவான் மூன்றாவது வீடான தைரியம், முயற்சி ஸ்தானத்தில் மறையப் போகிறார். இளைய சகோதரர்கள் வகையில் சில சங்கடங்கள் வர வாய்ப்பு உள்ளது. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிறிய ஆன்மீக பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். குரு பலன் வந்து விட்டது. குருவின் பார்வை ஏழாவது வீட்டின் மீது விழுவதால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வேலை தொழிலில் லாபம் கிடைக்கும். பெரிய அளவில் முதலீடு செய்வதை விட சிறிய அளவில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்.

கும்பம் - குடும்ப குரு
உங்கள் ஜென்ம ராசியில் இருந்த குருபகவான் குடும்ப ஸ்தானத்திற்கு செல்லப்போவதால் சிக்கல்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் வெற்றியடையும். நல்ல தன வரவு வரும். சேமிப்பும் உயரும். திருமண சுபகாரிய முயற்சிகள் கை கூடி வரும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். பணத்தை பத்திரப்படுத்துங்கள். உங்கள் ராசிக்கு ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுவதால் புதிய வேலை கிடைக்கும். நல்ல வேலைக்கு முயற்சி செய்யலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நோய்கள் நீங்கும் பொருளாதார நெருக்கடிகள் முடிவுக்கு வரும். கடன் பிரச்சினைகள் நீங்கும் காலம் வந்து விட்டது.

மீனம் - ஜென்ம குரு
உங்கள் ராசிநாதன் குரு ஜென்ம ராசிக்கு வருகிறார். 'ஜென்ம குரு வனத்தினிலே' என்று சொல்வார்கள்.. சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவை. கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வரும். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை எனவே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பெரிய அளவில் முதலீடுகள் செய்து அகலக்கால் வைக்க வேண்டாம். ஒவ்வொரு செயலிலும் முன்யோசனை அவசியம். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. திருமண சுபகாரியம் தொடர்பாக பேசலாம், குழந்தைகளுக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வணங்கி வர ஜென்ம குருவினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.












Click it and Unblock the Notifications