குரு பெயர்ச்சி பலன் 2024.. குருவின் பொன்னான பார்வை.. அரியணையில் அமரப்போகும் அரசியல்வாதி யார்?
சென்னை: குரு பகவான் சுப கிரகம். குருவின் பார்வை பலருக்கும் அதிர்ஷ்டத்தை தேடித்தரும் எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்த எந்த அரசியல்வாதிகளுக்கு பதவியும் பட்டமும் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்: 2024ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரைக்கும் குரு பகவானின் நேரடி பார்வையில் இருந்தாலும் ஏப்ரல் மாதத்தில் இறுதிக்குப் பிறகு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். அரசியல்வாதிகளுக்கு சீட் கிடைப்பதில் சில பிரச்சினைகள் வரலாம் குருவின் அனுகிரகத்தினால் உங்களுக்கு பாதிப்புகள் நீங்கும். போராடினால்தான் வெற்றியை தொட முடியும். தென் திட்டை குருபகவானை தரிசனம் செய்யலாம். குல தெய்வத்தை வழிபடுவதன் மூலம் சாதிக்க முடியும்.

விருச்சிகம்: 2024ஆம் ஆண்டு நிகழப்போகும் குரு பெயர்ச்சி அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தப்போவது விருச்சிக ராசிக்காரர்களுக்குத்தான். விருச்சிகம் ராசிக்கு நேர் எதிராக அமரப்போகும் குரு பகவான் தனது பொன்னான பார்வையால் நேரடியாக உங்கள் ராசியை பார்வையிடுகிறார். குரு பெயர்ச்சியால் நீங்கள் தொட்டது துலங்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெற்றிகள் தேடி வரும் காலம். அரியணையில் அமரும் யோகம் கை கூடி வரப்போகிறது. விருச்சிக ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு பொற்காலம்தான்.
தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. ஆறாம் வீட்டில் அமரப்போகிறார் குரு பகவான். பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் அரசியல்வாதிகளுக்கு தடைகளை தாண்டி வெற்றி வந்து சேரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். இந்த குரு பெயர்ச்சி மகிழ்ச்சிகரமானதாக அமையப்போகிறது. ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு அமர்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த குரு பெயர்ச்சி காலத்தில் காரைக்குடி அருகில் உள்ள பட்டமங்கலம் குரு பகவானை தரிசனம் செய்து வர தடைகள் நீங்கும்.
மகரம்: குரு பகவான் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரப்போவதால் மகரம் ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. ஏழரை சனி காலமாக இருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு அரியணையில் அமரப்போகும் காலம் வந்து விட்டது. குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கட்சித்தலைமையின் ஆதரவு கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் வரும். வெற்றிகள் தேடி வரும் காலம் என்பதால் பட்டீஸ்வரம் சென்று துர்க்கை அம்மனை வணங்கவும்.
கும்பம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே.. குரு நான்காம் வீட்டிற்கு போகிறார். மனதில் தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறகும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். பதவிக்காக காத்திருப்பவர்களுக்கு வெற்றியும் அனுகூலமும் கிடைக்கும். திருவண்ணாமலை சென்று கிரிவலம் வாருங்கள் நிறைய நன்மைகள் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு மன குழப்பத்தை நீக்கும்.
மீனம்: உங்கள் ராசிநாதன் குரு பகவான் மூன்றாம் வீட்டில் மறைகிறார். ஏற்கனவே ஜென்ம ராகு, ஏழரை சனி, ராசிநாதனும் மறைவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகள் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது. எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி விடாதீர்கள். உங்கள் வாய்தான் உங்களுக்கு ஆயுதம் நீங்கள் பேசும் வார்த்தையே உங்களுக்கு எதிரானதாக திரும்பிவிடும் ஜாக்கிரதை. எந்த பிரச்சினை என்றாலும் கவனமாக கையாளுங்கள். வீர ஆஞ்சநேயரை வழிபடுங்கள் வெற்றிகள் தேடி வரும்.












Click it and Unblock the Notifications