குரு பெயர்ச்சி பலன் 2024: மேஷத்திற்கு குடும்ப குரு.. 2024ல் பண மழை பொழியப்போகும் குரு பகவான்
சென்னை: மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் 2024ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் தற்போது வக்ர நிலையில் மேஷ ராசியில் இருந்தாலும் 2024 ஜனவரி முதல் நேர்கதியில் பயணம் செய்வார். மேஷ ராசியில் 2024ஆம் ஆண்டு குடும்ப குருவாக பயணம் செய்யப்போகும் குரு பகவான் என்னென்ன யோகங்களை தரப்போகிறார் என்று பார்க்கலாம்.
மேஷம்: ஜென்ம ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2ஆம் வீடான ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 2024ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி குருப்பெயர்ச்சி நிகழ உள்ளது. குரு பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசிக்கு 6ஆம் வீடு, எட்டாம் வீடு, பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தை பார்வையிடுகிறார். குரு பகவானின் பயணம் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு மன நிம்மதியை தரப்போகிறது.

பண வருமானம்: குரு பகவான் குடும்ப, தன, வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உங்களின் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். நல்ல பண வருமானம் வரும். செய்யும் தொழிலில் விருத்தியும் லாபமும் உண்டாகும். திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. பெண்களுக்கு அற்புதமான கால கட்டம். தங்க நகைகள் வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. அடகு வைத்திருந்த நகைகளை மீட்பீர்கள்.
நோய்கள் நீங்கும்: குரு பகவான் பார்வை 6ஆம் வீட்டின் மீது விழுவதால் எதிரிகள் தொல்லை ஒழியும், நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குரு பகவான் பார்வை 8ஆம் வீட்டின் மீது விழுவதால் உங்களுக்கு ஆயுள் கண்டங்கள் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெண்களின் மாங்கல்ய தோஷம் விலகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும்.
வேலையில் புரமோசன்: நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு 2024ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு பதவி உயர்வு நிச்சயம் உண்டு. சித்திரை மாதத்திற்குப் பிறகு வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது. உங்களை விட்டு விலகிச்சென்ற பங்குதாரர்கள் உங்களை நாடி வருவார்கள். நீங்கள் செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
வீடு கட்டும் யோகம்: குரு பகவான் ஓராண்டு காலம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்வார். கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் ஆகிய நட்சத்திரங்களில் குரு பகவான் பயணம் செய்வார். உங்களுக்கு குருவின் நற்கருணை ஆண்டு முழுவதும் கிடைக்கப்போகிறது. சூரியன், சந்திரன், செவ்வாய் பகவானின் நட்சத்திரங்களில் குரு பயணம் செய்யும் காலத்தில் வீடு கட்டும் யோகம் கை கூடி வந்துள்ளது. புது வீட்டிற்கு மாறும் யோகமும் வரப்போகிறது. வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications