மன்மத ஆண்டு: துலாம் ராசிக்காரர்களே ஆரம்பமே அமர்களம்தான்!
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்
இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு ஸ்ரீ மன்மத வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் துலாம் ராசி அன்பர்களே இவ்வாண்டு நடக்கவிருக்கும் சில பொதுவான பலன்களைப் பார்ப்போம்.
துலாம் ராசி அன்பர்களே எதிலும் நியாயம், நேர்மை, வாக்கு தவறாமை, சீராக நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அன்பர்களே! வாக்கால் சாதுரியம் செய்வீர்கள். சில சமயங்களில் யோசிக்காமல் பலர் கூறும் கருத்துக்களை எடுத்துக் கொள்ளாமல் அவசரத்தால் அபசகுனமாக பேசி விடுவீர்கள்.
நீதி தேவதையின் கையில் துலாபாரமாக இருந்தாலும் பணம், பொருள் இருக்கும் பக்கமே சாய்வீர்கள். சிலரை சீண்டி பேசி வேடிக்கைப் பார்ப்பீர்கள், சிறிது நேரத்திற்க்குள் குண பேதங்களை மாற்றிக் கொள்வீர்கள், சில சமயம் துலாபாரத்தின் முள் போல் சரியான நியாயத்தைப் பேசுவீர்கள், பிறரைப் போற்றி பேசி தன் காரியங்களை சாதித்துக் கொள்பவர்களே, மேலான சுறுசுறுப்பு தெளிவு கொண்டவர்களே ஆடம்பர வழ்க்கையும், கௌரவத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள் பிறர் சொல்லில் பொருள் ஆராய்ந்து அதற்கு தக்கபடி பதில் அளிக்க அதனால் உங்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக் கூடும். அவசர வார்த்தைகளால் வரவிருக்கும் நன்மை, நண்பர்களின் உதவி, காரிய வெற்றி இவைகளையெல்லாம் தன் அறியாமையால் இழக்க நேரிடும். பிறர் கூறிடும் கருத்தை கவனாமாக கேட்பது போல் இருந்து பின் தான் நினைத்தபடி நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே.

நட்பு கிரகங்களால் சுபம்
நீதி நேர்மை எப்பக்கம் இருக்கிறதோ அப்பக்கம் சாய விரும்பும் துலாக் கோலாக வாழ்வில் செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு ஆட்சி நாயகனும் அவருடைய நட்பு கிரகங்களான புதன், கேது ஆகியோர் சாதகமாக அமைந்திருக்கும் சூழ்நிலையில் மன்மத வருடம் பிறக்கிறது. ஆரம்பமே சுப மங்களகரமாக அமையப்போகிறது.
சனிபகவானால் சிக்கல்
சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருக்கிறார் இது சிறப்பான இடம் அல்ல. அவர் இருக்கும் இடத்திற்க்கு தக்கவாறு குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்குவார். வருமானம் குறைவாக இருப்பதால் அடிக்கடி பணப்பற்றாகுறைக்கு ஆளாக நேரிடலாம். சிலருக்கு கடன் வாங்கும் சூழ்நிலையும் உருவாகலாம். ஆனால் சனி பகவானின் பத்தாம் இடத்துப் பார்வை உங்களுக்குச் சிறப்பாக அமைந்துள்ளது, அதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.
குருவும் சாதகமில்லை
குரு பகவான் பத்தாம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான நிலை அல்ல. அவர் பொருளாதார கஷ்டத்தையும் மன சஞ்சலத்தையும் உண்டாக்குவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அவரின் ஐந்தாம் இடத்துப் பார்வை நற்பலன் தரும் நிலையில் உள்ளது, அதன் மூலம் எந்த பிரச்சினையும் எதிர் கொண்டு சமாளித்து வெற்றி காண்பீர்கள். ஆனி மாதம் 29ம் நாள் 14-07-2015ல் குருபகவான் சிம்மத்திற்கு மாறுகிறார். உங்கள் ராசிக்கு சாதகமான ஸ்தானத்திற்கு வருகிறார். எனவே பணத் தட்டுப்பாடு நீங்கி அதிர்ஷ்டத்திற்கு வழி பிறக்கும். கடந்த காலத்தில் இருந்து வந்த பின்தங்கிய மாறி ஏற்றமான சூழ்நிலை உருவாகும். கடந்த காலத்தில் உங்கள் மீது ஏற்பட்ட அவப்பெயர் மாறும். மதிப்பு மரியாதை சிறக்கும்.
ராகு - கேது
நிழல் கிரகமான ராகு தற்போது பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார். இதனால் தொழில் சம்பந்தமான வெளியூர் பயணம் எதிர்பார்த்த வருமானத்தைத் தராமல் போகலாம். மறைமுக எதிரிகள் உங்களுக்கு இடையூறு உண்டாக்கலாம். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது ஆறாம் இடமான மீனத்தில் இருக்கிறார். அவர் நன்மையான பலங்களைத் தந்து கொண்டு இருப்பார். இதனால் பொருளாதார சிக்கல் தீரும். பகைவர்களின் சூழ்ச்சியில் இருந்து விடுபட பலவிதமான அறிவுபூர்வமான முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் அபாரமான ஆற்றல் பிறக்கும். சுறுசுறுப்புடன் தங்கள் பணியில் ஈடுபட்டு வருவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், கடவுள் பக்தியானது உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். முழு மூச்சாய் உழைக்கும் திறமையை தரும். ஆண்டின் முற்பகுதியில் சிரமங்கள் ஏற்பட்டாலும் மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். சமூகத்தில் கௌரவம் கூடும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
என்ன பரிகாரம்
சோளிங்கர், பரிக்கல், பூவரசங்குப்பம், சிங்ககிரிகுடி ஆகிய தலங்களில் உள்ள ஸ்ரீநரசிம்மரை வணங்கி வர இவ்வாண்டு அனைத்து நன்மைகளும் கிட்டும்.












Click it and Unblock the Notifications