காதல்.. சந்திரனால் வரும் தோஷங்கள்... சந்திர திசையில் ஏழரை சனி.. மரண பயம் காட்டிட்டியே பரமா
சென்னை: ஒருவருக்கு சந்திர திசையானது சுமார் 10 வருடம் நடக்கும். சந்திர திசையில் ஏழரை நாட்டு சனி காலமாகட்டும் அல்லது சந்திர திசை அஷ்டம சனியாகட்டும் மரணபயத்தை காட்டி விடுவார் சந்திரன். சந்திர தசையால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன பரிகாரம் செய்தால் தப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.
நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் சந்திரன் பகவான் ஆவார். சந்திர பகவான் மனோகாரகன். தண்ணீர் சார்ந்த நோய்கள், பயணங்கள், சுவை, உணவு, கற்பனைத் திறன், தெய்வீக பணி போன்றவைகளுக்கும் காரகன் ஆவார். ஒருவரின் ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் சுப பலன்களையும், தேய்பிறை சந்திரன் பாதக பலன்களையும் தருகிறது.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் அவர் என்ன ராசி என்று கணிக்கிறோம். முதல்தசை என்னவென்று கணிக்கிறோம். கோச்சாரப்படி கிரகங்களின் சஞ்சாரம், சனி, குரு, ராகு கேது பெயர்ச்சிக்கு பலன்கள் பார்ப்பதோடு ராசி நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்கிறோம்.
சந்திரனின் சஞ்சாரம் அமாவாசை, பவுர்ணமி என மாதந்தோறும் நிகழும் போது மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். சந்திரனும் சூரியனும் ஒரே ராசியில் இருக்கும் போது அமாவாசையும், சந்திரனும் சூரியனும் எதிர் எதிர் திசையில் சூரியனிடம் இருந்து ஏழாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் போது பவுர்ணமியும் ஏற்படுகிறது.
சந்திரனைப் பார்த்து காதல் வயப்படுகின்றனர். வானத்தில் இருக்கும் முழு நிலவு மனதில் எழுச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு புத்துணர்ச்சியை தரும். சந்திரனுக்கும் மனித மனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பெண்களின் மனதளவில் மட்டுமல்லாது உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சந்திரனே காரணமாக இருக்கிறார். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்ப விஷயங்கள் எல்லாம் சந்திரனின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றன.
சந்திரன் இயற்கை தத்துவப்படி நீருக்கு ஆதாரமாக இருப்பவர். சந்திரனின் ஆட்சி வீடு கடக ராசியாகும். இது ஜலராசி இதனை கடக ஆழி என்று சொல்வார்கள். உச்சவீடு ரிஷபம், நீச்ச வீடு விருச்சிகம். நீர் இருக்கும் இடமெல்லாம் சந்திரன் ஆதிக்கம் செய்யும் இடங்கள்தான். கடல் சார்ந்த அறிவியல் நுட்பங்கள், நதி, நதிக்கரை, கடற்கரை, ஏற்றுமதி, இறக்குமதி, இரவுக்கு அதிபதி, தாயார், தாய்வழி உறவுகள், சுவாசம், நுரையீரல், இடது கண், இயற்கை பருவ மாற்றங்கள், பெண்களின் பருவகால மாற்றங்கள், விவசாயம், செடி கொடிகள், அந்தந்த பருவ காலத்திற்கேற்ப செய்யப்படும் தொழில்கள் என எங்கும் வியாபித்து இருப்பவர் சந்திரன்.
சந்திரன் மனோகாரகன். ஒருவரின் கற்பனை சக்தியை அதிகரிப்பவர். எண்ணம், செயல், சொல், புத்தியை சரியாக கொண்டு செல்பவர் சந்திரனே. ஜாதகத்தில் சந்திரன் சரியாக இருந்தால் எல்லாமே சரியாக இருக்கும். அதே நேரத்தில் ஜாதகத்தில் சந்திரன் நீசம் பெற்றோ பலம் குறைந்தோ பாவ கிரகங்களுடன் சேர்ந்தோ இருந்தால், பாதிப்பு ஏற்படும்.
சந்திரனுக்கும் மனித மனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பெண்களின் மனதளவில் மட்டுமல்லாது உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சந்திரனே காரணமாக இருக்கிறார். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்ப விஷயங்கள் எல்லாம் சந்திரனின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றன. இதைத்தான் மாணிக்கவாசகர், திருவாசகத்தில் 'உருத்தெறியா காலத்தே என் உட்புகுந்து உளம் மன்னி' என்று குறிப்பிடுகிறார். அந்தக் கரு உருவாகும்போதே சந்திரனின் செயல்பாடுகள் தொடங்கிவிடுகின்றன.
ஒரு பெண்ணின் உடலில் ஹார்மோன்களின் இயக்கத்தால் பருவ மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த ஹார்மோன் இயக்கத்தை சந்திரன் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.எனவே பெண்ணினுடைய கரு முட்டை கருத்தரிக்கிற நிலைக்கு போவதற்கு சந்திரன் சஞ்சாரம் முக்கியமாகும். ஒரு பெண் கரு தரிப்பதற்கு சூரியன்-சந்திரன் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பதோடு பூமிகாரகன் என்று சொல்லக்கூடிய செவ்வாயும் கெட்டுவிடக்கூடாது. செவ்வாய் ரத்தகாரகன். பெண்கள் பூப்படைவதற்கு முக்கிய காரணமே செவ்வாய்தான்.
ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை பொறுத்து இந்த மாதவிலக்கு சரியான பருவத்தில் வர வேண்டும். மாதவிலக்கு என்பது சினைப்பையில் உருவான அவளுடைய முட்டை 28 தினங்களுக்கு பிறகு வெளியேற்றப்படும் நிகழ்ச்சியாகும். அதாவது எந்த திதியில் அவள் மாதவிலக்கு அடைகிறாளோ அதிலிருந்து 28 வது திதியில் புதிய கருமுட்டை உருவாகும். இந்த சமயத்தில் தாம்பத்ய உறவு நிகழ்ந்தால் கர்ப்பம் ஜனிக்கும். 28 தினங்களுக்கு ஒரு முறை பெண் மாதவிலக்கு அடைந்தால் ஆரோக்கியமான உடல் நிலையுடன் இருக்கிறார் என்று அர்த்தம்.
கரு உருவான உடன் எந்த நட்சத்திரத்தில் ஒரு குழந்தை ஜனிக்க வேண்டுமோ, அந்த நட்சத்திரத்தின் தசா, புக்தி, அந்தரம் எல்லாம் தொடங்கிவிடுகின்றன. அதேபோல் லக்னம் மற்ற கிரக அமைப்புகள் எல்லாமும் முடிவாகி செயல்பட ஆரம்பிக்கின்றன. இந்தக் கணக்கை வைத்துத்தான் குழந்தை பிறந்தவுடன் மாதா கர்ப்ப செல்லு நீக்கி மீதி இந்த தசையில், இந்த புக்தியில், இந்த அந்தரத்தில் இவ்வளவு வருடம், மாதம், நாள் என்று பஞ்சாங்கத்தின் துணையுடன் கணக்கிடுகிறோம்.
ஒரு பிறந்த உடன் அவரது ஜாதகத்தில் சந்திரனுடன் நிழல் கிரகங்களான ராகுகேது சம்பந்தப்படும்போது கிரஹண தோஷம் உண்டாகிறது. கிரக சேர்க்கைகளில் நன்மை, தீமை இரண்டும் உண்டு. இது அவரவர் வாங்கி வந்த வரம். கிரக சேர்க்கைகள் இருக்கும் இடம். ஜாதக பலம், பூர்வ புண்ணிய பாக்கிய பலம் ஆகியவற்றை வைத்துத்தான் யோக, அவயோகங்கள் அமைகின்றன. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன், ராகுகேது, செவ்வாயுடன் சம்பந்தப்படும்போது அவர் மிகச்சிறந்த மருத்துவராக இருப்பார். அதேநேரத்தில் பயம், படபடப்பு, கோபம், வெறி, விரக்தி, இயலாமை, அவமான உணர்ச்சி, சுய பச்சாதாபம், செயல் இழப்பு, பிறரை சார்ந்து இருப்பதால் உண்டாகும் ஆற்றாமை, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களை சந்திரன், ராகுகேது கிரகங்கள் ஏற்படுத்துகின்றன.
சனியும், சந்திரனும் கூட்டணி சேர்வது, பார்த்துக்கொள்வது புனர்பூ தோஷத்தை ஏற்படுத்துகிறது. ஒரே ராசியில் சனியும், சந்திரனும் சேர்ந்திருப்பது, சனியின் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது, சனி சந்திரன் பார்வை, பரிவர்த்தனை, இந்த தோஷத்தை தரும். இதன் மூலம் மன சஞ்சலம், சபலம் அதிகம் கொண்டிருப்பார்கள். திருமண விஷயத்தில் எல்லாம் கூடிவந்தாலும் திருமணம் முடியும் வரை ஒரு நிச்சயமற்றதன்மை இருக்கும். திருமணம் முடிவதில் பாதிப்பு இருக்கும்.
ஜோதிடத்தில் சந்திரன் முக்கியமான கிரகம். சூரியன் அப்பா என்றால் சந்திரன் அம்மா இருவரும் நல்ல நிலையில் இருக்க வேண்டியது ஜோதிடத்திற்கு அவசியமானது. சந்திரன் இருக்கும் நிலையை வைத்து அம்மாவின் பாசம், அம்மாவின் சொத்துக்கள் அவரது உடல் நலம் பற்றியவைகளை அறியலாம். சந்திரன் ரிஷபம், கடகம் ராசியில் இருக்கப் பிறந்தவர்கள் பாசமாக இருப்பார்கள். அம்மாவின் மீது பாசத்தை பொழிவார்கள்.
சந்திர பகவானின் தசையானது சில லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலப் பலனை அதிகம் தரும். குறிப்பாக சந்திரனுக்கு நட்பு கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாயின் லக்னமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் அதிபதி என்பதால் அனுகூலமான பலன்களை தருவார். விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதி என்பதால் அனுகூலப்பலனை தரமாட்டார். தனுசு லக்னத்திற்கு 8ம் அதிபதி சந்திரன் என்பதால் ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே நற்பலன்களை தருவார். கடக லக்னத்திற்கு சந்திரன் லக்னாதிபதி என்பதால் கடக ராசிக்கு சந்திர தசை மிகவும் சாதகமான பலனை உண்டாகும். சிம்ம லக்னத்திற்கு சந்திரன் 12ம் அதிபதி என்றாலும் அவர் லக்னாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகம் என்பதால் ஓரளவுக்கு நற்பலனை சந்திரன் தசை காலத்தில் பெறலாம்.
சந்திர திசையின் போது ஏழரை சனியோ, அஷ்டமத்து சனியோ நடந்தால் விபத்துகள் ஏற்படும். பெண்களின் மூலம் பெயர் கெடுதல் அவமானங்கள் ஏற்படும். ஜாதகத்தில் தேய் பிறை சந்திரனாக இருந்தாலும் வளர் பிறை சந்திரனாக இருந்தாலும் சந்திரன் எந்த ராசியில் நின்றாலும் அதனுடன் ஏழரை நாட்டு சனி நடந்தால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் 8, 12,ம் இடங்களில், இருந்து புக்தி நடந்தாலும், தசா நாதனுக்கு 8, 12ல் இருந்து புக்தி நடைபெற்றாலும் சனி பகவான் நீசம் பகை பெற்று பாவ கிரக சேர்க்கை, பார்வை பெற்று தசா நடைபெற்றாலும் உடல்நிலை பாதிப்பு, எதிர்பாராத விபத்துக்களில் சிக்க நேரிடும்.
சந்திர தசை நடைபெறும் காலங்களில் சந்திரன் பலமிழந்து பாவிகள் சேர்க்கை பார்வை பெற்று தசை நடைபெற்றால் திருப்பதி ஸ்ரீவெங்கடாசலபதியை வழிபாடு செய்வது நல்லது, பச்சரிசியை தானமாக வழங்கலாம். சோமவார விரதம் மேற்கொள்வதாலும் தீமைகள் நீங்கி நற்பலன்களை ஏற்படுத்தும். பவுர்ணமி தினத்தில் திங்களூரில் உள்ள சந்திர பரிகார தலங்களுக்கு சென்று தரிசனம் செய்து வரலாம்.












Click it and Unblock the Notifications