பொங்கலோ பொங்கல்.. உறவுகளுடன் கூடி கொண்டாடுவோம்..காப்பு கட்ட..பொங்கல் வைக்க நல்ல நேரம்
மதுரை: தமிழகத்தில் போகி தொடங்கி காணும் பொங்கல் வரை பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து காப்பு கட்டவும், தை முதல்நாளில் பொங்கல் வைக்கவும் நல்ல நேரம் எப்போது என்று பலரும் தேடத் தொடங்குவார்கள். வீடுகளில் காப்பு கட்டவும் பொங்கல் வைக்கவும் பஞ்சாங்கத்தில் நல்ல நேரம் குறிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். தீபாவாளி என்றால் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து பலகாரம் சாப்பிட்டு முடிந்து விடும். அதே நேரத்தில் பொங்கல் பண்டிகை என்பது நான்கு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும் இன்றைக்கும் கிராமங்களில் பொங்கல் பண்டிகை விளையாட்டு விழாக்களுடன் கோலாகலமாக உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. பல ஊர்களில் விவசாயம் செழித்து வளர்ந்துள்ளது. வழக்கமான உற்சாகத்துடன் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் ஜனவரி 14ஆம் தேதி இந்த ஆண்டு போகிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் மாவிலை தோரணங்களால் அலங்கரித்து காப்புக்கட்டுவார்கள். போகி நாளில் மாலை 6 மணிக்கு மேல் காப்பு கட்டுவதற்கு ஏற்ற நேரம். சிலர் பொங்கல் நாளில் காலையில் காப்பு கட்டுவார்கள்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாளாகவும் நம் வளர்ச்சிக்கு காரணமான இயற்கைக்கும்,இந்திரன், சூரியன், உபேந்திரனுக்கு படையல் போட்டு செங்கரும்பு வைத்து அலங்கரித்து நன்றி கூறி வழிபடுவார்கள். மழை வளம் சிறக்கவும் கிராமங்களில் இன்றைக்கும் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளில் புதுப்பானையை இஞ்சி, மஞ்சள் கொத்து வைத்து கட்டி அலங்கரித்து புத்தரிசியில் பொங்கல் வைத்து சூரிய கடவுளுக்கு நன்றி கூறும் நாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை திருநாளில் வீட்டின் நடு கூடத்திலோ, வெளியிலோ அழகான கோலமிட்டு புது அடுப்பு வைத்து புது மண்பானையை அலங்கரித்து கோலமிட்டு கழுத்தில் இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து கட்டி அடுப்பு மூட்டி புதுப்பானையில் புது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய் போட்டு சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாக குரல் எழுப்புவார்கள். சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக காலை 8.00 மணி முதல் 10 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும்.
விளைந்த பயிரை அறுவடை செய்து தானியமாக்குவதற்கு தொழிலாளர்கள் உதவுகிறார்கள். பயிர் நடுவதற்கு ஏதுவாக உழவுக்கும், அறுவடைக்குப் பின் போரடிப்பதற்கும், விளைந்த தானியங்களை உரிய இடத்திற்குக் கொண்டு செல்வதற்கும் கால்நடைகள் பெரிதும் உதவுகின்றன. கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 16 ஆம் தேதி திங்கட்கிழமை கால்நடைகளை குளிப்பாட்டி அலங்கரித்து மாட்டு தொழுவத்தையும் அலங்கரித்து பொங்கல் வைக்கலாம். மாடு வளர்க்காதவர்கள், கால்நடைகள் இல்லாதவர்கள் பசுவுடன் கூடிய கிருஷ்ணர் பொம்மையை வைத்து பொங்கல் வைத்து வழிபடலாம். திங்கட்கிழமை மாட்டுப்பொங்கல் நாளில் காலை 6 மணி முதல் 7.30 மணிவரை பொங்கல் வைத்து வழிபடலாம். மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம்.
நாம் வீட்டில் சமைத்த சாதத்தை நமது உடன் பிறந்தவர்களின் நன்மைகாக, காக்கா குருவி உள்ளிட்ட அனைத்து உயிர்களுக்கும் அளிக்க வேண்டும். ஆற்றங்ரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ ,மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து 5 வகையான சாதங்களை வைக்கவேண்டும். காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம். கூடப்பிறந்த சகோதரர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும் என்றுச் சொல்லி படையல் வைக்க வேண்டும். காணும் பொங்கல் செவ்வாய்க்கிழமை ஜனவரி 17ஆம் தேதி காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரைக்கும், காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரைக்கும் பொங்கல் வைக்க நல்ல நேரம்.
பொங்கல் பண்டிகை நாள் தொடங்கி காணும் பொங்கல் நாள் வரைக்கும் தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதைக்காணவே வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மதுரைக்கு வருவார்கள். வாடிவாசலில் இருந்து துள்ளி வரும் காளைகளை வீரர்கள் அடக்கி பரிசுகளை தட்டிச்செல்வார்கள். நேரில் காண முடியாதவர்கள் தொலைக்காட்சியில் நேரலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசிப்பார்கள்.
பொங்கல் பண்டிகை நாளில் விவசாயத் தொழிலாளர்களை வீடுகளுக்கு அழைத்து, சூரியனுக்குப் படைத்த பொங்கல் உள்ளிட்டவற்றை சாப்பிட கொடுத்து, அவர்களுக்குத் தேவையான வேஷ்டி, துண்டு, சேலை உள்ளிட்ட துணிகளையும் வழங்கி கவுரவம் செய்வார்கள். கூடவே சிறிய தொகை ஒன்றை பொங்கல்படியாக அளிக்கும் வழக்கமும் உள்ளது. பல ஊர்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், வயதில் சிறியவர்களுக்கும் பெரியவர்கள் பொங்கல்படி அளிப்பார்கள்.
பொங்கல்படி வாங்குவதற்கென்றே காணும் பொங்கல் நாளில் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும் வழக்கமும் இருக்கிறது. பொங்கல்படி எனும் சிறிய தொகையை விடவும், பொங்கல் திருநாளில் உறவினர்கள் ஒருவரையொருவர் சந்தித்து, பேசிக் கொள்வதுடன் நீண்ட காலம் பார்க்காமல் இருப்பவர்களும் சந்திக்க ஏதுவாகிறது. இதனால் உறவினர்களுக்கு இடையேயான உறவும் வலுப்படும். எந்த பண்டிகை என்றாலும் உறவுகளுடன் கொண்டாடினால்தானே மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த தை திருநாளில் உறவுகளுடன் இணைந்து பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்.












Click it and Unblock the Notifications