திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜிலேபி, முறுக்கு பிரசாதம் 4 மடங்கு விலை உயர்வு - பக்தர்கள் அதிருப்தி
திருப்பதி ஏழுமலையான் வருமானத்திலேயே கை வைத்து விட்டது கொரோனா காலம். வருமானத்தை அதிகரிக்க பிரசாத விலையை 4 மடங்கு உயர்த்தியுள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருப்பாவாடை சேவையில் வழங்கப்பட்டு வரும் பிரசாதத்தின் விலை நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பக்தர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் திருப்பாவாடை சேவையின் போது ஏழுமலையானுக்கு புளியோதரை, ஜிலேபி, முறுக்கு ஆகியவை நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு வழங்கப்படும் ஸ்ரீவாரி பிரசாதம் சிறப்பு வாய்ந்தது.

ஏழுமலையானுக்கு தினசரி, வாராந்தர, வருடாந்திர சேவைகள் நடைபெற்று வருகின்றன. இதில் தினசரி சேவைகளான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு ஏழுமலையானின் தரிசனத்துடன் இலவசமாக 2 பெரிய லட்டு வழங்கப்படுகிறது.
திருக்கல்யாண சேவைக்கு 2 பெரிய லட்டுகள், 2 வடைகள், 5 சிறிய லட்டுகளும் வழங்கப்படுகின்றன. இதுவே வாராந்திரசேவைகளான விசேஷ பூஜைக்குஒரு பெரிய லட்டு, ஒரு வடை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவைக்கு 2 பெரிய லட்டு,2 வடைகள், சகஸ்ர கலசாபிஷேகத்துக்கு 2 பெரிய லட்டு, 2வடைகள், 2 அப்பம், திருப்பாவாடை சேவைக்கு 1 பெரிய லட்டு, 1 வடை, 1 ஜிலேபி, 1 முறுக்கு, அபிஷேகம் மற்றும் வஸ்திர சேவைக்கு 2 பெரிய லட்டு, 2 வடைகள், நிஜபாத சேவைக்கு 2 பெரிய லட்டும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
திருமலையில் உள்ள லட்டு பிரசாத மையங்களில் வங்கி ஊழியர்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவா உறுப்பினர்கள் இணைந்து பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகம் செய்து வந்தனர். இந்நிலையில் டெண்டர் மூலம் பெங்களூரு கேவிஎம் இன்ஃபோ எனும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை மொத்தம் 164 இடங்களில் பணியில் அமர்த்த தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.
இதில் முதல் கட்டமாக லட்டு பிரசாத மையங்களில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யும் பணியை தனியார் ஊழியர்கள் நேற்று தொடங்கினர். தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி இதனை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,
பக்தர்களுக்கு தரமான சேவை வழங்க சில சேவைகள் தனியார் வசம் வழங்கப்படுகிறது. லட்டு விநியோக மையங்கள், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள ஸ்கேனிங் பகுதி, திருப்பதியில் உள்ள சர்வ தரிசன டோக்கன் விநியோக மையங்கள், தங்கும் அறை ஒதுக்கும் மையங்கள் ஆகிய இடங்களில் மொத்தம் 430 தனியார் ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர் என்று தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருவாய் கடந்த ஆண்டிலிருந்து குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட போது பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் வருவாய் குறைந்து உண்டியல் பணத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர், நிலைமை சரியாகி பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் கோவிலில் பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருப்பாவாடை சேவையில் வழங்கப்பட்டு வரும் பிரசாதத்தின் விலை நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பக்தர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் திருப்பாவாடை சேவை நடத்தப்படும். வெங்கடேசப் பெருமாளுக்கு இரண்டாவது அர்ச்சனைக்குப் பிறகு நடைபெறும் நிவேதனம் 'திருப்பாவாடை சேவை' ஆகும். இதை 'அன்ன கூடோத்ஸவம்' என்றும் கூறுவார்கள்.
வியாழக்கிழமை காலை 6 மணிக்கு எம்பெருமான் மூலமூர்த்திக்கு அணிந்துள்ள ஆபரணங்கள் அனைத்தையும் களைந்து விடுவார்கள். பின்னர் பெருமாளுக்கு இடப்படும் திருநாமத்தின் அளவை நன்றாகக் குறைத்து கண்கள் நன்றாக தெரியும்படிச் செய்வார்கள்.
வெங்கடேசப் பெருமாளுக்கு எதிராக மலைபோன்று புளியோதரையை குவித்து வைப்பர். புளியோதரையுடன் ஜிலேபியையும், முறுக்கையும் வைத்து பூவினால் அலங்கரிப்பர். இந்த புளியோதரையை நேராக கருவறையில் உள்ள எம்பெருமானுக்கு நிவேதிப்பர். இச்சேவையில் ஆர்ஜிதம் செலுத்தும் பக்தர்களும் பங்கு கொள்ளலாம். இச்சேவையின் போது வேத பண்டிதர்கள் வேத பாராயணம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பின்னர் பக்தர்களுக்கு இச்சேவையுடன் ஸ்வாமி நேத்ர தரிசனமும் உண்டு.
ஏழுமலையானுக்குப் படைக்கப்பட்ட ஜிலேபி, முறுக்கு ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு முறுக்கு, ஒரு ஜிலேபியின் விலை இதுவரை 100 ரூபாயாக விற்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அவை 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பக்தர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications