For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஸாரிப்பா.. நான் ஏமாந்துட்டேன்".. நிலவுக்கு நெருப்பென்று பெயர் (10)

Google Oneindia Tamil News

சுதா அறிவழகன்

விஸ்வநாதனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அப்பாடா நினைத்தது நடந்து விட்டது. இனி நம் மகள் நம் சொல்லைக் கேட்பாள் என்ற ஆசுவாசம் அவருக்குள் பற்றிப் படர்ந்தது.

முகத்தில் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் "என்னம்மா சொல்றே.. என்னாச்சு.. தெளிவாச் சொல்லும்மா" என்றார்.

"சுனில் சபலப் புத்தி உள்ளவன் போலப்பா.. யாரோ ஒரு பொண்ணு கூட நெருக்கமா இருக்கான் போல.. .போனில் பேசியபோது தெரிய வந்துச்சு... அதிர்ச்சியா இருக்குப்பா" என்றாள் மலர் விம்மியபடி.

"சாவித்ரி எபக்ட்" அபாரமா வேலை பார்த்துக்கு போலயே.. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார் விஸ்வநாதன். இருந்தாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல்,முகத்தில் அதிர்ச்சியை ஏற்றிக் கொண்டார்.

"அதுக்குதாம்மா நான் அப்பவே சொன்னேன்.. நீதான் கேட்கல"

"ஸாரிப்பா.. நான் ஏமாந்துட்டேன்.. வாழவே பிடிக்கலை"

வெடித்து அழுத மகளை இப்போது நிஜமான பாசத்துடன் தேற்றினார் விஸ்வநாதன். மனதுக்குள் அவளது காதல் முறிந்தாலும் கூட அந்தக் காதலால் மகளுக்கு மனதில் இப்படி கவலை வந்து விட்டதே என்ற வருத்தமும் சேர்ந்து கொண்டது.

"நான் கொஞ்சம் தனியா இருக்கறேன்ப்பா" என்றபடி அழுது கொண்டே தனது அறைக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொண்டாள் மலர்.

படுக்கையில் போய் விழுந்த அவள் கதறிக் கதறி அழுதாள்.. என்னோட சுனிலா இப்படி என்ற அதிர்ச்சி ஒருபக்கம், ஏமாந்து விட்டோமே என்ற வேதனை மறுபக்கம்.. அவளுக்குள் பெரும் புயலையே ஏற்படுத்தி புரட்டிப் போட்டது.. நீண்ட நேரம் அழுது கொண்டிருந்த அவள் அந்த அயர்ச்சியில் அப்படியே தூங்கிப் போனாள்.

Nilavkukku Neruppendru Peyar Tamil series episode 10

ஒரு புயல் கரையைக் கடந்தது போல இருந்தது அவள் படுக்கையில் கிடந்த கோலம்.

... கடந்த காலத்தை சற்றே நினைத்துப் பார்த்து மீண்டார் விஸ்வநாதன். இன்று மீண்டும் சுனில் மூலம் எனது மகளின் மனதுக்குள் ஒரு புயல்.. இதை வளர விட்டு விடக் கூடாது. அந்த நேரத்தில்தான் கருணாவின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அவனை வைத்து சுனிலின் கதையை முடிக்க முயற்சித்தார். கருணாவுக்கும் வேறு ஒரு கணக்கு இருந்தது. அதை மனதில் கொண்டு அவனும் களத்தில் குதித்தான். ஆனால் எல்லாம் தப்புக் கணக்காகி விட்டது.

கை தவறி போய் விழுந்த கண்ணாடி போல இப்போது நிலை குலைந்து போனார் விஸ்வநாதன்.. இனி வேறு வழியில்தான் அவனது கதையை முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த அவர் அடுத்து என்ன பண்ணலாம் என்ற சிந்தனைக்குள் மூழ்கினார்.

..... மருத்துவமனை அறையிலிருந்து வெளியே வந்த சுனிலுக்கு ஒன்றுமே புரியவில்லை. கொலை செய்யும் அளவுக்கு ஒருவன் துணிவானா.. அதுவும் இப்படி மருத்துவமனையில்.. வேறு ஏதாவது காரணம் பெரிதாக இருக்குமா என்று அவனுக்குள் குழப்பம். இதை எப்படி ப்ரீத்தியிடம் கேட்பது என்றும் தயக்கமும் கூடிக் கொண்டது.

மருத்துவமனை வளாகத்தில் இப்படியாக யோசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தவன் கண்ணில் மலர்விழி பட்டாள். அவளும், சுனிலைப் பார்த்து விட்டாள்.

வேறு வேலையாக எங்கே போய்க் கொண்டிருந்தவள், சுனிலைப் பார்த்ததும் நடையை அவன் பக்கம் திருப்பி அவனை நோக்கி வந்தாள். சுனிலுக்குள் சின்னதாக இறுக்கம் குடியேறியது.. இவள் ஏன் நம்மை நோக்கி வருகிறாள் என்று அவனுக்குள் சங்கடம்.

சுனிலிடம் வந்த மலர்.. கண்கள் அகல.. எப்படி இருக்கீங்க சுனில்.. ஏன் இங்கே இருக்கீங்க.. உங்க பிரண்ட் நல்லாயிட்டாங்களா.. என்று அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கினாள்.

பேன்ட் பாக்கெட்டுக்குள் இடது கையை வைத்துக் கொண்டு, வலது கையால் டி சர்ட்டை மேலாக தொட்டபடி "பரவாயில்லை.. நல்லாருக்காங்க.. திடீர்னு ஒரு சம்பவம் நடந்ததால் அதிர்ச்சியாயிட்டாங்க என்றான் அவளது கண்களைப் பார்க்காமல் தவிர்த்தபடி.

"ம்.. நானும் கேள்விப்பட்டேன்.. யாரது சுனில்.. ஏன் அப்படி நடந்தது" என்று கேட்டாள் மலர்.

"தெரியலை.. யார்னு தெரியலை.. ப்ரீத்தியோட மாமாவோட வேலைன்னு போலீஸ் சஸ்பெக்ட் பண்றாங்க" என்றான் சுனில்.

"டீ சாப்பிடலாமா சுனில்"

"இல்லை மலர்.. இப்பத்தான் சாப்பிட்டேன்" தெரிந்தே பொய் சொன்னான் சுனில்.

ம்.. என்று மெல்சொல்லிக் கொண்ட மலருக்கு அதற்குள் மேல் பேச்சை எப்படி தொடருவது என்பதில் அவளுக்கும் குழப்பம்.. சுனிலுக்கும் விட்டால் போதும் என்ற மன நிலை.

சரி வர்றேன் மலர், அப்புறம் பார்க்கலாம் என்று கூற வாயைத் திறந்தான் சுனில்..

அதற்குள் மலர் குறுக்கிட்டு... "சுனில் நல்லா இருக்கானா.. ஏதாவது தகவல் தெரிஞ்சுதா"

"நல்லாருக்கான்.. பட் அதிக தொடர்பு கிடையாது"

"ம்ம்.. அவனை இப்பக் கூட என்னால மறக்க முடியலை.. பட், அவன் செய்த செயல்களையும் மறக்க முடியலை"

"ஐ நோ.. புரியுது"

"அவன் பெயரை நீங்களும் வச்சிருப்பதால சில நேரம் உங்களைக் கூட நான் அவனா நினைச்சு பேசிருக்கேன்.. ஆனால் நீங்க அவனுக்கு அப்படியே நேர் எதிர்"

"தெரியுமே.. அவனை நினைச்சுக்கிட்டு என்னையக் கூட திட்டிருக்கீங்களே.. அது மட்டுமா. உங்களைப் போலத்தான்.. அவன்னு நினைச்சுட்டு என் மேல நிறையப் பேர் தப்பாப் பேசிருக்காங்க" .. சுனிலின் வார்த்தையில் சற்றே வெறுப்பு ஏற்பட்டது.

உண்மைதான்.. இந்த சுனிலின் நண்பன்தான் அந்த சுனில்.. அந்த சுனிலை நினைத்துக் கொண்டுதான் இந்த சுனில் மீது பாய்ந்து தாக்கப் போய் விட்டான் அந்த கருணா கிறுக்கன். ஆனால் இந்த மேட்டர் இன்னும் சுனிலுக்கும், மலருக்கும், ப்ரீத்திக்கும் தெரியவில்லை..!

"சரி மலர்.. நான் கிளம்பறேன்.. ப்ரீத்தி வெயிட் பண்ணிட்டிருப்பாங்க"

"ஓ.. குளோஸ் பிரண்ட் மலரை விட ப்ரீத்தி ரொம்ப முக்கியமாயிட்டாங்களா சுனில்" .. மலரின் குரலில் ஒரு ஏக்கம் இழையோடியது.

"சேச்சே.. அப்படியெல்லாம் இல்லை.. ஒரு வேளை கொடுத்திருந்தாங்க.. அதை முடிக்கலை.. காத்திட்டிருப்பாங்க.. அதான்.. உன்னைப் போய் நான் கட் பண்ணப் பார்ப்பேனா"

"பரவாயில்லை சுனில்.. நீங்க ப்ரீத்தியைப் பாருங்க. நானும் வீட்டுக்குக் கிளம்பிட்டேன்.. நாளைக்கு மீட் பண்ணலாம்"

"ஓகே மலர்.. பை.. டேக் கேர்.. நான் வர்றேன்" ஓடாத குறையாக இடத்தை விட்டு நழுவினான் சுனில்.

அவன் போகும் வேகத்தைப் புரிந்து கொண்ட மலரிடமிருந்து நீண்டதொரு பெருமூச்சு வந்து விழுந்தது.. பக்கத்தில் இருந்த செடியே கருகிப் போகும் அளவுக்கு.. அத்தனை சூடு!

(தொடரும்)

பகுதி [1, 2, 3, 4, 5, , 7, 8, 9]பகுதி [1, 2, 3, 4, 5, , 7, 8, 9]

English summary
Nilavukku Neruppendru Peyar, New Tamil series Written by Sutha Arivalagan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X