Sivakarthikeyan: நீ எல்லாம் ஹீரோவாக முடியாதுனு சொன்ன தயாரிப்பாளர்! மேடையில் அவரை வைத்தே கலாய்த்த சிவகார்த்திகேயன்
சென்னை: தமிழ் சினிமாவில் மிமிக்ரி கலைஞராக, தொகுப்பாளராக தொடங்கி இன்று வசூல் சக்ரவர்த்தியாக உயர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு பின்னால், பல சுவாரசியமான சவால்களும், கிண்டல்களும் இருந்துள்ளன என்பதை சமீபத்திய ஒரு விழாவில் அவரே வெளிப்படுத்தியுள்ளார்.

வேட்டை மன்னனில் ஆரம்பம்
சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்த ஆரம்பக் காலகட்டங்களில், இயக்குநர் நெல்சன் சிம்புவை வைத்து இயக்க நினைத்த படம் 'வேட்டை மன்னன்'. இந்தப் படம் கைவிடப்பட்டாலும், அப்போதுதான் சிவகார்த்திகேயன் திரையுலகில் தன் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.
வேட்டை மன்னன் படத்தில் நெல்சனுக்கு உதவியாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் ஒரு சின்ன காமெடி கேரக்டரிலும் நடிப்பதற்காக இருந்தாராம். படத்தின்போதெல்லாம் நெல்சன் கதை சொல்ல சொல்ல சிவகார்த்திகேயன் எழுதிக் கொண்டிருப்பாராம்.
நட்பு சர்க்கிள்
அதன் பிறகு நெல்சன் தனியாக அலுவலகம் அமைத்தபோது, இயக்குநர் அருண்ராஜ் காமராஜா மற்றும் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இவர்களுடன் இணைந்துள்ளனர். அந்த நால்வரும் அப்போதிருந்துதான் நண்பர்களாக வலம் வந்திருக்கின்றனர்.
அன்று கிண்டல்... இன்று சாதனை
சமீபத்தில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதற்கான விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டபோது, அந்நிகழ்வின் தயாரிப்பாளரான கே.எஸ். சினிஷ் பற்றி ஒரு பழைய நினைவைப் பகிர்ந்து அரங்கத்தையே சிரிக்க வைத்தார்.
நெல்சன் அலுவலகத்தில் இருக்கும் சமயம், சினிஷ் ஒருமுறை சிவகார்த்திகேயனிடம், "நீ என்ன ஆக வேண்டும்னு ஆசைப்படுகிறாய்?" என்று கேட்டிருக்கிறார். அதற்குச் சிவகார்த்திகேயன் கிண்டலாக, "நான் ஹீரோவாக வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார். அதற்குச் சினிஷ், "சிவா, எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை? உங்களுக்கு டைமிங் நன்றாக வருகிறது. அதை பயன்படுத்தி காமெடி கேரக்டர் ஏதாவது முயற்சி பண்ணுங்க" என்று சட்டெனச் சொல்லிவிட்டாராம்.
சதீஷுக்கு காமெடியன்
இதை கேட்டு சிவா "ஏன் நான் ஹீரோவாக ஆசைப்பட கூடாதா?" என்று கேட்க, "தேவையில்லாத வேலை பாக்குறீங்க நீங்க" என்று சினிஷ் சென்றுவிட்டாராம். ஆனால், மதிய உணவு இடைவேளையிலும் திரும்பி வந்து, "சிவா, ஹீரோ நினைப்பு எல்லாம் வேண்டாம். இது உங்களுக்கு செட் ஆகாது, சதீஷ் ஹீரோவா நடிக்கலாம். அவருக்கு வேண்டுமென்றால் நீங்கள் காமெடியனா நடிக்கலாம்" என சொல்லியிருக்கிறார்.
சாதனைக்கு தடையில்லை
சினிஷ் அன்றைக்கு சொன்னதை சிவகார்த்திகேயன் நன்றாக மறந்துவிட்டாலும், நான்கு வருடங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோவாக வளர்ந்த பின், சினிஷ் ஒரு நாள் சந்திக்கும்போது பதறி போய் அவரிடம், "அன்னைக்குப் பேசுனதை நீங்க மனசுல எதுவும் வச்சிக்காதீங்க" என்று கேட்டிருக்கிறார்.
இந்த தகவலை தயாரிப்பாளரை மேடையில் வைத்து கொண்டு சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். அதோடு நான் ஹீரோவா ஆன பிறகு அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன் என்றும், அவர் மீது மன கஷ்டத்தில் இருக்கிறேன் என்றும் நினைத்து கொண்டு இருந்திருக்கிறார். ஆனால் உண்மையில் எல்லாரும் பிரிந்த பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்பு, சூட்டிங் என்று பிசியாக இருந்ததாலே நான் பேசவில்லையே தவிர நான் எதையும் பெருசா மனசுல எடுத்துக்கவே இல்ல. அவர் வந்து என்கிட்ட அதையே திரும்ப பேசும்போது தான் எனக்கு அது ஞாபகமே வந்தது என்று சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.
அன்று தான் வேண்டாம் என்று தடுக்கப்பட்ட ஹீரோ கேரக்டரில் இன்று கோடிகளில் சம்பளம் வாங்கிச் சாதித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். யாருடைய கிண்டலும், விமர்சனமும் ஒருவரின் முயற்சிக்கு தடையாக இருக்காது என்பதற்கு சிவகார்த்திகேயனின் பயணமே பெரிய உதாரணம்.












Click it and Unblock the Notifications