திருத்தணி ரயில் சம்பவம்.. அஜித் படங்கள் ரவுடிசத்தை ஊக்குவிக்கிறதா? வெடித்த விவாதம்
சென்னை: தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரவுடிசத்தை (குண்டரிசம் அல்லது கேங்க்ஸ்டரிசம்) ஊக்குவிப்பதாக விமர்சனங்கள் எப்போதும் உண்டு. குறிப்பாக நடிகர் அஜித் குமார் நடித்த பல படங்கள் ரவுடி அல்லது கேங்க்ஸ்டர் கதாபாத்திரங்களை மையப்படுத்தியவை. சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்களை இதை வைத்து விமர்சிப்பவர்கள் உண்டு. ஆனால் இது பெரும்பாலும் ரசிகர் போட்டிகளால் உருவாகும் கருத்து என்று கடந்து போக முடியாத கசப்பான உண்மைதான்.
முன்னாள் போலீஸ் அதிகாரிகள் பலர் தமிழ் படங்கள் ரவுடிகளை ஹீரோக்களாகக் காட்டுவதால் சமூகத்தில் மென்மையான பார்வை உருவாகிறது என்று பலமுறை டிவி விவாத நிகழ்ச்சிகளில் விமர்சித்துள்ளதை நாம் பார்த்துள்ளோம்.

ஆனால் அஜித்தின் படங்கள் எல்லாம் ரவுடிசத்தை ஊக்குவிப்பவை அல்ல. சில படங்கள் நல்ல செய்திகளைச் சொல்பவை (எ.கா. நேர்கொண்ட பார்வை - பெண்கள் பாதுகாப்பு, வலிமை-போதைப் பொருள் எதிர்ப்பு). ஆனால் அஜித்தின் பெரும்பாலான வெற்றிப் படங்கள் ரவுடியிசத்தை போற்றுபவையாக அமைந்தது ஒரு மோசமான முன் உதாரணம்தான்.
திருத்தணி ரயிலில் அரிவாளை வைத்து வட மாநில இளைஞரை வெட்டியவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தன்னை அஜித் ரசிகர் என்றே அடையாளப்படுத்தியுள்ளதால், அஜித் படங்கள் மீதான விமர்சனங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.
ரவுடிசம் அல்லது கேங்க்ஸ்டர் தீம் கொண்ட அஜித் படங்கள் (முக்கியமானவை):
- தீனா (2001): அஜித்தின் மாஸ் இமேஜை உருவாக்கிய படம். ரவுடி கதாபாத்திரம், "தல" என்ற பட்டப்பெயர் இதிலிருந்து வந்தது.
- அமர்க்களம் (1999): இளம் ரவுடியாக அஜித் நடித்தார். காதல் மற்றும் பழிவாங்கல் கலந்த கதை.
- அட்டகாசம் (2004): இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தில், ஒரு அஜித் தூத்துக்குடியில் பெரிய ரவுடியாம் (தூத்துக்குடி மொழி ஸ்டைலை சரியாக உச்சரிக்க சொல்லித் தராத இயக்குநர், ரவுடியிசத்தை வெகுவாக ஊட்டியிருப்பார் என்பது வேறு கதை)
- பில்லா (2007): இன்டர்நேஷனல் கேங்க்ஸ்டர்.
- பில்லா 2 (2012): டான் ஆகும் பயணம், ரவுடிசம் மையம். பில்லா 2 படமும் ரவுடி படம்தான்.
- மங்காத்தா (2011): வில்லத்தனமான போலீஸ், கொள்ளை கேங்.
- வீரம் (2014): "நல்ல ரவுடி", குடும்பத்துக்காக வன்முறையை பயன்படுத்தும் கதாபாத்திரம்.
- ஆரம்பம் (2013): ஆக்ஷன் திரில்லர், ரவுடி எலிமெண்ட்ஸ்.
- குட் பேட் அக்லி (2025): சமீபத்திய படமான இதிலும், அஜித் கேங்க்ஸ்டர்தான்
இப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும், ரவுடிசத்தை க்ளாமராகக் காட்டுவதாக விமர்சனம் உண்டு. மறுபக்கம், அஜித் படங்கள் போல விஜய், ரஜினி படங்களிலும் இதே தீம் உண்டு - இது தமிழ் சினிமாவின் பொதுவான போக்கு. ஆனால் அவர்கள் படங்களில் மொத்த படமும் ரவுடியிசத்தை க்ளோரிஃபை செய்யும் கதையாக பெரும்பாலும் இல்லை. ஆனால் அஜித்தான் தேடித் தேடி இப்படி படங்களை நடிக்கிறாரா என்ற கேள்வியை அவரது பிலிமோகிராபி கண்ணாடிபோல காட்டுகிறது.
200மாவது ஆண்டு தொடக்க காலத்தில், கோபக்கார இளைஞன் என்ற தோற்றம் அஜித்துக்கு தேவைப்பட்டது. அது அப்போதைய டிரெண்ட். இது ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தது. ஆனால் இப்போது ரவுடியிசத்தை பின்னணியாக கொண்ட படங்களை அஜித் தவிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறிவிட்டது. விஜய் இல்லாத சினிமா உலகில் இனி அஜித்தான் முடிசூடாத ராஜா. எனவே சிறப்பான கதைகளை தேர்ந்தெடுப்பதில், ஏற்கனவே சமூக பொறுப்பு கொண்டவராக அறியப்படும் அஜித், ஈடுபடுவார் என்று நம்புவோம்..












Click it and Unblock the Notifications