ஆண்டிராய்டு திரைகள்தான் நவீனப் பள்ளிகளின் அடையாளமா? அ. குமரேசன்
மனம், சமூகம், மொழி, கலை, தொழில், அரசு என எதுவானாலும் தன்னை நவீனப்படுத்திக்கொள்ளாத ஒன்று தேக்கமடைந்து பின்தங்கிவிடும். நவீனம் பற்றிய புரிதலை ஏற்படுத்துகிற இயக்கமாகிய கல்வியும், அதற்கான அடிப்படை இடமாகிய பள்ளியும் நவீனமாகாமல் இருக்கலாமா? இந்த ஏக்கத்திற்கு ஒரு ஆறுதலாக, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்துள்ள ஒரு பேட்டிச் செய்தி வந்திருக்கிறது. தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நவீனமயமாக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
திருச்சி மாவட்டம் கொடுமுடியில் அரசுப்பள்ளிக்குச் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களுடன் பேசுகையில், "தமிழகத்தில் உள்ள 58,000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நிதி நிலைக்கு ஏற்ப ஒன்றிய-மாநில அரசுகளின் நிதி உதவியோடு நவீனமயமாக்கப்படும்," என்று கூறியிருக்கிறார்.

ஓர் அரசுப்பள்ளிக்கான சுற்றுச்சுவரே இப்போதுதான் அமைக்கப்படுகிறது என்கிற நிலைமையில் (இதற்கெல்லாம் ஒரு விழா வேண்டுமா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும்) அமைச்சர் தெரிவித்துள்ள தகவல்கள் முக்கியமானவை. பட்ஜெட் கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வி தொடர்பாக முக்கியமான அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார் என்று அமைச்சர் தெரிவித்திருப்பதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
கல்விக்களத்தைப் பொறுத்தமட்டில், குறைந்தது பள்ளிக்கூடங்களாவது முழுக்கமுழுக்க அரசுப் பொறுப்பில் இயங்குபவையாக இருப்பதே எந்தவொரு நாடும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு அடையாளம். சோசலிச நாடுகள் மட்டுமல்லாமல், அமெரிக்கா, பின்லாந்து உள்ளிட்ட சில முதலாளித்துவ நாடுகளும் இந்த ஆரோக்கியத்தைப் பெற்றுள்ளன. அரசியல் அதிகாரம், மதச்சார்பு நிர்வாகம், இரண்டையும் பயன்படுத்திக்கொள்ளும் சாதுரியம், மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட நிர்ப்பந்தம் என நமது நாட்டில் பள்ளிக் கல்வியில் புகுந்துவிட்ட தனியார் வணிகம் வலுவாக ஊன்றியிருக்கிறது. இங்கேயும் முற்றிலும் அரசுப்பள்ளிகளே என்ற நிலை உருவாவதற்கு, அதற்கான கல்விக் கொள்கை உருவாவதற்கு இந்தியா இன்னும் எத்தனை தலைமுறைகளைக் கடக்க வேண்டியிருக்குமோ, தெரியவில்லை.
அதுவரையில், இன்றைய நிலையில், தரம், திறன், அடிப்படை வசதிகள், வாய்ப்புகள் என அனைத்து ஏற்பாடுகளிலும் அரசுக் கல்வியகங்களை முந்தியிருக்கச் செய்யும் முயற்சிகளேனும் மேற்கொள்ளப்பட வேண்டும். முழு அக்கறையோடு அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் வரவேற்கப்பட வேண்டும். தமிழகத்தில் நடந்துள்ள ஆட்சி மாற்றம் இவ்வாறு வரவேற்கத்தக்க சில ஒளிக்கீற்றுகள் பாய்வதற்குச் சன்னல்களைத் திறந்துவிட்டுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அறிவிப்பு அத்தகைய ஒன்றுதான்.
அரசுப் பள்ளிகள் விலகியிருக்க முடியுமா?
ஒரு பள்ளி நவீனமாவது என்றால் என்ன? ஆசிரியர்-பெற்றோர்-மாணவர் கலந்தாய்வுக்கூட்டங்களில் சில நவீனத் தேவைகளும், ஏற்கெனவே இருந்துவரும் பழைய கட்டமைப்புகளை நவீனப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளன. நல்ல கட்டடங்கள், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வசதியான இருக்கைகளுடன் கூடிய வகுப்பறைகள், எல்லோருக்கும் கசகசப்பின்மையை உறுதிப்படுத்துகிற காற்றோட்டத்திற்கான மின்விசிறிகள், தலைமையாசிரியருக்கும் வகுப்பறைக்குமான தகவல்தொடர்பு இணைப்புகள், கணினியமைப்புகள், புதுப்பிக்கப்பட்ட கரும்பலகைகள், புத்தம்புது மின்னணு வெண்பலகைகள், அந்தத் திரைகளில் உலகத்தையே சுற்றிப்பார்க்கச் செய்யும் முப்பரிமாணப் படக்காட்சிகள், தடையற்ற இணைய வசதிகள், விளையாட்டு மைதானத்தில் அறுந்து தொங்காமல் நெடுங்காலம் ஆடக்கூடிய ஊஞ்சல்கள், காற்சட்டையின் பின்புறத்தைக் கிழிக்காத சறுக்கேணிகள், பார்வைக்கு மட்டுமல்லாமல் பிள்ளைகள் எடுத்துப் படிப்பதற்குமான புத்தகங்களோடு நூலகங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், பராமரிக்கப்படும் கழிவறை, குழந்தைகளின் உடற்கட்டைப் பேணுவதற்கான விளையாட்டுகள், மூளையைக் கூர்தீட்டும் புதிராட்டங்கள் என்ற பல ஆலோசனைகளும் கோரிக்கைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.
கொரோனா வருகையால் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலைமையில், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இணையவழி வகுப்புகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. போட்டிக்குதிரைகளாக வளர்ப்பதே கல்வியின் லட்சியமாகப் பல தனியார் பள்ளி நிர்வாகங்கள், குழந்தைகளின் புரிதல் பற்றிய அறிவியல்பூர்வ புரிதலே இல்லாமல் ஆன்லைன் வகுப்பு அராஜகங்களைத் திணித்துவிட்டன. ஒப்பிட்டுப் பார்க்கும் பெற்றோர்களைத் திருப்திப்படுத்தவாவது இது தேவை என்ற பார்வையோடு அரசுப்பள்ளிகளிலும் இணையவழி வகுப்புகள், தொலைக்காட்சிப் பாடங்கள் என்று கொண்டுவரப்பட்டுவிட்டன. பள்ளியை நவீனமாக்க உதவுவதாகச் சொல்லிக்கொண்டு இணைய வகுப்புகளுக்கான கருவிகளோடு, பாடத் திட்டங்களையே தயாரித்து விற்பனை செய்கிற பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பள்ளி நிர்வாகிகளோடு பேரம் பேசுகிற காட்சிகள் கண்ணுக்குள் படர்கின்றன.
குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும் பள்ளிகள், அதுவும் கல்வி என்பது குழந்தைகளின் உரிமை என்ற உணர்வோடு உயிரோட்டமாக இருக்க வேண்டிய அரசுப்பள்ளிகள் நவீனத் தொழில்நுட்பங்களிலிருந்து விலகியிருக்க முடியாது. இடையூறற்ற இணையத் தொடர்பு வசதியுடன் அரசுப்பள்ளிகளின் எல்லாக் குழந்தைகளுக்கும் நவீன மடிக்கணினி, அலைபேசி உள்ளிட்டவை விலையின்றி வழங்கப்பட்டாக வேண்டும் என்ற கோரிக்கையைக் கல்வி உரிமைச் செயல்பாட்டாளர்கள் பலரும் வலியுறுத்தியிருக்கிறார்கள். பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும் இது போன்ற நவீன ஏற்பாடுகளில் அரசுப்பள்ளிகள்தான் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும்.
அதே வேளையில், நவீனம் என்றாலே இப்படியான கருவிகள் சார்ந்த ஏற்பாடுகள் மட்டும்தானா? பள்ளிக்கல்விக்கான கொள்கைகளில், பயிற்றுவிப்பு அணுகுமுறைகளில், பாடங்களில், ஆசிரியர்-மாணவர் உறவுகளில் நவீனம் தேவையில்லையா? நன்றாகப் படிப்பது என்றாலே நன்றாக மனப்பாடம் செய்யவைப்பது என்ற செய்முறையில் மாற்றம் வேண்டாமா? தேர்வுகளுக்குக் குழந்தைகளை வார்ப்படம் செய்கிற நடைமுறைகள் கற்றல் தேர்ச்சிக்கு இட்டுச்செல்வதில்லை என்ற உண்மையின் அடிப்படையில், அவர்களின் கேள்வித்திறன் வளத்தைச் செழிப்பாக்குகிற வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டுமல்லவா? உண்மையான கல்வி என்பது தயாரிக்கப்பட்ட கேள்விகளுக்கு தயார்நிலைப் பதில்களைச் சொல்ல வைப்பதல்ல, புதிய பதில்களைத் தேடத் தூண்டும் கேள்விகளைக் கேட்க ஊக்குவிப்பதுதான் என்று உலகம் முழுவதுமுள்ள சிறந்த கல்வியாளர்கள் சொல்கிறார்களே, அதற்கான பாதைகள் எப்போது திறக்கப்படும்?
பதிவேடுகளிலிலிருந்து விடுதலை
"முதலில் கல்வி அலுவலகங்களும் பள்ளி அலுவலகங்களும் இணையவழியில் இணைக்கப்பட வேண்டும். அதிகாரிகளின் கண்காணிப்பிற்காக என்றே ஆசிரியர்களுக்கு ஏராளமான பதிவேடுகள் இருக்கின்றன. அவற்றை இணையவழிக்கு மாற்றிப் பதிவேடுகளைக் குறைப்பது ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபடுத்த உதவும்," என்கிறார் அரசுப்பள்ளி ஆசிரியரான சிவா. மாணவர்களுக்கு இணக்கமான கண்ணோட்டங்களை ஆசிரியர்களிடையே கொண்டுசெல்வதற்காக 'கலகல வகுப்பறை' என்று நடத்திவருகிற சிவா, 'பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாடு - புதுச்சேரி' அமைப்பின் முன்னணிச் செயல்பாட்டாளருமாவார்.
ஆசிரியர்கள் முழுமையாக ஆசிரியப் பணியில் ஈடுபடுவதற்கான மற்றொரு தேவையாக, "தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப்பள்ளிகளிலும் அலுவலகத் தகவல்களை அனுப்புகிற, வெகுநேரத்தைச் சாப்பிடுகிற வேலையை ஆசிரியர்கள்தான் செய்கிறார்கள். அதிலிருந்து அவர்களை விடுவித்து, இதற்கென பள்ளிக்கு ஒரு அலுவலகப் பணியாளரை நியமிக்க வேண்டும். அரசுப்பள்ளிகளை நவீனப்படுத்துவதில் இது போன்ற முடிவுகளை மேற்கொள்வது இணைய வேண்டும்," என்று வலியுறுத்துகிறார்.

"அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துவதாக நவீன கண்ணோட்டம் இருக்க வேண்டும். முக்கியமாக இரண்டு அடிப்படை வசதிகள் - கழிவறை, குடிநீர். ஒரு பள்ளியில் எத்தனை குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்களோ அந்த எண்ணிக்கைக்குப் பொருத்தமாகக் கழிவறைகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். அல்லது, ஒரு பள்ளியில் எத்தனை கழிவறைகள் இருக்கின்றனவோ அதற்கான விகிதத்தில் குழந்தைகள் சேர்க்கப்பட வேண்டும். அருகில் உள்ள அரசுப் பள்ளியில் இந்த வசதிகள் இருக்குமானால் எதற்காகத் தொலைவில் உள்ள தனியார் பள்ளியைத் தேடப்போகிறார்கள்? குழந்தைகள் எண்ணிக்கைக்கு ஏற்ற ஆசிரியர்கள் எண்ணிக்கையும் கறாராகப் பின்பற்றப்பட வேண்டும். ஈராசிரியர் பள்ளி ஒன்று இருக்கிறது என்றால் அவர்களில் ஒருவர் தலைமையாசிரியராக இருக்கிறார், அதற்கான அலுவல்கள் அவருக்கு வந்துவிடுகின்றன. எல்லா வகுப்புகளுக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் இன்னொருவர்தான் ஒரே ஆசிரியர் என்றாகிவிடுகிறது. தொடக்கப்பள்ளியில் 1க்கு 20 என்று ஆசிரியர்-குழந்தைகள் விகிதம் பராமரிக்கப்படுவது நல்லது. குழந்தைகள் குழுவாகப் பழகிப் பயில்வதற்கு இது உதவும்," என்கிறார் சிவா.
மூளை-முதுகுச் சுமை
மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் நன்னாளுக்காக எல்லோருமே காத்திருக்கிறார்கள். அதே வேளையில், தோள்களில் மாட்டப்பட்ட புத்தக மூட்டைகளை முதுகுகளில் சுமந்துகொண்டு குழந்தைகள் செல்லும் காட்சி, இத்தனை புத்தகங்கள் அவர்களின் மூளைகளிலும் ஏற்றப்படுகின்றனவா என்ற மிரட்சி பின்தொடர்கிறது. மூன்று வயதிலிருந்தே குழந்தைகளின் கற்றல் திறன் வளரத்தொடங்கிவிடுகிறது என்பதாகச் சொல்லிக்கொண்டு இப்படி மூளையிலும் முதுகிலும் பொதியேற்றுகிற வன்மம் தொடங்குகிறது. அதிலும், தனியார் பள்ளிகளின் புத்தக மூட்டை பற்றிச் சொல்லவே வேண்டாம். இதிலே நவீன மாற்றம் தேவையில்லையா என்று கேட்கவைக்கிறது.
"நிச்சயமாக இதில் மாற்றம் வேண்டும். இத்தனை புத்தகங்களை எடுத்துச்செல்ல வேண்டிய தேவையே இல்லை. புத்தகத்தைப் பெரிய அளவில் போடுவது அல்ல நவீனம். எவ்வளவு பெரிய புத்தகமானாலும் அது ஒப்பிட்டுத் தெரிந்துகொள்வதற்கானதாகத்தான் இருக்க வேண்டும். ஆசிரியர் சொல்வதிலிருந்தும் உரையாடுவதிலிருந்தும் கற்பதுதான் இயற்கையான வளர்ச்சி," என்கிறார் சிவா. ஆம், இயற்கையை விட நிலையான நவீனம் இருக்கிறதா என்ன!
நவீனத்தின் பெயரால். சோதனை முறை என்ற சாக்கில் தற்போது சில கல்லூரிகளில் "கலவைக்கல்வி" என்ற ஒரு நடைமுறை கொண்டுவரப்படுகிறது. அதன்படி மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில் இணைய வழியில் 40 மதிப்பெண்களும், நேரடி வகுப்பில் 60 மதிப்பெண்களும் எடுத்தால் போதும். "இப்போது கல்லூரி அளவில் இருந்தாலும் அந்தச் சோதனை வெற்றிபெற்றுவிட்டதாகச் சொல்லி எல்லாக் கல்லூரிகளுக்கும் பிறகு எல்லாப் பள்ளிகளுக்கும் என்று கொண்டுவந்துவிடுவார்கள். நவீனம் என்றாலே ஐ-டி. ஏற்பாடுதான் என்பதற்குள் நுழைவது, படிப்படியாக இத்தனை ஆசிரியர்கள் தேவையில்லை என்ற நிலைமைக்குத்தான் இட்டுச்செல்லும்," என்று எச்சரிக்கிறார். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எல்லோருமே வேலை செய்யாமல் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும், அதன் மூலமாகவும் தனியார் வணிகத்தை வளர்க்கவும் விரும்புகிறவர்கள் அந்த நிலைமையை வரவேற்கக்கூடும்.
கதை படிக்கச் சொன்ன ஆசிரியர்
ஆசிரியர் என்பவர் வெறுமனே புத்தகப் பாடம் நடத்துகிறவர் மட்டுமல்ல. குழந்தையின் பன்முகப் பண்பு வளர்ச்சியில் ஆசிரியரின் உறவு முக்கியப் பங்களிக்கிறது என்று கல்வியாளர்கள் பலரும் கூறுகிறார்கள். பள்ளிக் காலத்தில், பாடத்தில் இடம்பெற்ற கதைக்கு விளக்கமளித்த ஆசிரியர், அப்படியே இலக்கியம் என்றால் என்று என்று எடுத்துச்சொன்னதும், அது பாடநூல்களைத் தாண்டிய புத்தக வாசிப்பில் ஆர்வத்தைத் தூண்டியதும் நினைவோட்டமாகின்றன. "யார் யார் வீட்டில் என்னென்ன பத்திரிகை வாங்குறீங்க? யாரெல்லாம் அதிலே வரும் கதைகளைப் படிக்கிறீங்க" என்று கேட்டவர், கை உயர்த்திய என்னைப் போன்றவர்களை வகுப்பறையிலேயே பாராட்டினார். மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மாலைப்பொழுதுகளில் சில முக்கியமான கதைகளைப் பகிர்ந்தார்.
மற்றொரு பள்ளியின் ஆசிரியரான எனது நண்பரொருவர், வகுப்பில் ஒரு பெண் குழந்தை சோர்வாகச் சாய்ந்திருப்பதையும் மற்றவர்களிடம் எரிந்துவிழுவதையும் கண்டு, அவள் முன் குனிந்து, அவள் காதுக்கு மட்டும் கேட்பது போல விசாரித்து, அவளுடைய அவதியைப் புரிந்துகொண்டு கழிவறை சென்றுவரச் செய்தார். சூடாக டீ வாங்கிவரச்சொல்லிக் கொடுத்தார். மறுநாள் வகுப்பறையிலேயே, மாதவிடாய் பற்றி வகுப்பெடுத்தார். "இதை முக்கியமா பயலுக ஞாபகம் வெச்சிக்குங்கடா," என்று சொன்னார் அந்த ஆண் ஆசிரியர். இப்படிப்பட்ட, அசூயை மனநிலையை மாற்றி அறிவியல் புரிதலைப் பதியவைக்க எந்த ஆண்டிராய்டு ஆசிரியரால் முடியும்? இப்படிப்பட்ட நவீனக் கல்விதானே பாலினம், பாலியல் சார்ந்த பாகுபாட்டு வக்கிரங்களைத் துடைத்தெறியப் பயன்படும்?
போக்குவரத்தில் நவீனம் பற்றிக் கூறும் சிவா, "இன்று பதினோராம் வகுப்பில்தான் சைக்கிள் கொடுக்கிறார்கள். ஆறாம் வகுப்பிலேயே கொடுத்தால், நடந்துசெல்லச் சிரமப்படுகிற குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும். அருகாமைப் பள்ளிக் கருத்தாக்கத்தோடு இது இணைகிறபோது ஆக்கப்பூர்வமான விளைவுகள் ஏற்படும்," என்கிறார். முக்கியமாக, நகரப்பேருந்துகளில் அபாயகரமாகத் தொங்கிக்கொண்டு செல்லும் குழந்தைகளுக்கு என்ன ஆகுமோ என்ற கவலையிலிருந்து சமூகம் விடுவிக்கப்பட்டுவிடுமே!
குழந்தைகளின் தேர்ச்சி நிலையை மதிப்பிடுவதற்காகக் கொண்டுவரப்பட்டது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (சிசிஇ). அதன் நோக்கம் சரியாகக் கொண்டுசெல்லப்படாததாலும், தேர்வுக்குத் தயாரிப்பதே பள்ளிகளின் நோக்கம் என்ற எண்ணம் கட்டப்பட்டுவிட்டதாலும், அதுவும் சேர்ந்துகொண்டு குழந்தைகளை வடிகட்டுகிற வேலையைத்தான் செய்கிறது. ஆகவே அதிலே நவீனச் சிந்தனை உள்ளிட்ட, பாட முறைகளில் பல மாற்றங்களைக் கல்விக் களச்செயல்பாட்டாளர்கள் பலரும் முன்வைக்கிறார்கள். தகவல் தொழில்நுட்ப நவீனக் கருவிகள் வகுப்பறைக்குள் நுழையவே கூடாது என்று சொல்லவில்லை. அவை, பாடத்திற்கு வெளியே உள்ள அறிவார்ந்த உலகத்தை அறிமுகப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமேயன்றி, பாடங்கள் அவற்றுக்குள் புகுந்துவிடக்கூடாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
நவீனத்தின் மெய்யான இயல்புகளையும் இலக்குகளையும் நோக்கி வெளிச்சம் பாய்ச்சுகிற இப்படிப்பட்ட கருத்துகளை உள்வாங்கிக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை தனது கதவுகளை விரியத் திறக்க வேண்டும். பள்ளிக்கல்வியில் பல முன்னுதாரணங்களைப் படைத்த தமிழகத்தில் இந்த நவீனமாக்கலிலும் அறிவியல்பூர்வ வழிகளை அக்கறையுள்ளவர்களோடு கலந்து பேசி உருவாக்கி இதிலேயும் சிறந்ததொரு முன்னத்தி ஏராக முடியும்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications