For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரன்சி, கரை வேட்டிகள், அடிதடி, டாஸ்மாக்-'திகு திகு' திருமங்கலம்

By Staff
Google Oneindia Tamil News

Latha Adiyaman, Muthuramalingam and Dhanapandian
-ஏ.கே.கான்

அதிமுக-திமுகவின் பண-படை பலத்தில் தேமுதிக வேட்பாளரி்ன் சத்தம் அடங்கிப் போய்விட்டதால் திருமங்கலத்தில் நிலவிய மும்முனைப் போட்டி இப்போது இருமுனைப் போட்டியாகிவிட்டது.

கரைவேட்டிகளின் மொட மொட டிரஸ், கரமுர குரல்கள், ரக ரகமான கார்கள், எங்கும் கொடி மயம், கரன்சி மழை, அடிதடி, வெட்டுடா குத்துடா சத்தம் என திருமங்கலமே திமிலோகப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த தொகுதியில் திமுக-அதிமுக தொண்டர்கள் மோதலில் லேட்டஸ்டாக சிக்கியது நடிகர் ராமராஜன். நேற்று மாலை அவரது காரை திமுகவினர் வழிமறி்த்து, 'அந்தலை சிந்தலையாக்கிவிட்டு', ''ரைட்டு, இப்ப போகலாம்'' என்று வழியனுப்பி வைத்ததாக புலம்புகின்றனர் அதிமுகவினர்.

பண பலமில்லா சரத் கட்சி வேட்பாளர்:

இந்தத் தேர்தலில் அ.இ.ச.ம.க. சார்பில் சரத்குமார் நிறுத்தியுள்ள வேட்பாளர் பத்மநாபனின் பிரச்சாரமும் இத்தனை நாட்களாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தனது டீ கடைக்கு வருவோருக்கு பன், டீ, வடை கொடுத்து ஓட்டு கேட்பதோடு, எப்போதாவது தான் கடையை மூடிவிட்டு பிரச்சாரம் செய்து வந்தார். இந் நிலையில் தான் சரத்குமார் அவருக்காக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

முதலில் தனது ரூ. 30 லட்சம் மதிப்புள்ள வீட்டை விற்றாவது தேர்தலில் செலவிடுவேன் என்று சொல்லித்தான் சீட்டை வாங்கினாராம் பத்மநாபன். இப்போதோ வீடு விற்கவி்ல்லை என்று சொல்லி கட்சியினருக்கு பிரச்சாரத்துக்குக் கூட 'துட்டை' கண்ணில் காட்டவில்லையாம்.

அமைச்சர்கள் தெலுங்கில் ஓட்டு வேட்டை:

இதற்கிடையே கடந்த முறை இப் பகுதியில் கணிசமாக உள்ள தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டுக்கள் விஜய்காந்தின் தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனுக்கே பெருவாரியாகக் கிடைத்தன. இதனால் அவரும் 20,000 ஓட்டுக்கள் வரை வாங்கினார்.

இம்முறை இந்த ஓட்டுக்களைக் குறி வைத்து நாயுடு சமூகத்தைச் சேர்ந்த அமைச்ச கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தெலுங்கு ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் கே.என். நேரு ஆகியோரை இறக்கிவிட்டுள்ளார் அழகிரி.

அவர்களும் இந்த மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தெலுங்கு மொழியில் பேசி ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.

கறி விருந்துகள், கரன்சிகள்:

அதே போல திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு தொகுதி முழுவதும் கறி விருந்துகளை வைத்து அசத்தி வருகின்றன. முட்ட முட்ட சோறு போட்டு, கையில் கரன்சியையும் வைத்து ''ஆத்தா, அய்யா மறந்தூறாதீக...'' என்று கெஞ்சி அனுப்புகின்றனர்.

மதுரையில் லாட்ஜ்கள் 'புல்':

இந்தத் தேர்தலையொட்டி பிரச்சாரத்துக்காக அதிமுக, திமுக தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என முக்கியஸ்தர்கள் அனைவரும் மதுரையில் முகாமிட்டுள்ளதால் நகரில் அனைத்து லாட்ஜ்கள், விடுதிகள் நிரம்பிவிட்டன.

தொண்டர்கள்-'குடி'மக்களும் 'புல்':

திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கும் தொண்டர்களுக்கும் கட்சிகளிடமிருந்து பாயும் கரன்சி அப்படியே டாஸ்மாக்கில் வெள்ளமாய் பாய்ந்து பாட்டில்களை காலி செய்து கொண்டிருக்கிறது. இதனால் இப் பகுதி டாஸ்மாக் விற்பனை படுஜோராக நடக்கிறது.

அதிமுகவின் பிரச்சாரத்தை முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தான் தலைமையேற்று நடத்தி வருகிறார். திமுகவின் பிரச்சாரத்தை அழகிரி தலைமையேற்று நடத்துகிறார்.

பணத்தைப் பொறுத்தவரை இரு தரப்புமே சமபலம் தான் என்றாலும் அழகிரியின் படை பலம் அதிமுகவைவிட ஒரு படி மேலே என்று தான் சொல்ல வேண்டும்.

அடுத்து விஜய்காந்த் பிரச்சாரத்துக்கு வரவுள்ளார். அவர் வந்த பின்னரே தேமுதிக வேட்பாளரி்ன் பிரச்சாரத்துக்கு வலு கிடைக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.

முன்பு தேமுதிகவையும் சேர்த்து மும்முனைப் போட்டி நிலவிய திருமங்கலத்தில் இப்போதைக்கு போட்டி என்னவோ அதிமுக-திமுக இடையே தான். பண, படைகளைப் பார்த்து அந்த அளவுக்கு தனபாண்டியன் சுருதி குறைந்துவிட்டார். விஜய்காந்த் வந்து அவருக்கு 'உற்சாகம்' தந்தால் உண்டு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X