Work From Home அறிவித்த டெல்லி அரசு.. வாரத்துக்கு 2 நாட்கள்.. ஊழியர்கள் கொண்டாட்டம்!!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் எரிபொருள் சேமிப்பு மற்றும் சிக்கனமாக இருக்க நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில், நாட்டிலேயே முதல் அரசாக டெல்லி அரசு புதிய சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மத்திய கிழக்கு போர் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு மற்றும் எரிசக்தி தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் வகையில், அரசு ஊழியர்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் விரைவில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலகங்கள்
டெல்லி அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை உடனடியாக அமல்படுத்தப்படும். இதன் மூலம் எரிபொருள் பயன்பாடு கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு அலுவலகங்களின் நேரத்தையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசு அலுவலகங்கள் இனி காலை 10.30 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும். மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும். இந்த மாற்றம் பீர் ஹவர் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதோடு அரசு அலுவலங்கள் மத்தியிலான மீட்டிங் 50 சதவீதம் ஆன்லைன் வாயிலாக நடைபெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து, எரிபொருள் செலவுகள் குறையும்.
பெட்ரோல் அளவு குறைப்பு
எரிபொருள் சேமிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு வாகனங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் பெட்ரோல் அளவு தற்போதைய 200 லிட்டர் வரம்பில் இருந்து 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ திங்கள்
ஒவ்வொரு திங்கட்கிழமையும் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு "மெட்ரோ திங்கள்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். அடுத்த ஆறு மாதங்களுக்கு டெல்லி அரசு புதிய வாகனங்களை வாங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லியில் இருக்கும் 29 அரசு ஊழியர்கள் காலனிக்கு சுமார் 58 அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது, இதன் மூலம் அரசு ஊழியர்களின் போக்குவரத்து குறைக்க டெல்லி அரசு திட்டமிட்டு உள்ளது.
பொதுமக்கள் வேண்டுகோள்
இதேவேளையில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, டெல்லி மக்களுக்கு வாரத்துக்கு ஒரு நாள் "வாகனமில்லா நாள்" கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது வாரத்திற்கு ஒரு நாள் எரிபொருளில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்துயுள்ளார். இதன் மூலம் எரிபொருள் சேமிப்பு அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
சரக்கு போக்குவரத்து
வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சரக்கு போக்குவரத்தை லாரிகளில் இருந்து ரயில்களுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் போக்குவரத்து படியை 10 சதவீதம் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி அரசு இந்த நெருக்கடியை எதிர்கொள்ள இரண்டு அடுக்கு உத்தியை தயாரித்துள்ளதாக முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்தார். அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இருவரும் இணைந்து எரிபொருள் சேமிப்பில் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் பொதுநிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் இருவரின் பங்களிப்புடன் வெற்றி பெறும் என்று அரசு நம்புகிறது. மேலும் தனியார் நிறுவனங்களுக்கும் வொர்க் ப்ரம் ஹோம் தொடர்பான வழிக்காட்டுதல் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications