For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரசின் தேர்தல் தோல்வியும்.. உங்கள் 'இன்கம்டாக்ஸ்' பிரச்சனையும்!

By Chakra
Google Oneindia Tamil News

Pranab Mukherjee
-ஏ.கே.கான்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுவது விலைவாசி உயர்வு தான். இதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே இன்று ஒப்புக் கொண்டுவிட்டார்.

இந் நிலையில் அடுத்த ஒரு வாரத்தில் மத்திய ரயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டாக வேண்டும். கடந்த மாத இறுதியிலேயே தாக்கலாகியிருக்க வேண்டிய இந்த பட்ஜெட்கள், தேர்தல்கள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 12ம் தேதி கூடுகிறது. 2012-13ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் 14ம் தேதியும் பொது பட்ஜெட் 16ம் தேதியும் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த பட்ஜெட்டுக்கான வேலைகளை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நிதியமைச்சக அதிகாரிகளும் கடந்த மாதமே ஆரம்பித்துவிட்டனர். இதில், உற்பத்திப் பொருட்கள் மீதான கலால் வரி, சேவைகளுக்கான வரிகளை உயர்த்தி காலியாகிக் கிடக்கும் கஜானாவை கொஞ்சமாவது நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால், சர்வதேச பொருளாதார மந்தம் காரணமாகவே ஏற்கனவே தொழில்துறையினர் பிரச்சனையை சந்தித்து வரும் நிலையில், வரிகளை உயர்த்தக் கூடாது என இந்திய தொழில் வர்த்தக சபை கூறி வந்தது.

அதெல்லாம் முடியாது, வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி தேவை, எனவே வரிகளை உயர்த்தித் தான் ஆக வேண்டும் என்ற முடிவில் இருந்தார் பிரணாப் முகர்ஜி. ஆனால், இப்போது முக்கியமான மாநிலங்களில் காங்கிரசுக்கு மிக பலத்த அடி கிடைத்திருப்பதையடுத்து, வரிகள் விஷயத்தில் பிரணாப் தனது நிலையிலிருந்து இறங்கி வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இதனால் இத்தனை நாட்களாக உட்கார்ந்து அவர் போட்டியிருந்த கணக்குகளை எல்லாம் இப்போது நிச்சயம் திருத்திக் கொண்டிருப்பார்.

வழக்கமாக நேரடி வரிகளுக்கு இணையாக மறைமுக வரிகள் மூலமாகவும் தான் மத்திய அரசு தனது செலவில் பெரும் பகுதியை சமாளித்து வருகிறது. இந்த மறைமுக வரிகள் தான் நமது பாக்கெட்டை 'மாயமாய்' வந்து குதறுபவை. நேரடியாகப் போடப்படும் வருமான வரி போன்றவை நம் கண்களுக்குத் தெரிபவை. அதை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமது அக்கெளண்ட்ஸ் டிபார்ட்மென்ட் ஆட்கள் அதை பிடித்துவிட்டுத் தான் மிச்சத்தை நமது ஊதியமாகத் தருவார்கள்.

ஆனால், ஹோட்டலில் நாம் சாப்பிடும் மசால் தோசை மீதான வாட் வரி, தியேட்டரில் வாங்கும் டிக்கெட் மீதான எண்டர்டெய்ன்மென்ட் டாக்ஸ், நமது குழந்தைகளுக்கு எடுக்கும் ஆடைகள் மீது போடப்படும் வாட், பெட்ரோல் போன்றவை மீது போடப்படும் எஜுகேசன் செஸ் போன்றவை தான் (இந்த லிஸ்ட் மிக நீண்டது.. சொல்லிக் கொண்டே போகலாம்) நம் மீது போடப்படும் மறைமுகமான வரிகள்.

நாம் வாங்கும் பொருட்கள் மீதான இந்த வரிகள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. தோசை விலை கூடிப் போச்சு, டிக்கெட் விலை ஏத்திட்டான் என்ற புலம்பலோடு கடை ஓனரையோ தியேட்டர் ஓனரையோ திட்டிவிட்டு வந்து விடுகிறோம். ஆனால், உண்மையில் நடப்பது என்ன?.

பிரணாப் முகர்ஜியின்.. ஸாரி மத்திய-மாநில அரசுகளின் கைகள் தியேட்டர் டிக்கெட் கவுண்டர் வழியாக நம் பாக்கெட்டுக்குள் போய் உள்ளே இருப்பதை அள்ளிக் கொண்டு போவது தான் நிஜம்.

இப்போது காங்கிரசுக்குக் கிடைத்துள்ள படுதோல்விகளால் விலைவாசி உயர்வுக்குக் காரணமான மறைமுக வரிகளை இந்த முறை பிரணாப் முகர்ஜி கொஞ்சம் அடக்கி வாசிப்பார் என்றே தெரிகிறது.

அடுத்ததாக பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் அரசின் சொத்துக்களை, அரசு நிறுவனங்களை தனியாருக்கு வாரி இறைக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கின் திட்டங்களுக்கும் பிரேக் போடப்படும் என்றே தெரிகிறது.

இந்த சீர்திருத்தங்களை ஏற்க கூட்டணிக் கட்சிகளே தயாராக இல்லை என்பதை சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு விஷயத்தில் திரிணமூல், திமுக நடந்து கொண்ட முறையே சாட்சி. திமுகவாவது 'ஸ்பெக்ட்ரம் பயத்தில்' சும்மா சவுண்டு தான் விட்டது. மம்தா பானர்ஜியோ சாட்டையோடு வந்துவிட்டார். இதனால் பட்ஜெட்டில் பெரிய அளவில் சீர்திருத்த திட்ட அறிவிப்புகளும் இருக்காது.

குறிப்பாக பெட்ரோலைப் போல டீசல் விலையையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கி, சர்வதேச விலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் திட்டத்தை அமலாக்க மத்திய அரசு நீண்டகாலமாகவே யோசித்து வருகிறது. ஆனால், 'உத்தரப் பிரதேச ஷாக்' காரணமாக அந்த வேலையை, இனி ஆட்சியில் இருக்கும் மிச்ச காலத்திலும் காங்கிரஸ் அரசு செய்யாது என்பது மிக நிச்சயம்.

வரிகள் மூலம் தான் பணம் வர வேண்டும், பணம் வந்தால் தான் பட்ஜெட்டில் புதிதாக ஏதாவது வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்கலாம்.

ஆனால், வரிகளில் மட்டும் அடக்கி வாசித்துவிட்டு புதிய திட்டங்களை மட்டும் பிரணாப் முகர்ஜியால் எப்படிக் கொண்டு வந்துவிட முடியும்?. அதற்குப் பணம் வேண்டுமே?.

இதனால், இந்த பட்ஜெட்டில் பெரிய அளவிலான அறிவிப்புகள் கூட இருக்காது என்கிறார்கள்.

ஆனால், மாத ஊதியம் வாங்குவோருக்கு வருமான வரியைக் குறைக்கும் வகையில், வருமான வரிக்கான வரம்பை உயர்த்தலாம் என்ற திட்டத்தில் மத்திய அரசு இருந்தது. இது உத்தரப் பிரதேச தேர்தலுக்கு முன்பு.

ஆனால், இப்போது தேர்தல் முடிவுகளால் புதிதாக வரிகள் எதையும் போட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட பிரணாப் முகர்ஜி, இருக்கும் வருமானத்தையும் இழக்க தயாராக இருப்பாரா..?

இதனால், 'வாயில்லா ஜீவன்களான' மாத சம்பளம் வாங்கும் மக்களுக்கு வருமான வரியில் எந்த சலுகையும் கிடைக்கப் போவதில்லை என்கிறார்கள்.

இதனால் இந்த வருட பட்ஜெட் சும்மா ஒரு 'சாஸ்திரத்துக்காகவே' இருக்கும். அடுத்த ஆண்டு பட்ஜெட் 'மக்களவைத் தேர்தல் பட்ஜெட்டாக' இருக்கும் என்பதால் அதில் ஏழைகள், விவசாயிகளின் ஓட்டுக்களை குறி வைக்கும் விஷயங்கள் அதிகமாக இடம் பெறலாம்.

ஆக, உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தோத்தா நம் 'இன்கம்டாக்ஸ்' குறையாது!.

உத்தரப் பிரதேச முடிவுகள் வெளியாக ஆரம்பித்தவுடன் டெல்லியில் ஒரு விஷயம் நடந்தது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தாவுடன் தீவிர ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அரசுத் துறைகளை தனியார்மயமாக்கும் திட்டங்களை, பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற தாஸ்குப்தாவின் கோரிகைகையை பிரணாப் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார்.

அதாவது, பட்ஜெட் தொடர்பாக இடதுசாரிகளின் ஆலோசனைகளை தானாகவே முன் வந்து கேட்டுக் கொண்டிருந்தார் பிரணாப். இது மத்திய அரசு எடுத்திருக்கும் முக்கிய 'லெப்ட் டர்னாகவே' பார்க்கப்படுகிறது!.

(கட்டுரையாளர் ஒன்இந்தியா தமிழ் ஆசிரியர்)

English summary
An overall below-par peformance by the Congress party in the latest round of state elections has thrown up new questions on the UPA government’s economic policies. All eyes will be on finance minister Pranab Mukherjee as he shapes the budget for 2012-13 due next week. Economists and market pundits will keenly watch whether the government can demonstrate a pro-reform approach to shrug off surging perceptions of policy paralysis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X