India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகத்துலேயே ரொம்ப ஜாலியா இருக்குறது கடவுள் மட்டும் தான்!!

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

கீதா....

பாகிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட வாய் பேச முடியாத, காது கேளாத இந்த இளம் இந்தியப் பெண் இப்போது மீடியாக்களால் மறக்கப்பட்டு, இந்தூரில் ஒரு காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரது உண்மையான குடும்பம் எது என்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டுபிடித்து அவர்களிடம் கீதாவை ஒப்படைக்கும் வேலையில் உள்ளது வெளியுறவு அமைச்சகம்.

14 ஆண்டுகளுக்கு முன் ரயில் ஏறி லாகூரில் போய் இறங்கிய இந்த சிறுமியை ஆவணங்கள் ஏதும் இல்லாததால் கராச்சியில் உள்ள ஈதி பவுண்டேசன் அமைப்பிடம் ஒப்படைத்தனர் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரான ரேஞ்சர்கள்.

Meet Abdul Sattar Edhi, The Man Who Kept Geeta Safe

அதுமுதல் அந்தக் குழந்தையை பத்திரமாக வைத்திருந்து பராமரித்தவர்கள் ஈதி பவுண்டசேனின் தலைவர் அப்துல் சத்தார் ஈதியும் அவரது மனைவி பில்கிஸ் ஈதியும் தான்.

சிறுமி தனது பெயரைக் கூட சொல்லத் தெரியாத, சொல்ல முடியாத நிலையில், இந்தியாவில் இருந்து வந்த சிறுமி என்பதால் கீதா என பெயர் சூட்டியதும் அப்துல் சத்தார் ஈதி தான்.

இந்த ஈதி மிக வித்தியாசமான மனிதர். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது குஜராத்திலிருந்து பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்தவர் தான் இந்த ஈதி. சிறுவனாக இருந்தபோது கைவண்டி இழுத்து குடும்பத்தை காத்தவர்.

இவரது தாயார் கேன்சர் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பெரும் வலியோடு போராடி உயிர்விட்டபோது அவரை காப்பாற்ற முடியாமல் தவித்து, இந்த நிலையில் இருப்போரை காக்க அவர் உருவாக்கியது தான் ஈதி பவுண்டேசன்.

Meet Abdul Sattar Edhi, The Man Who Kept Geeta Safe

கூலி வேலை பார்த்து கிடைத்த பணத்தில் ஒரு சிறிய டிஸ்பென்சரியை ஆரம்பித்து அதில் ஏழைகளுக்கு இலவச முதலுதவி வழங்கியவர் ஈதி. பின்னர் தெருத்தெருவாக மக்களிடம் பிச்சை எடுத்து, அதில் கிடைத்த நிதியில் ஆதவற்றவர்களுக்கு உணவும் உறைவிடமும் தந்தவர்.

இப்போது பாகிஸ்தானின் மிகப் பெரிய பொது நல அறக்கட்டளை ஈதி பவுண்டேசன் தான். 500க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 2 ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள், நாடு முழுவதும் ஏராளமான ஆதவற்றோர் இல்லங்கள், 24 மணி நேரமும் இயங்கும் ஹெல்ப்லைன் பிபிஓ என பரந்து விரிந்து கிடக்கிறது ஈதியின் சமூகப் பணி.

வெள்ளை தாடி, இரு ஜோடி உடைகள் தான் ஈதியின் அடையாளம். பொதுச் சேவைக்காக வசூலிக்கப்படும் பணத்தில் ஒரு ரூபாயைக் கூட தானோ தனது குடும்பமோ தின்றுவிடக் கூடாது என்பதில் கரார் பேர்வழி ஈதி.

ஒரு சிறிய வீட்டில் தங்கியிருந்து மாபெரும் சமூக சேவை அமைப்பை ஒருங்கிணைத்து வருகிறார். 90 வயதைக் கடந்துவிட்ட ஈதிக்கு சமூக அக்கறையில்லாத பணக்காரர்கள் மீதும், வரி ஏய்ப்பாளர்கள் மீதும், மதவாதிகள் மீதும் பெரும் கோபம்.

Meet Abdul Sattar Edhi, The Man Who Kept Geeta Safe

''நான் பெரிய சமூக சேவைக்காரன் எல்லாம் இல்லை. ஏழைகளிடம் இருந்து நிதி திரட்டி ஏழைகளை கவனித்துக் கொள்பவன். நான் தாடி வைத்திருக்கும் மதவாதி அல்ல, நான் ஒரு நல்ல முஸ்லீமாக இருக்க முயற்சிப்பவன்'' என்கிறார்.

பெண் குழந்தைகள் கொலையைத் தடுக்க முதன்முதலில தொட்டில் குழந்தை திட்டத்தை ஆரம்பித்தவர். இதுவரை 36,000 குழந்தைகள், அதில் பெரும்பாலானவை பெண் சிசுக்கள், உடல் ஊனம் உள்ளவர்கள், இவரது தொட்டிலில் வந்து சேர்ந்திருக்கின்றன.

சாலையோரங்களில் கிடக்கும் மனநலம் பாதிக்கப்பட்டோர், போதைக்கு அடிமையானோர், முதியோர் ஆகியோரை இவரது ஆம்புலன்ஸ்கள் இரவு பகலாக தங்கள் இல்லங்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றன.

இயற்கை சீரழிவுகள், விபத்துகள், குண்டுவெடிப்புகள் நடந்தால் அந்த இடத்தில் இவரது குழு முதல் ஆளாய் வந்து நிற்கும். காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ்களில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும். சிதறிக் கிடக்கும் உடல்களை அள்ளி மருத்துவமனைகளில் சேர்க்கும். இந்த நிகழ்வுகளால் ஆதரவின்றி நிற்கும் குழந்தைகளை தனது இல்லம் கொண்டு செல்லும்.

Meet Abdul Sattar Edhi, The Man Who Kept Geeta Safe

பெரிய அளவில் சட்ட திட்டங்களைக் கூட ஈதி மதிப்பதில்லை. நான் சட்டத்தை மதித்துக் கொண்டிருந்தால் உயிர்களைக் காக்க முடியாது என்பது இவரது வாதம்.

அதே போல இவர் தொழுகை புரிபவர் என்றாலும் கூட மதத்துக்கும் இவருக்கும் நெடுந்தூரம். மதம் அவரவர் தனிப்பட்ட விஷயம். மதத்தை விட மனிதாபிமானம் முக்கியம் என்பவர் ஈதி.

இவரது இல்லத்தில் இருப்போர் எந்த மதமோ அந்த மத பிரார்த்தனைகள் செய்யலாம். தங்கள் சமூக இல்லத்தில் இருந்த கீதாவுக்குக் கூட ஒரு பகுதியை ஒதுக்கித் தந்திருந்தனர் ஈதியும் அவரது மனைவியும். அந்தப் பகுதியில் லட்சுமி தேவி, பிள்ளையார் படங்களை வைத்து பூஜை செய்து வந்தார் கீதா. அதே போல இவரது இல்லத்தில் உள்ள கிருஸ்துவர்கள் தங்கள் மத அடிப்படையில் பிரார்த்தனை செய்ய எந்தத் தடையும் இல்லை.

இதனாலேயே ஈதி மீது பாகிஸ்தானிய மத அமைப்புகளுக்கும் அதன் தலைகளுக்கும் பெரும் கோபம். இவரது சமூக இல்லத்தை ஒருமுறை மதவாதிகள் சூறையாடிவிட்டுப் போனார்கள்.

இவரது அமைப்புக்கு உதவி செய்யாதீர்கள் என்ற பிரச்சாரம் கூட நடக்கிறது. ஆனால், இந்த சக்திகளால் சமூகத்துக்கு ஒரு பயனும் இல்லை என்கிறார் ஈதி. இவர்கள் பள்ளிவாசல் கட்ட பணம் தருவார்கள். ஒரு ஏழைக்கு ஒரு வேளை உணவு தர மாட்டார்கள். ஹஜ் பயணம் போவார்கள். ஆனால், ஒரு ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு உதவ முன் வர மாட்டார்கள். நான் 5 வேலை தொழுகை புரிவதில்லை. எனக்கு நேரம் இல்லை. ஆனால், அல்லாஹ் என்னை அறிவான் என்கிறார்.

Meet Abdul Sattar Edhi, The Man Who Kept Geeta Safe

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு இடையே ஒருமுறை துப்பாக்கிச் சண்டை. சாலையெல்லாம் உடல்கள். ராணுவம், போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத துப்பாக்கி சூடு. அங்கே விரைந்தது ஈதியின் ஆம்புலன்ஸ். துப்பாக்கிகள் ஓய்ந்தன. உடல்களை ஆம்புலன்ஸ்களில் ஏற்றிக் கொண்டு ஈதி கிளம்பிய பின் மீண்டும் வெடித்தது துப்பாக்கி சண்டை. இது தான் ஈதி. ஒரு பக்கம் மதவாதிகளால் எதிர்க்கப்படும் ஈதியை துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளே மதிக்கும் நிலை. காரணம், அவர் மக்களால் மதிக்கப்படுவதே.

ஒருமுறை அதிபர் ஜியா உல் ஹக் இவரை அழைத்து ரூ. 10 லட்சம் நன்கொடை தந்தார். அதை அப்படியே திருப்பித் தந்துவிட்டார் ஈதி. எந்த நாட்டு அரசாங்கத்திடமும் எப்பவுமே உதவி வாங்கக் கூடாது என்கிறார் ஈதி. முதலில் பணம் தருவார்கள், பின்னர் அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்டு ஆடச் சொல்வார்கள். இதனால் எந்த அரசிடமும் நான் உதவி வாங்குவதில்லை. அதே நேரம் தனிப்பட்ட நபர்கள், அவர்கள் போதைப் பொருள் விற்பவனாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர்களிடம் நன்கொடை வாங்குவேன் என்கிறார்.

இதனால் தான் கீதாவை பராமரித்ததற்காக இந்திய அரசு தந்த ரூ. 1 கோடியையும் திருப்பித் தந்துவிட்டது ஈதி பவுண்டேசன். இது ஏதோ பாஜக அரசுக்கு எதிரான செயல்மாதிரி இந்தியாவில் சில மதவாதிகள் திசை திருப்ப முயன்றனர். ஆனால், ஈதி இதுவரை எந்த அரசிடமும் பணம் வாங்கியதில்லை என்பதே உண்மை.

அதே நேரத்தில் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப் தனது சொந்தப் பணத்தில் இருந்து நன்கொடை தந்தபோது ஆட்சேபணையே இல்லாமல் வாங்கிக் கொண்டார் ஈதி.

தனது சமூகப் பணிக்காக 1986ல் ராமோன் மகாசேசே விருது பெற்ற ஈதியை நோபல் பரிசுக்குக் கூட பாகிஸ்தான் பரிந்துரைத்தது. பாகிஸ்தானின் Father Teresa என அழைக்கப்படும் ஈதி பவுண்டேசனுக்கு அமெரிக்கா, கனடாவிலும் கிளைகள் உள்ளன.

பணி நிமித்தமாக இவர் அமெரிக்கா, கனடா செல்லும்போதல்லாம் இவரை விமான நிலையத்தில் தனியாக அழைத்துச் சென்று 18 மணி நேரம் கூட விசாரித்துள்ளன. எனது தாடியும், எனது உடையும், குல்லாவும் தான் இதற்குக் காரணம் என சிரிக்கிறார் ஈதி.

இவர் நடத்தும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லத்தில் இவர் நுழைந்தால், அப்பா, அப்பா என இவரை கட்டி அணைக்கின்றனர் அந்த மனம் பிறழ்ந்த குழந்தைகள்.

பாலஸ்தீனம், போஸ்னியா, ஆப்ரிக்கா என இவரது சமூகப் பணிகள் பரவிக் கிடக்கின்றன. சிறுநீரகங்கள் பழுதாகி வாராவாரம் டயாலிஸிஸ் செய்து கொள்ளும் ஈதியிடம் ஆசி வாங்கிக் கொண்டு தான் இந்தியா கிளம்பினார் கீதா.

''உலகத்துல எல்லோரும் அட்வைஸ் மட்டும் தான் சொல்றாங்க. கடவுள் கூட அட்வைஸ் மட்டும் தான் செய்றார். குரான், பைபிள், கீதை என அட்வைஸ் செய்யும் புத்தகங்கள் தான் வருது. ஆனால், கடவுள் மட்டும் சொர்க்கத்தில் சகல சுகத்துடன் வசிக்கிறார். பூமியில் நிராகரிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்''... இது 1990களில் தன்னை சந்தித்த மூத்த பத்திரிக்கையாளர் சேகர் குப்தாவிடம் ஈதி சொன்னது.

இப்படியெல்லாம் பேசுவதால் என்னை இந்த ஊர் மதவாதிகள் கம்யூனிஸ்ட் என்கிறார்கள். நான் கம்யூனிஸ்ட்டும் அல்ல, முல்லாவும் அல்ல. நான் ஒரு பிராக்டிகல் மேன் என்கிறார் ஈதி.

இன்னொரு விஷயம். கீதாவை இந்தியா கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ். அமைச்சராக மட்டுமல்ல, ஒரு மனிதாபிமானியாக, ஒரு தாயாக இருந்து இந்தப் பணியை ஒருங்கிணைத்தார். ஆவணங்கள், சட்டங்கள் என ஏகப்பட்ட பார்மாலிட்டிகள் இருந்தாலும் மிக பிராக்டிலாக இந்த விஷயத்தை கையாண்டார்.

பருப்பு விலையை விட, மாட்டுக் கறி தான் இந்தியாவின் இப்போதைய மிகப் பெரிய பிரச்சனையாக உள்ள நிலையில், நமக்கு ஈதி, சுஷ்மா மாதிரியான நிறைய பிராக்டிகல் மனிதர்கள் தேவை.

English summary
A young speech and hearing impaired Indian woman Geeta was taken care of by Edhi Foundation during her long stay Pakistan. The role of 87-year-old founder of the Edhi foundation, Abdul Sattar Edhi, in the entire case is commendable and worth a salute. Together with his wife, Bilquis Edhi, he received the 1986 Ramon Magsaysay Award for Public Service.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X