ஜார்க்கண்ட்:மழையால் மோடி ரோடு ஷோ ரத்து! ரூ.660 கோடி ரயில்வே திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்!
ராஞ்சி: சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நடத்த இருந்த ரோடு ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6 வந்தே பாரத் ரயில்களையும் ரூ.660 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதியை அடுத்த சில வாரங்களில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்பது எதிர்பார்ப்பு. ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் களத்தை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் சுமார் ரூ.660 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜார்க்கண்டில் 6 வந்தே பாரத் ரயில்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். முன்னதாக கனமழை பெய்ததால் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி ரத்தானது.
தியோகர் மாவட்டத்தில் மதுபூர் புறவழிச் சாலை மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் ஹசாரிபாக் நகர பயிற்சி மையம் ஆகியவற்றுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்தப் பாதை நிறைவடைந்த பிறகு, மதுபூர் புறவழிச் சாலை ஹவுரா-டெல்லி பிரதான பாதையில் ரயில்கள் நிறுத்தப்படுவதைத் தவிர்க்கவும், கிரிதிஹ் மற்றும் ஜசிதிஹ் இடையேயான பயண நேரத்தை குறைக்கவும் உதவும். ஹசாரிபாக் டவுன் கோச்சிங் டிப்போ இந்த நிலையத்தில் ரயில் பெட்டிகளை பராமரிக்க உதவும்.
போண்டாமுண்டா - ராஞ்சி ஒற்றை ரயில் பாதையின் ஒரு பகுதியான குர்குரா - கனரோன் இரட்டை வழிப்பாதை திட்டத்தையும், ராஞ்சி, முரி மற்றும் சந்திரபுரா ரயில் நிலையங்கள் வழியாக ரூர்கேலா - கோமோ வழித்தடத்தின் ஒரு பகுதியையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை கணிசமாக அதிகரிக்க இந்தத் திட்டம் உதவும். இது தவிர, 04 சாலை கீழ் பாலங்கள், பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும்.
ஆறு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. அதிநவீன வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கீழ்காணும் வழித்தடங்களில் இணைப்பை மேம்படுத்தும்:
1) டாடாநகர் - பாட்னா
2) பாகல்பூர் - தும்கா - ஹௌரா
3) பிரம்மபூர் - டாடாநகர்
4) கயா - ஹௌரா
5) தியோகர் - வாரணாசி
6) ரூர்கேலா - ஹவுரா
இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் அறிமுகம், வழக்கமான பயணிகள், தொழில் வல்லுநர்கள், வணிக மற்றும் மாணவர் சமூகத்திற்கு பயனளிக்கும். இந்த ரயில்கள் ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள பைத்யநாத் தாம், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், கொல்கத்தாவில் (மேற்கு வங்கம்) உள்ள காளிகாட், பேலூர் மடம் போன்ற புனித யாத்திரைத் தலங்களுக்கு விரைவான பயணத்தை வழங்குவதன் மூலம் இப்பகுதியில் மத சுற்றுலாவை மேம்படுத்தும். இது தவிர, தன்பாத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத் தொழில்கள், கொல்கத்தாவில் உள்ள சணல் தொழில்கள், துர்காபூரில் இரும்பு மற்றும் எஃகு சார்ந்த தொழில்கள் ஆகியவையும் பெரும் ஊக்கத்தைப் பெறும்.
அனைவருக்கும் வீட்டு வசதி என்ற தமது உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 20,000 பிரதமரின் வீட்டுவசதித் திட்டப் பயனாளிகளுக்கு அனுமதிக் கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார். மேலும், பயனாளிகளுக்கு முதல் தவணை நிதியுதவியையும் அவர் விடுவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் அம்மாநிலத்தில் பாஜகவினரிடையே பெரும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை.












Click it and Unblock the Notifications