இரவில் தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா? யார் கட்டாயம் தொடக்கூடாது.. எக்ஸ்பர்ட்ஸ் விளக்கம்
சென்னை: உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் தயிரை வெயில் காலங்களில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவதுண்டு. தயிரை இரவு நேரத்தில் சாப்பிடலாமா.. கூடாதா.. என்பதில் பல்வேறு சந்தேகங்கள் உணவு பிரியர்கள் மத்தியில் உள்ளது. எனவே இதில் ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
பாலில் இருந்து கிடைக்கும் முக்கிய உணவுப் பொருள் தயிர். இந்திய உணவு பட்டியலில் பெரும்பாலும் தயிர் இடம் பிடித்து இருக்கும். அந்த அளவுக்கு தயிரை பலரும் உணவில் சேர்த்துக்கொள்வார்கள். அதிலும் தென் இந்தியாவில் மதிய உணவில் தயிர் பெரும்பாலும் கண்டிப்பாக இருக்கும். ஓட்டலில் சென்று மீல்ஸ் ஆர்டர் செய்தால் கண்டிப்பாக தயிர் ஒரு பவுலில் வைத்திருப்பதை காண முடியும்.

உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் தயிரை லஸ்சி என்று கூட இனிப்பு சுவை சேர்த்து வெயில் காலத்தில் அருந்துவை காண முடிகிறது. பால் குடிப்பதை விரும்பாதவர்கள் கூட தயிரை விரும்பி சாப்பிடுவதுண்டு. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் எளிதாக ஜீரணம் ஆக உதவுகிறது. அது மட்டும் இன்றி தயிர் இதயத்திற்கும் நல்லது. தயிரில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உடலுக்கு உறுதி கொடுப்பவை.
பற்கள் மற்றும் எலும்புகள் வலுவாக இருக்கவும் இது உதவும். தயிர் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைத்தாலும் இரவு நேரத்தில் தயிரை சாப்பிடக்கூடாது என ஆயுர்வேத மருத்துவ முறைப்படி பலரும் சொல்லும் கருத்தாக உள்ளது. அதாவது ஆயுர்வேதப்படி இரவு நேரத்தில் தயிரை சாப்பிடுவது உடலுக்கு நல்லது இல்லை என்றும் சளி பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
தயிரை நேரடியாகவோ மறைமுகமாகவோ (ரைத்தா, தயிர்சாதம்) என நம்மில் பலரும் சாப்பிடுவதுண்டு. எனவே, இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டுமா? என்ற கேள்வி எழாமல் இல்லை. இது குறித்து பிரபலமான ஊட்டசத்து நிபுணரான ஷில்பா ஆரோரா கூறியதாவது:- இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது மிகவும் நல்லது.
ஆஸ்துமா அல்லது இருமல், சளி போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் மட்டும் இரவில் சாப்பிடுவதை தவிர்க்கலாம். இரவு டின்னரின் போது செரிமானத்திற்கு உதவும் வகையில் ரைதா போன்றவற்றை சாப்பிடலாம். செரிமான கோளாறு இருந்தால் வெந்தயத்தை கூட இரவில் உணவோடு சேர்த்துக் கொள்ளலாம்" இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் மெஹர் ராஜ்புத் என்ற ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில், "உங்களுக்கு சளி பிடித்து இருந்தாலோ, காய்ச்சல் ஏற்பட்டு இருந்தாலோ முற்றிலும் தயிரை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. தயிருக்கு பதிலாக உணவு நன்கு செரிமானம் ஆக பட்டர்மில்க் சாப்பிடலாம். ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் கொண்டவர்கள் இரவு நேரத்தில் தயிர் மற்றும் தயிரால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.
தயிர் செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை கொண்டதாகும். மோருடன் ஒப்பிடும் போது தயிரை சாப்பிடுவது சற்று ஜீரணத்திற்கு சிரமம் ஆக இருப்பதாக உணர முடியும். தயிரை மோரையோ இரவு நேரத்தில் சாப்பிடுவது நல்லது. அதேபோல், எப்போதாவது, 1/4 டீஸ்பூன் மிளகு கலந்தும் சாப்பிடலாம்" என்றார்.
எனவே, சளி பிரச்சினைகள் இருந்தால் இரவு நேரத்தில் தயிர் மீது கை வைக்காமல் இருப்பதே நல்லது. மற்றவர்கள் தயிரை தாராளமாக சாப்பிடலாம். சர்க்கரை சேர்த்து லஸ்சியாகவோ, வெங்காயம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேர்த்து ரைத்தாவாகவோ பிடித்தமான முறையில் ஒரு தயிரை இரவும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications