For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசாங்கம் மேலும் என்ன செய்யலாம்?

Google Oneindia Tamil News

- பேராசிரியர்.மருத்துவர்.முத்துச் செல்லக் குமார்

இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனாவின் 2ஆவது அலை மக்களை மிகவும் பயமுறுத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தக்கட்டுரை எழுதும்(செவ்வாய் மாலையில்) தமிழ்நாட்டில்,15830 பேர்கள் பாதிக்கப்பட்டு,77 பேர்கள் இறந்துள்ளார்கள்.சென்னையில் மட்டும் 4640 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதனைப் பாராட்டுகிறேன். அதேவேளை இன்னும் இந்த நடவடிக்கைகளை நோயின் தீவிரத்திற்கேற்ப மேம்படுத்த வேண்டும்.

How the govt can prevent Coronavirus spread?

அரசாங்கம் இன்னும் செய்ய வேண்டியவை என்னென்ன?

1)டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்.

மதுக்கடைகளை (டாஸ்மாக் கடைகளை ) ஒன்று கூட இல்லாமல் மூட வேண்டும். மக்களும் குடிக்கு 'குட்-பை' சொல்ல வேண்டும் என்பது தான் என் ஆசை. இது உண்மையில் பேராசை தான்!

'அய்யோ பழகிவிட்டேன், உணவு சாப்பிடாமல் கூட இருந்துடுவேன், மது இல்லாமல் இருக்க முடியாதே ! என்று சொல்பவர்களுக்காக, (குடிபழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு) வாரத்தில் ஒரு முறை கடை திறந்து பயன்படுத்திக் கொள்ளச் சொல்லுங்கள்.

ஆனால், அன்று கூட்டம் போடாமல் வரிசையாக இடைவெளி விட்டு நிற்க செய்ய காவலர்களை அனுப்புங்கள். அவர்களும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மது வாங்க வரும் அனைவருமே முகக்கவசம் அணிய வேண்டும். ஆனால், இதிலும் சிக்கல் தான்,மக்கள் 'கொரோனா அலைக்கு' போட்டியாக கூட்டமாக 'அலை மோதுவார்கள்' என்கிறார்கள் நண்பர்கள்.

அப்படியென்றால் தீர்வு தான் என்ன?

அரசு வீட்டிற்கு காய்கறி,கனி சப்ளை செய்தது போல கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஏதாவது புது வழியைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

2) பீச் வேண்டாம்

கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரை உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு விடுமுறை என்றில்லாது அனைத்து நாட்களிலும் 24மணிநேரமும்,7நாட்களிலும் பொதுமக்கள் கூடுவது(11.04.2021 )தடை செய்யப்பட வேண்டும்.

விடுமுறை நாட்களில் மட்டும் தடை செய்தால்,வட்டியும் முதலுமாக மற்ற விடுப்பு இல்லாத நாட்களில் நமது ஆட்கள் கும்பலாக மாலையில் கூடி கொரோனாவோடு கொஞ்சி, கேஸ்களை முடிந்த அளவு அதிகரித்து விடுவார்கள்.

3) பள்ளி,கல்லூரிகளைத் திறக்க வேண்டாம்.

விசேஷ வகுப்புகளும் வேண்டாம். இளம் வயதினரைத் தாக்கும், இரண்டாம் அலையாக இது இருப்பதால், இந்த நேரத்தில் இவர்களை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பினால் நோய் தொற்று வந்து சிரமப்படுவதுடன்,இவர்களால் வீட்டிலுள்ள பெரியவர்களும் பாதிக்கப்படுவார்கள். இவர்கள்,இந்த நேரத்தில் தொற்று வந்து சிமப்படுவதுடன், தேர்விற்கு தயாராவதிலும் கஷ்டப்படுவார்கள். ஏற்கனவே மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் இவர்களால் பல நிர்பந்தங்களுக்கிடையே சிறப்பாக படிக்க முடியாது.

4) தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்.

தேர்தலைத் தான் தள்ளிப் போட முடியவில்லை தேர்வுகளையாவது தள்ளிப் போடலாமே. அனைத்து பள்ளி, கல்லூரி தேர்வுகளையும் தள்ளி வைக்க வேண்டும். அதிக கடினமான மருத்துவத் தேர்வுகளை இப்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையில்,மாணவர்களால் கருத்தூன்றி படிக்க முடியாது.

ஏற்கனவே தேர்வில் தேர்வாகாத மாணவர்கள் மிகுந்த மனச்சோர்வுடன்,மனச்சுமையுடன் இருப்பார்கள். கோவிட் பெருந்தொற்று நிலையால் மேலும் மனச்சோர்விற்கும்,அச்சத்திற்கும் ஆளாகி இருப்பார்கள். அவர்களுக்கு உடனடியாக வரும் தேர்விற்கு தயாராக மனமும்,நேரமும் இடம் கொடுக்காது.

இப்படி எழுதிய ஒரு மாதத்திற்குள்ளாகவே மீண்டும் மற்றொருத் தேர்வை அவர்கள் எதிர் நோக்குவது (உ.ம்) supplementary exam-1st year MBBS) மிகவும் சிரமமான காரியம். குறிப்பாக ஒன்றிற்கு மேல் அரியர் கொண்ட மாணவர்களால், இப்போது நிலவும் சூழ்நிலையில் தங்கள் மனதை ஒருமுகப்படுத்தி படிக்க முடியாது.

இதைவிட கொடுமை என்னவென்றால், இவர்கள் இந்தத்தேர்வில் ஒருவேளைத் தேர்வு பெறவில்லை என்றால், அடுத்து 6 மாதம் கழித்து வரும் தேர்வு இல்லை. ஒரு வருடம் கழித்துத்தான் இவர்களுக்குத் தேர்வு!
ஆகவே இது போன்றத் தேர்வுகள், மாணவர்களை மனதில் வைத்து நடத்தப்படுவதில்லை. அவர்கள் தற்போது சூழ்நிலைக்கு ஏற்ப நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

5) தடுப்பூசி குறித்த வதந்திகளைத் தடுக்க வேண்டும்:

தடுப்பூசி குறித்து தவறான கருத்துகளைப் பரப்புகின்றவர்களை கண்டிக்க வேண்டும்.தொடர்ந்து பரப்பினால் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். இவர்கள் இதனை, வாட்ஸ் ஆப்,பேஸ்புக் என பல்வேறு சமூக வலைதளங்களிலும் செய்துவருகிறார்கள். அரசாங்கம் இவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

6)ஊடகங்கள் தங்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும்

மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விழிப்புணர்வை மட்டும் ஏற்படுத்த வேண்டும். மக்களை பயமுறுத்துகின்ற,பீதிக்கு ஆளாக்குகின்ற, செய்திகளைப் போட்டு,தடுப்பூசிகளை மக்கள் போடவிடாமல் நேரடியாகவோ,மறைமுகமாகவோ தடுக்கின்றஊடகங்களின் மீது பெருந்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உ.ம், ஒன்று:

ஒருவர் என்ன காரணத்தினால் இறந்தாலும்,தடுப்பூசி போட்டவர் இறந்துவிட்டார் என்று 'ஃப்ளாஷ் நியூஸ்' போட்டு மக்களை பயமுறுத்துவது, குழப்புவது, மற்றவர்கள் மனதில் வீண் பயத்தை ஏற்படுத்தி அவர்களை தடுப்பூசி போடவிடாமல் தடுப்பது.

அவருக்கு ஊசி போடுவதற்கு முன்பாக என்ன நோய் இருந்தது ,அவர் என்ன பாதிப்பினால் இறந்தார் என்ற எந்த உண்மைகளையும் முழுமையாக ஆராய்ந்து அறியாமல், வெறும் பரபரப்பை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டும் சுயநலப் போக்குடன் செயல்படுகின்றவர்களை விழிப்புணர்வுடன் அரசாங்கம் கண்காணிக்க வேண்டும்.

உ.ம், இரண்டு:

இரண்டாம் தடுப்பூசி போடத் தாமதமானால், இறப்பு வந்துவிடுமா? என்று செய்தி போடுகிறார்கள். இது தேவையில்லாத பயத்தை ஏற்படுத்துவதற்கானது. இதில், உபயோகமானத் தகவல் ஒன்றுமே இருக்காது.
அரசாங்கம் மீடியாக்களை கண்காணிக்கவேண்டும்.

இவை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விழிப்புணர்வை மட்டும் ஏற்படுத்த வேண்டும். அதுவும்உண்மையான தகவல்களுடன்,அறிவியல் அடிப்படையில்,முறையாக நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களிடமிருந்து மட்டும்.

7) பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்

கான்டாக்ட் டிரேசிங் அதிகரிக்க வேண்டும். கோவிட் தொற்றை கண்டுபிடிக்க அதிக அளவு பரிசோதனைகளை (RT PCR tests)செய்யுங்கள். நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக கண்டறிந்து பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

8) வசதிகள் மற்றும் பிராண வாயு இருப்பை அதிகரிக்க வேண்டும்.

பிராண வாயு இருப்பை அதிகரிக்க,புதிதாக உற்பத்தியைத் தொடங்க தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும்,முன்முயற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும். படுக்கை வசதிகளையும் அதிகரிக்க வேண்டும். முக்கிய உயிர் காக்கும் மருந்துகள்,உபகரணங்களையும் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

9) ஐபில் 2021கிரிக்கெட் போட்டிகளுக்குத் தடை:

கிரிக்கெட் தொடங்கி அனைத்து விளையாட்டுகளையும்,போட்டிகளையும் தடை செய்ய வேண்டும். பல லட்சம் பேர்கள் கோவிடால் பரிதவிக்க,பல்லாயிரம் பேர்கள் தினமும் இறந்து கொண்டிருக்க, ஆக்ஸிஜன் கிடைக்காமல் எண்ணற்ற மக்கள் தவித்துக்கொண்டிருக்க, மைதானத்துக்கும் போக முடியாமல்,டிவியிலும் பார்க்க மனமில்லாமல் இருக்கும் மோசமான காலக்கட்டத்தில் யாரால் இப்போட்டிகளை ரசிக்க முடியும்?

இப்போது இந்த வீரர்கள் ஓய்வெடுக்கலாம்.அவர்கள் இப்போது பவுண்டரியும், சிக்ஸரும் அடிக்க வேண்டியது மைதானத்தில் அல்ல!. மக்களின் மனங்களில்!

உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவோ,மருந்தின்றி தவிப்பவர்களுக்கு மருந்துகளோ,என உயிருக்கு ஏதோ ஒரு வழியில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு,இவர்களும் ஏதாவது ஒரு வழியில் உதவலாம்.

10) ஒலிம்பிக் வீரர்களுக்கு மட்டும் அனுமதி:

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போட்டு பயிற்சி அளிக்க அனுமதிக்க வேண்டும்.

11) ஆட்டோ ஓட்டுனர்கள்,டாக்ஸி ஓட்டுனர்கள்

இவர்கள் அனைவரையும் தடுப்பூசி போடச் சொல்ல வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டும், பணி செய்ய அனுமதிக்க வேண்டும்

12) உணவு ஆன்லைனில் சப்ளை செய்பவர்கள்:

ஆரெஞ்சு, சிவப்பு நிற உடையுடன் வேகமாக வரும்,இவர்கள் அனைவரையும் தடுப்பூசி போடச் சொல்ல வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டும், பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.

13) திருமண நிகழ்வுகள்:

பெருந்தொற்று உச்ச நிலையில் இருக்கும்போது,முடிந்த அளவு திருமணம் போன்ற சுப நிகழ்வுகளைத் தள்ளிப்போடுங்கள். திருமண நிகழ்வுகளில் முக்கியமான 30 நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பெண் வீட்டில்15 பேர்கள்,மாப்பிள்ளை வீட்டில்15 பேர்கள் என்று தற்றின் தாக்கம் குறைந்ததும் மற்றவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.

திருமணம் வெளியரங்குகளில் மட்டும் நடக்க வேண்டும். ஏசி உள்ள உள்ளரங்குகளில் நடக்கக் கூடாது.
மணமகன்,மணமகள் தொடங்கி அனைவரும் திருமணத்தில் சரியாக,முறையாக, முழுமையாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கல்யாண வீட்டில் சாப்பாடு போடக்கூடாது.

போட்டால், அனைவரும் மாஸ்க்கை கழற்றிவிட்டு அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட்டு கொரோனாவை பரப்பி விடுவார்கள். எனவே வருகின்றவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி அவரவர் வீட்டிற்கு போய் சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படாது. அனைவரும் அதிக நேரம் தங்கவும் வாய்ப்பு இருக்காது.

14) இறப்பு சார்ந்த நிகழ்வுகள்:

இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு, 15-20 நபர்கள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் கலந்து கொள்வதற்கு அனுமதியளிக்க வேண்டும்.

15) மத நிகழ்வுகள்/கோவில் நிகழ்வுகள்:

மதம் வித்தியாசம் பார்க்காமல் அனைத்து திருவிழாவையும் தடை செய்யுங்கள். குடமுழுக்கு/திருவிழாக்கள் நடத்துவதை தற்சமய சூழ்நிலையில் ஒத்திவைக்க வேண்டும். எந்த மத வழிபாட்டிற்கும் மக்கள் கூட்டமாக வெளியில் செல்வதை அனுமதிக்கக் கூடாது.

கோவில்களில் திருமணங்கள்:

கோவில்களிலும்,கோவில் மண்டபங்களிலும் திருமணத்தை நடத்த மிகுந்த முன்னெச்சரிக்கையுடன், முகக்கவசத்துடன் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த வேண்டும்.

16) அத்தியாவசியப் பொருட்கள்:

தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் மட்டும் காலை 6 மணி தொடங்கி இரவு 8 மணிக்குள் மூட உத்தரவிட வேண்டும்.

அதற்குள் இவற்றை உரிய வழிகாட்டு முறைகளுடன் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேநீர் / உணவு விடுதிகளில், பார்சல் சேவை மட்டுமே தொடர வேண்டும்.

வாரத்தில் ஒரு நாள் மட்டும்,இறைச்சி கடைகள், மீன் மார்கெட், முதலிய கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் உரிய வழிகாட்டு முறைகளுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். இங்கு பொருட்களை வாங்க வருகின்றவர்களில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அனுமதிக்க வேண்டும். இல்லை,தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையே கடைக்கு வர அனுமதிக்க வேண்டும்.

17) அத்தியாவசியப் பணிகள்:

அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவற்றின் பணிகள் தொடர்வதுடன்,அவை தகுந்த பாதுகாப்புடன், வழிகாட்டுமுறைகளின்படி நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

18) பேருந்துகளில்...

லாக்டவுன் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளின் காரணமாக பயணிப்பவர்கள் குறைவாகவே இருப்பார்கள்,எனவே பேருந்துகளின் எண்ணிக்கையையும் குறைக்கலாம். பேருந்துகளில் பணிபுரிய தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை முதலில் அனுமதிக்க வேண்டும்.

படிப்படியாக இவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இவர்களது பணியிடங்களிலேயே முகாம் அமைக்க வேண்டும். பேருந்துகளில் 50%பயணிகளை மட்டும் இடைவெளிவிட்டு பயணிக்க அனுமதி அளிக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு பயணிக்க அனுமதி அளிக்கக்கூடாது.

19) கட்டுப்பாட்டு அறைகள் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

மக்களின் பல்வேறு ஐயங்களைப் போக்க இவற்றின் 24 மணி நேர மிகவும் அவசியமானது. கோவிட் நோயைக்குறித்தும்,மருத்துவமனைகளில் இட வசதி குறித்தும், ஆக்ஸிஜன் இருப்பு குறித்தும்,மருந்துகள் கிடைக்குமிடங்கள்,அவற்றை பெறுவது,பயன்படுத்துவது குறித்தும்,தடுப்பூசிகள் குறித்தும், மக்களுக்குத் தொடர்ந்து தொய்வின்றித் தகவல்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

20) முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு:

முகக்கவசம் அணியாமல் செல்பவர்களைப் பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிப்பதை விட,அவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 மாஸ்குகளை கையில் கொடுத்து அதற்கான தொகையை வசூலிக்க வேண்டும். அவர்கள் வேறு வழியின்றி அதைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள்.

21) தனி மனித இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு:

தனி மனித இடைவெளி கடைபிடிக்காத தனி நபர்களுக்கும்,நிறுவனங்களுக்கும் தொடர்ந்து அபராதம் விதிக்க வேண்டும்.மீண்டும் அவர்கள் அதே தவறைச் செய்கின்ற போது தண்டனை வழங்க வேண்டும். மீண்டும் தவறு செய்யும், வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மூடப்பட வேண்டும்.

22) சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கட்டாயம்:

உணவக/தேநீர் கடை தொடங்கி அனைத்து பொருள் வாங்க வரும் கடைகளிலும்,ஊழியர்கள் வரும் நிறுவனங்களிலும் சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் ஆகியவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு கடைகளுக்கு வருகின்றவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு உணவு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். வேலை செய்யும் ஊழியர்களுக்கு உணவு விற்கும் கடைகளும், நிறுவனங்களுமே முகக்கவசங்களை வழங்க வேண்டும்.

23) தொடர வேண்டிய தமிழக அரசு அறிவித்திருக்கும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

அனைத்து முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள்,திரையரங்குகள், பெரிய வணிக வளாகங்கள் கூட்ட அரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை முழுமையாக மூடப்பட்டடிருப்பது தொடர வேண்டும்.

பள்ளி/கல்லூரி இணைய வழியாக வகுப்புகள் தொடர வேண்டும். கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்குவது தொடர வேண்டும். அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும், அனைத்து நாட்களிலும் தடை தொடர வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு,இரவு நேர ஊரடங்கு தொடரலாம். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய தடை செய்யப்பட்டிருப்பது தொடரவேண்டும். நிலைமை சீராகும் வரை,மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கான தடை தொடர வேண்டும்.

வெளிமாநிலங்களில் இருந்தும்,வெளிநாடுகளில் இருந்தும், வருபவர்களை ஏற்கனவே உள்ள விதிமுறைகளின்படி பரிசோதனை செய்தல்,தனிமைப்படுத்துதல்,போன்ற நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அவர்கள் மூலம் தொற்று பரவுவதைத் தடுக்க வேண்டும்.

24) தடுப்பூசி போடும்பணியை முடுக்கி விட வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உடனே தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட வேண்டும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒரு முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. 14.5 கோடி பேர்களுக்கு மேலாக இந்தியாவிலும்,52.51 லட்சம் பேர்களுக்கு மேலாக தமிழகத்திலும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு தொற்று ஏற்படுவது அபூர்வம்.வந்தாலும் மிதமான பாதிப்பாகவே அது இருக்கும். ஏழை எளிய மக்களுக்கு தடுப்பூசியை விலையில்லாமல் வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும்.

25)) ஏழை எளிய மக்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும்.

புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும்.

26) கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

27)ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்

வீட்டிற்கு ஒரு ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் (Finger Pulse Oximeter) என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதனை ஒவ்வொரு குடும்பமும் பெறவும், பயன்படுத்தவும்,நோயின் தீவிரத்தை உணர்ந்து செயல்படவும், அரசாங்கம் உதவிட வேண்டும். இந்தக் காலக்கட்டத்தில் இது மிகவும் அவசியம்.

28) கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள்

கொரோனா பணியில் ஈடுபட மேலும் தேவைகளுக்கு ஏற்ப மருத்துவர்களையும்,செவிலியர்களையும் புதிதாக நியமிக்க வேண்டும்.

29) தரமான பாதுகாப்பு உபகரணங்கள்

கொரோனா பணியில் ஈடுபடும் அனைவருக்கும் தேவையான தரமான, பாதுகாப்பு உபகரணங்களை (PPE) வழங்க வேண்டும்.

30) 7 நாள் தனிமை

இப்பணியில் ஈடுபடுகின்றவர்களின் உடலை முறையாக பரிசோதனை செய்வதுடன்,அவர்கள் பணியை முடித்தப் பிறகு குறைந்தது 7 நாட்கள் தனிமைப்படுத்தி அவர்களுக்கு தொற்றின் அறிகுறி எதுவும் ஏற்படுகிறதா என்று அறிய வேண்டும்.வேர்கள் நன்றாக இருந்தால் தான்,பூக்கள் நன்றாக இருக்கும்.

31) இறப்பைக் குறைக்க வேண்டும்:

வீடுவீடாக சென்று புதிய நோயாளிகளைக் கண்டிபிடிக்கும் அதே வேளையில்,வீ்ட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்களையும் நடமாடும் மருத்துவக்குழு மூலம் கண்காணிக்க வேண்டும். தீவிர பாதிப்புள்ள நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து இறப்பைக் குறைக்க வேண்டும்.

32) மருத்துவப் பணியாளர்களுக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது.

4-5 நோயாளிகள் ஒரு தெருவில் இருக்கின்றார்கள் என்று, அந்தத் தெருவையே தகரத் தட்டிவைத்து அடைத்து, அங்கிருக்கும் மருத்துவர்கள்,செவிலியர்கள் பணிக்குச் செல்ல சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது.

மக்கள் மீதும் நிறைய தவறுகள் இருக்கின்றன. ஒரு கை ஓசை ஏற்படுத்தாது. அரசாங்கத்தின் பணிகள் மட்டும் போதாது. பெருந்தொற்று நேரத்தில் மக்கள் செய்ய வேண்டியது என்ன, அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டியது என்னென்ன என்பது குறித்து தனிக்கட்டுரை விரைவில்.

கட்டுரை: பேராசிரியர் மருத்துவர். முத்துச் செல்லக் குமார், ருக்மணி மருத்துவத் தகவல் மையம்.

English summary
Dr Muthu Chellakumar lists hout How the govt can prevent Coronavirus spread?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X