Independence Day: பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிரான முதல் யுத்தம்-கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்துகோன் (1)
சென்னை: நாட்டின் 74-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ந் தேதி பேரெழுச்சியுடன் இந்திய திருநாடு கொண்டாட இருக்கிறது. நமது சுதந்திரத்துக்கு வயது 74. ஆனால் நமது சுதந்திர போராட்டத்துக்கு வயது எத்தனை இருக்கும்?
பொதுவாக விடுதலைப் போர் தொடர்பான வரலாற்று பக்கங்கள் வட இந்திய நிகழ்வுகள் அடிப்படையில்தான் எழுதப்பட்டிருக்கின்றன. ஆகையால் கி.பி. 1857-ம் ஆண்டு நிகழ்ந்த சிப்பாய் கலகம் அல்லது சிப்பாய் புரட்சியில் இருந்துதான் இந்திய விடுதலைப் போர் தொடங்குவதாக எழுதப்பட்டிருக்கிறது.

ஆனால் வரலாற்று நிகழ்வுகளும் தரவுகளும் நிச்சயம் கி.பி.1857 சிப்பாய் கலகம் முதலாவது இந்திய சுதந்திரப் போர் அல்ல. அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே- மிக சரியாக 102 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டு மண்ணில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக யுத்தம் தொடங்கிவைக்கப்பட்டது. நன்றாக கவனியுங்கள் கலகமும் புரட்சியும் அல்ல.. ஆங்கிலேயருக்கு எதிரான யுத்தம்/ போர் நிகழ்த்திய முதல் மண் தமிழ்நாடுதான்.
மதுரையில் கி.பி.14-ம் நூற்றாண்டு தொடங்கியது நாயக்கர்கள் ஆட்சிக் காலம். மதுரை, திருச்சிராப்பள்ளியை தலைநகராக கொண்டு நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்தனர். கி.பி. 1731 முதல் கி.பி. 1739 வரை மதுரையை ஆண்டவர் மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் மனைவி மீனாட்சி. கர்நாடகா நவாப்புகள் அல்லது ஆற்காடு நவாப்புகளுடனான அம்மையநாயக்கனூர் யுத்தத்தில் மதுரை அரசி மீனாட்சி தோல்வியைத் தழுவியதால் கைது செய்யப்படுகிறார். பின்னர் மதுரை மீனாட்சி தம்முடைய வாழ்வை முடித்துக் கொள்ள நாயக்கர்களின் பல நூறு ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது.
நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அப்படியான பாளையங்களில் தென் தமிழ்நாட்டில் எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி, கட்டாலங்குளம், நெற்கட்டும்சேவல் என பல இருந்தன. ஆற்காடு நவாபுகள், பாளையக்காரர்களிடம் கப்பம் வசூலிக்க ஆங்கிலேயர் படைகளை பயன்படுத்தி வந்த காலம் அது. கி.பி. 1755 ஆம் ஆண்டு.. அப்போது ஆங்கிலேயர் தளபதி கர்னல் ஹரான், பாளையக்காரர்களிடம் ஆற்காடு நவாப்புக்காக வரிவசூல் செய்ய பெரும்படையுடன் புறப்பட்டார். மதுரையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மியானா கப்பம் கட்ட மறுத்தார். அதனால் அவரை கைது செய்ய முதலில் கிளம்புகிறது ஹரான் படை. இந்த படையின் தளபதியாக இருந்தது கான்சாகிப். ஆம் சாட்சாத் அதே யூசுப் கான் எனப்படுகிற மருதநாயகம்தான்.(இதே மருதநாயகம் பின்னாளில் ஆங்கிலேயரை எதிர்த்து தூக்குமேடையை முத்தமிட்டது தனி வரலாறு).
திருச்சியை அடுத்து மணப்பாறை அருகே லட்சுமிநாயக்கர் என்ற பாளையக்காரர் முதலில் எதிர்க்கிறார். ஆனால் அவரை வீழ்த்திவிட்டு மதுரை நோக்கி மியானாவை கைது செய்ய சென்றது ஆங்கிலப் படை. ஆனால் மியானா தப்பி ஓடி தலைமறைவாகிறார். மியானாவை தேடி ஹரான் தலைமையிலான கான்சாகிப் படை நடத்திய அட்டூழியங்கள் எப்படியான பேரழிவுக்கு வித்திட்டது என்பதை நத்தம் கணவாய் யுத்தம் என்ற பகுதியில் பார்ப்போம். மியானை தேடிப் போன ஹரான், கான்சாகிப் படை கோவில்குடி என்ற கோவிலுக்குள் போய் தேடுதல் நடத்துகிறது. கோவில்குடி கோவில் என்பது மறவர்களின் குலதெய்வக் கோவில். இவர்கள் எந்த அரசுகளுக்கும் கீழ்வராத தன்னரசு நாட்டு கள்ளர்கள் என அழைக்கப்பட்டனர். கோவில்குடி கள்ளர் சமூகத்தின் குலதெய்வ கோவிலை சூறையாடி சிலைகளை கொள்ளையடித்த கையோடு தெற்கு நோக்கி புறப்பட்டது ஆங்கிலப் படை.
அப்போது கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துகோன், நெற்கட்டும்சேவலில் பூலித்தேவர், பாஞ்சாலங்குறிச்சியில் பொல்லா பாண்டியக் கட்ட பொம்மு (வீரபாண்டிய கட்டபொம்மனின் தாத்தா) ஆகியோர் பாளையக்காரர்களாக இருந்தனர். 1755-ம் ஆண்டு மார்ச் 25-ந் தேதி தென் தமிழகத்தின் திருநெல்வேலியில் முகாமிட்டிருந்தது ஹரான் படை. பாஞ்சாலக்குறிச்சி பாளையம் ஹரானுக்கு கப்பம் கட்டியது. ஆனால் கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்துகோன் கப்பம் கட்ட மறுத்தார். இதனால் ஆங்கிலேய படைகளுடன் யுத்தம் நிகழ்ந்தது. 1755-ம் ஆண்டு பெத்தநாயக்கனூர் கோட்டையில் நடந்த போரில் வீரன் அழகுமுத்துகோனும் அவரது பல நூறு தளபதிகளும் கைது செய்யப்பட்டு பீரங்கி முன்னால் நிறுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதான் இந்திய மண்ணில் நிகழ்ந்த மிகப் பெரிய முதல் சுதந்திர யுத்தம்.
வீரன் அழகுமுத்துகோனின் தந்தையார் அழகுமுத்து கோன் 1725-ம் ஆண்டு கட்டாலங்குளத்து மன்னராக மகுடம் தரித்தார். கி.பி. 1750-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக மகுடம் ஏற்றார் மன்னார் வீரன் அழகுமுத்துகோன். தாய் நிலம் காக்க ஆங்கிலேயருடன் யுத்தம் நடத்தி வீரமரணம் அடைந்தார் வீரன் அழகுமுத்துகோன். ( அழகுமுத்துகோன் பிறந்த ஆண்டு- மகுடம் சூட்டியது இதில் சற்று குழப்பங்கள் இருக்கின்றன).
சேர்வைக்காரன் கும்மி பாடலில் வீரன் அழகுமுத்துகோன் குறித்து எழுதப்பட்டுள்ளதாவது:
கட்ட மிகுந்திடம்கட்டாலங்குளம்அழகு முத்து சேருவைகாரன்அவன் கோட்டை பெத்தஊரிலும் தானுமேகொற்றவன் காக்கவேசண்டை செய்தான்வீராதி வீரரும்சூராதிசூரரும்.
வெங்கலகைகளைதானிழந்தார்மன்னாதி மன்னரைமார் காத்து நின்றமுத்து மாணிக்க சேர்வையும்மாய்ந்து விட்டார்பரிமேல் ஏறிரண கள மேவியபச்சைமால் சேர்வையும் மாண்டுவிட்டான்.
இதுதான் வீரன் அழகுமுத்துகோன் வரலாறு!
இங்கிருந்துதானே முறைப்படி இந்திய விடுதலைப் போர் எழுதப்பட்டிருக்க வேண்டும். இத்தனைக்கும் அன்றைய ஆங்கிலேய தளபதிகள் அந்த காலங்களிலேயே எழுதிய புத்தகங்கள் ஏராளமாகவே இருக்கின்றன. ஆனாலும் ஏனோ வட இந்தியாவின் சிப்பாய் கலகம்தான் இந்தியாவின் முதல் விடுதலைப் போராக படிக்கவைக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அடங்க மறுத்த ஹரான் படை நெல்கட்டும்சேவல் பாளையக்காரர் பூலித்தேவருடன் மோதிப் பார்த்தது. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பூலித்தேவரின் கோட்டையில் சிறு கீறலை மட்டும்தான் ஏற்படுத்த முடிந்தது ஹரான் படையால்... எவ்வளவோ பேசிப் பார்த்தார்.. ஆசைவார்த்தை காட்டிப் பார்த்தார் ஹரான். ஆனால் உனக்கு ஏன் கப்பம் தர வேண்டும்? ஆற்காடு நவாபுக்கு ஏன் கப்பம் கட்ட வேண்டும் என்கிற விடுதலைக் குரல் பூலித்தேவரிடம் இருந்து பீரங்கிகளாய் சீறின. பூலித்தேவருடனும் யுத்தம் நடத்தியது ஹரான் படை. ஆனால் பூலித்தேவரை வெல்ல முடியாமல் ஹரான் - கான்சாகிப் படை புறமுதுகிட்டு மதுரைக்கு திரும்பியது. 1,000க்கும் அதிகமான வீரர்களுடன் மதுரை திரும்பிய ஹரான் படை திருச்சிராப்பள்ளி செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.
அப்போது மதுரையில் இருந்து திருச்சி செல்லும் பாதை அப்படி ஒன்றும் எளிய பாதை அல்ல. நத்தம் கணவாய் எனும் மலைப்பாதையை கடந்து பெருங்காடுகளினூடே பயணித்துதான் திருச்சியை சென்றடைய முடியும். மதுரையில் முகாமிட்டிருந்த ஹரான் படைக்கு உளவுப் பிரிவு ஒரு தகவல் சொன்னது... கோவில்குடி கோவிலில் நீங்கள் கொள்ளையடித்த சிலைகளை மீட்பதற்காக தன்னரசு நாட்டு கள்ளர் படை பெரும் தாக்குதலுக்கு தயாராக உள்ளனர் என்பது அத்தகவல். இது ஹரான் படைக்கு உதறலைத்தந்தாலும் பெரும் ஆயுதங்கள். கூலிப்படை, பீரங்கிகள் இருக்கிறதே என்கிற இறுமாப்பில் அசட்டையாகவும் உள்ளுக்குள் எச்சரிக்கையாகவும் இருந்தார் ஹரான் படை. அப்படி கிளம்பிய ஹரானின் படைக்கு என்ன நேர்ந்தது?
அதுதான் வரலாற்றின் பக்கங்கள் இன்னமும் அதிகமாக பேசாமல்- ஆங்கிலேயர்களின் வரலாற்று குறிப்புகளில் மட்டுமே புதைந்து கிடக்கும் வீரம் செறிந்த நத்தம் கணவாய் யுத்தம் (தொடரும்)












Click it and Unblock the Notifications