For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிசம்பர் 3 முதல் 5 வரை 20-வது தமிழ் இணைய மாநாடு- ஆய்வுக் கட்டுரைகளை எப்போது எப்படி அனுப்புவது?

Google Oneindia Tamil News

சென்னை: 20-வது தமிழ் இணைய மாநாடு டிசம்பர் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை இணையவழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தமம் (INFITT- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் ) ஆண்டுதோறும் தமிழ் இணைய மாநாடு ஒன்றை நடத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிக அளவில் பயணக் கட்டுப்பாடுகள் இருப்பதால் இந்த ஆண்டுக்கான 20வது தமிழ் இணைய மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெற உள்ளது.

20வது தமிழ் இணைய மாநாடு 2021 இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூரு மற்றும் ஹைதராபாத்.பல்கலைக் கழகங்களுடன் இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநாடு இணையவழி மெய் நிகர் மாநாடாக டிசம்பர் 3-5 தேதிகளில் நடைபெற உள்ளது.

INFITT to hold 20th Tamil Internet Conference on Dec 3-5

20-வது தமிழ் இணைய மாநாட்டுகான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கு பெற்றதற்கான சான்றிதழ் விரும்புவோர் முன்பதிவு செய்யவேண்டும். இம்மாநாட்டில் கட்டுரைகள் சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக உத்தமம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு:

உலகெங்கிலும் தமிழ்க் கணினி சார்பாக ஆய்வு செய்துவரும் ஆய்வாளர்களையும் மாணவர்களையும் தமிழ் இணைய மாநாடு வழி தொடர்ந்து இணைத்துவருவதும் இத்துறை சார்பான கட்டுரைகளைப் பகிர்ந்துகொள்வதும் இந்நிறுவனத்தின் சாதனைகளில் ஒன்றாகும். நுண்கிருமி காரணமாக கடந்த வருடம் இம்மாநாட்டை மெய்நிகர் மாநாடாக நடத்தினோம். அவ்வண்ணமே இவ்வருடமும் மெய்நிகர் வழி இம்மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.

உத்தமம் நிறுவனத்தின் தற்போதைய தலைவரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மேனாள் மொழியியற் பேராசிரியருமான மாரப்ப கணேசன், இம்மாநாட்டின் நிகழ்ச்சிகள் குழுத் தலைவராகப் பொறுப்பேற்று நடத்தித் தர இசைந்துள்ளார்கள். மேலும் ஹைதிராபாத் பல்கலைக்கழகக் கணினிப் பேராசிரியர் முனைவர் கே. பரமேஸ்வரி, மொழியியற் பேராசிரியர் முனைவர் அருள் ஆகியோர் நிகழ்ச்சிகள் குழுவின் இணைத்தலைவர்களாகப் பொறுபேற்று நடத்தித்தர இசைந்துள்ளார்கள். இம்மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை படைக்கப் பேராளர்களை இந்நிறுவனம் அன்புடன் அழைக்கிறது.

இதன் முதற்கட்டமாக ஒன்று அல்லது இரண்டு பக்கத்துக்கு மிகாமல் கட்டுரைச் சுருக்கத்தை எதிர்வரும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். இம்மாநாட்டில் படைக்கவிருக்கும் தங்களின் ஆய்வுக் கட்டுரை வேறு மாநாடுகளில் இதுவரை படைக்காத புதிய படைப்பாக இருக்கவேண்டும். அத்தோடு வேறு எந்தக் கட்டுரைத் தொகுப்பிலும் இக்கட்டுரையோ அல்லது இதன் மாறுபட்ட வடிவமோ வெளிவந்திருக்கக்கூடாது என்பதையும் மனதில் கொள்ள விழைகிறோம்.

கட்டுரைச் சுருக்கங்களும் கட்டுரைகளும் மூன்று ஆய்வாளர்களால் கட்டுரையாளர்களின் பெயர் அறியாமல் ஆய்ந்தறியப்பட்டுத் தேர்வு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இம்மாநாட்டில் படைக்கப்படும் சிறப்பான கட்டுரைகளுக்கு நற்சான்றிதழும் ஊக்கப்பரிசாக நிதியும் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

முந்தைய மாநாடுகளைப் போல இந்த மாநாட்டிலும் பின்வரும் தலைப்புகளிலும் கருத்துகளிலும் சமீபத்திய ஆய்வு முடிவுகளுக்கு இணையாகக் கட்டுரைகள் இருக்கவேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இயற்கை மொழிகளின் பகுப்பாய்வு குறித்தான ஆய்வில் தமிழ் மொழிக்கான ஆய்வு (ஒலியனியல், உருபனியல், தொடரியல், பொருண்மையியல், இலக்கணக் கூறுகள் ஆய்வு, சொற்களின் வலைப்பின்னற் தொடர்பு, உரைத்தொகுப்பாய்வு)

தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளை இணைக்கும் இயந்திர மொழிபெயர்ப்பு குறித்தான ஆய்வு.

தமிழ் உரையினின்று பேச்சு, தமிழ்ப் பேச்சை அறியும் ஆய்வு, பேச்சுத் தொகுப்பாய்வுமற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கான மொழி ஆய்வு.

தமிழ் குறித்தான தேடுபொறிகள், உரைகளின் விரிவான விளக்கங்கள், உரைகளின் பகுப்புமுறைமற்றும் உரைகளின் பெருந்தொகுப்பினின்று ஆய்வு.

கையடக்கக் கருவிகளில் தமிழின் பயன்பாடு குறித்தான ஆய்வு மற்றும் நிரலிகள் உருவாக்கம்.

நிரலாளர்களின் ஒருங்கிணைப்பில் பொது நிலையில் உருவாக்கப்படும் நிரலிகள் குறித்தான ஆய்வுமற்றும் தனிப்பட்டவர்களின் பயனுக்கேற்ற வகையில் உருவாக்கப்படும் நிரலிகள் குறித்தான ஆய்வு.

உரையாக்க நிரலிகள் மற்றும் சொற்திருத்தி, இலக்கணத் திருத்தி மற்றும் ஒற்றுப்பிழைத் திருத்தி குறித்தான ஆய்வு.

கணினி வழி மொழிக் கற்றல் மற்றும் கற்பித்தல் தொடர்பான ஆய்வு.

மெய்நிகர் வழியில் மொழிக் கற்றலுக்கான தளங்களை உருவாக்கம் மற்றும் பயன்பாடு குறித்த ஆய்வு.

இணையம் வழி நுண்மை சார்ந்த தமிழ் மொழி குறித்த தகவல் பங்கீடுமற்றும் மின்வழி நூலகம் உருவாக்கல் குறித்த ஆய்வு.

தமிழ் உரைகளினின்று மனித உணர்வுகள் மற்றும் கருத்து அறியும் நுண்ணாய்வு.

தமிழ் மொழியோடு மற்ற மொழிகளைக் கலந்து எழுதும் முறை மற்றும் பன்மொழியில் கருத்து வெளிப்பாட்டு முறை.

மின்வழித் தமிழ் அகராதிகள் உருவாக்கம் மற்றும் தேடுபொறி வசதிகளோடு உருவாக்கப்பட்ட அகராதிகள் மற்றும் இலக்கிய உரைகள் குறித்த ஆய்வு.

ஆகியவை குறித்து கட்டுரைகள் அனுப்பலாம்.

INFITT to hold 20th Tamil Internet Conference on Dec 3-5

படைக்கப்படும் கட்டுரைச் சுருக்கங்களும் (ஒன்று அல்லது இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்) கட்டுரையும் (பத்திலிருந்து பன்னிரண்டு பக்கங்களுக்குள்) தமிழ் ஒருங்குறி வடிவில் இருக்கவேண்டும்.

ஆங்கிலம் வழி எழுதும் கட்டுரைகளில் பயன்படுத்தப்படும் தமிழ்ச் சொற்கள் மற்றும் தொடர்களை தகுந்த குறியீட்டோடு ஆங்கில வழியில் இடைநிலை மொழிபெயர்ப்போடு கொடுக்கவேண்டும். தமிழ் வழி எழுதப்படும் கட்டுரைகளுக்கு ஒரு பக்க அளவில் கட்டுரையும் சுருக்கத்தை ஆங்கிலத்தில் கொடுக்கவேண்டும்.

SCOPUS என்னும் ஆய்வுக்கட்டுரைகளை தொகுக்கும் நிறுவனத்தில் தமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரைகளை இணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருவதால் மேற்படி முறைகளைக் கட்டாயமாக கையாளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கட்டுரையை மாநாட்டில் ஆய்வாளர்களில் ஒருவராவது பதிவு செய்துகொண்டு நேராகப் படைக்கவேண்டும்.

மற்றவர் மூலமோ பதிவுசெய்யப்பட்ட படைப்புகளையோ ஏற்கவியலாது. நேரடியாகப் படைக்க இயலாதவர்களின் கட்டுரைகள் கட்டுரைத்தொகுப்பில் இணைக்கப்படமாட்டாது என்பதை அறியவும்.

கட்டுரைச் சுருக்கங்கள் மற்றும் கட்டுரைகளை https://easychair.org/conferences/?conf=tic2021 என்ற முகவரியில் தரவேற்றம் அனுப்பவேண்டும்.

கட்டுரை படைப்பு குறித்தான பின்வரும் கால அட்டவணையை மனதில் கொள்ளவும். தாமதமான கட்டுரைகள் நிராகரிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கட்டுரைச் சுருக்கம் அனுப்பவேண்டிய கடைசி நாள் - 30, செப்டம்பர் 2021

கட்டுரைச் சுருக்கம் ஏற்றுக்கொண்டதற்கான அறிவிப்பு - 15, அக்டோபர், 2021.

முழுக் கட்டுரை அனுப்பவேண்டிய கடைசி நாள் - 25 அக்டோபர், 2021

முழுக்கட்டுரை ஏற்றுக்கொண்டதற்கான அறிவிப்பு - 10நவம்பர், 2021.

மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பில் இணைப்பதற்கான கடைசி வடிவத்தில் கட்டுரை அனுப்பவேண்டிய கடைசி நாள் - 25 நவம்பர், 2021.

தொடர்புக்கு: [email protected]

மேலதிக தகவல்களுக்கு : [email protected]

இவ்வாறு உத்தமம் அமைப்பு தெரிவித்துள்ளது.

English summary
NFITT to hold 20th Tamil Internet Conference through Virtual on Dec 3-5.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X