17.5 லட்சம் திரும்ப கிடைக்கும்.. 50 லட்சம் வரை கடன் தரும் மத்திய அரசு.. யாரெல்லாம் வாங்கலாம்?
சென்னை: ரூ. 17.5 லட்சம் வரை மானியத்துடன் (35 சதவீத மானியத்துடன்), 50 லட்சம் வரை கடன் தருகிறது மத்திய அரசு.. இந்த கடனை எப்படி பெறுவது? யாரெல்லாம் வாங்க முடியும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..
நமது நாட்டில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், வேலையை மட்டும் நம்பி இருக்காமல் சுயதொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் விதமாக 'பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டப்படி படித்த இளைஞர்கள் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களாக இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்காக உள்ளது. இந்தத் திட்டம் மூலம் ஒரு லட்சம் முதல் 50 லட்சம் வரை அரசு கடன் வழங்கும் அரசு, இந்த கடனில் 35 சதவிகிதம் வரை மானியம் வழங்குகிறது. இந்த கடனை எப்படி வாங்குவது? எந்த கடன் பெற தகுதிகள் என்ன? என்னென்ன தொழில்களுக்கு அரசு கடன் தருகிறது என்பதை பார்ப்போம்.

மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தால் இந்த கடன்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை 2026வரை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், 2021-2022 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்திற்கு ரூ.13,554.42 கோடிகளை 15வது நிதி ஆணையம் ஒதுக்கீடு செய்திருக்கிறது.
பொதுவாக உற்பத்தி சார்ந்த புதிய தொழில்களுக்கு ரூ. 50 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதேநேரம் சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை வாங்க விரும்புவோர் பொதுப்பிரிவினராக இருந்தால். தாங்கள் தொடங்கும் தொழிலின் மொத்த மதிப்பீட்டில் 10 சதவிகிதத்தை சொந்தமாக முதலீடு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
அதேநேரம் பெண்கள் (எந்த பிரிவாக இருந்தாலும்), எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை சமூகத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் தாங்கள் தொடங்கும் தொழிலின் மொத்த மதிப்பீட்டில் 5 சதவிகிதத்தை சொந்தமாக முதலீடு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். உதாரணமாக 10 லட்சம் மதிப்பீடு தேவை என்ற தொழிலுக்கு பொதுப்பிரிவினர் 1 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். அதேநேரம் மற்றவர்கள் வெறும் 50000 முதலீடு செய்தால் போதும்.
மானியம் எப்படி: கிராமப் புறங்களில் வாழ்பவர்கள் தொழில் தொடங்கினார் அதிகபட்சமாக 35 சதவிகிதம் வரையும், நகர்ப்புறங்களில் தொழில் தொடங்குபவர்களுக்கு அதிகபட்சமாக 25 சதவிகிதம் வரையும் கடன் மானியம் கிடைக்கும். இந்த அதிபட்ச மானியம் என்பது பெண்கள், எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை சமூகத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு மட்டுமே பொருந்தும். அதேநேரம் பொதுப்பிரிவினர் கிராமப்புறங்களில் தொழில் தொடங்கினால் 25 சதவிகிதம் மானியமும், நகர்ப்புறங்களில் தொழில் தொடங்கினால் 15 சதவிகித கடன் மானியமும் வழங்கப்படும். மானியம் உடனே கிடைக்காது, தொழில் நடத்தி கடனை 3 ஆண்டுகள் தவணை முறையில் செலுத்து தொடங்கிய பின்னர், 3 வது ஆண்டிற்கு பின்னரே மானியம் கிடைக்கும். வெற்றிகரமாக தொழிலை நடத்துபவர்களுக்கே இந்த மானியம் திருப்ப கிடைக்கும்..
இந்த திட்டத்தில் கடன்பெற யாரிடமும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை.. எல்லாமே ஆன்லைன் வாயிலாக வெளிப்படையாக நடைபெறும்.. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.kviconline.gov.in. என்ற தளத்தில் இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டியது அவசியம் ஆகும். விண்ணப்பம் சமர்பிக்கப்பட்ட 10 முதல் 15 நாட்களுக்குள் அரசு தரப்பில் இருந்து உங்களுக்கு பதில் கிடைக்கும்..
அதன் பிறகு உங்கள் திட்டத்திற்கான அனுமதி தொடர்பான பணிகளை அரசு தரும். அதேநேரம் நீங்கள் தொடங்கும் தொழில் தொடர்பாக உங்களுக்கு மத்திய அரசின் ஒரு மாத பயிற்சி அளிக்கும்.. இந்தப் பயிற்சி ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நடக்கும். இந்த ஒரு மாத பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே கடன் கிடைக்கும்.. பயிற்சி முடிந்ததும் உங்கள் கடனின் முதல் தவணை உங்களுக்கு வழங்குவார்கள். ஆனால், மானியத்தை பொறுத்தவரை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே கிடைக்கும்..
18 வயது நிறைவடைந்த குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.. விவசாயம் சார்ந்த உணவு பதப்படுத்துதல், சிமெண்ட் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள், பால் மற்றும் பால் பொருட்கள், மின்னணு மற்றும் மின் சாதனங்கள், காகிதம் மற்றும் அது சார்ந்த பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் அது சார்ந்த சேவைகள், சேவைத் துறை, சிறு வணிக மாதிரிகள், கழிவு மேலாண்மை உள்பட பல்வேறு தொழில்களுக்கு கடன் கிடைக்கும். https://www.kviconline.gov.in/pmegp/pmegpweb/docs/jsp/newprojectReports.jsp என்ற லிங்கில் எந்தெந்த தொழில்களுக்கு கடன் கிடைக்கும் என்பதை அறியலாம். மொத்தம் 1056 தொழில்களுக்கு கடன் தரப்படுகிறது. எனவே கண்டிப்பாக நீங்கள் நினைக்கும் பெரும்பாலான தொழில்களுக்கு கடன் கிடைக்கும்.
அதேநேரம் இறைச்சி கடை வைப்பது உள்ளிட்ட தொழில்கள், சிகரெட், பீடி, பான் பொருட்கள் உற்பத்தி தொழில்கள், ஹோட்டல்கள், மது விற்பனை மற்றும் விநியோகம், தேயிலை, காபி, ரப்பர் போன்ற பயிர் பொருட்கள் சாகுபடி தொடர்பான தொழில்களுக்கு கடன் கிடைக்காது. கடனுக்கான வட்டி விகிதத்தை பொறுத்தவரை பொதுத்துறை வங்கியில் 7 முதல் 10 சதவிகித வட்டி விகிதத்தில் கடன் இருக்கும். தனியார் வங்கிகளில் இதைவிட மிக அதிகமாக இருக்கும்.
கடன் பெற ஆவணங்கள்: பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அவசியம் ஆகும். நீங்கள் தொடங்க இருக்கும் தொழிலுக்கான திட்ட அறிக்கை வேண்டும். நீங்கள் வசிக்கும் ஊரில் அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று, பான் மற்றும் ஆதார் கார்டு வேண்டும். அத்துடன் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் ஒரு மாதம் அளிக்கப்பட்ட பயிற்சி குறித்த மத்திய அரசு வழங்கிய சான்றிதழ் வேண்டும். நீங்கள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் என்றால் அதற்கான சான்றிதழ் வேண்டும். மேலும் கல்வித் தகுதிகள், தொழில்நுட்பத் தகுதிக்கான சான்றிதழ் இருந்தால் அவசியம் ஆகும். இவை தவிர கடன் வழங்க பொதுவாக வங்கிகள் கேட்கும் மற்ற ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications