அரசு வேலையில் இல்லாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.. அண்ணாமலை சொல்வது சாத்தியமா?
சென்னை: தமிழகத்தில் 2026ல் பாஜக ஆட்சிக்கு வந்தால், அரசுப் பணியில் யாரும் இல்லாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அண்ணாமலை வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது சாத்தியமா என்பது குறித்து பெரிய கேள்விகள் எழுகிறது.. அதற்கு திமுக தரப்பு மட்டும் அதிகாரிகள் தரப்பில் என்ன சொன்னார்கள் என்பதை பார்ப்போம்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அண்ணாமலை பேசுகையில் " பாரத பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி காலத்தில் 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கி இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் நடந்து முடிவுகள் வந்த பிறகும் அவர்களுக்கு பணி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

ஆனால் 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு நிச்சயமாக குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். 9 தலைமுறைகளாக எனது குடும்பத்தில் யாரும் அரசு வேலை செய்யவில்லை. எனக்கு மட்டும்தான் அரசு வேலை கிடைத்தது. இந்த நிலைமை மாறி அரசு வேலை இல்லாத குடும்பத்திற்கு அரசு வேலை நிச்சயம் கிடைக்க வழி வகை செய்யப்படும். உங்க ஊரிலே இத்தனை தலைமுறையாக அரசு வேலை இல்லாமல் ஒருவர் இருந்தால், அந்தக் குடும்பத்தில் ஒரு சகோதரர், சகோதரி டிகிரி முடித்துவிட்டால் முன்னுரிமை அளித்து அரசு வேலை அளிக்கப்படும்" என்று கூறினார்.
இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்தை பலரும் விமர்சித்து வருகிறார்கள். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது சாத்தியமே இல்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் எதிர்வ்வு தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கனகராஜ், வெளியிட்ட பதிவில், "இவங்களுக்கெல்லாம் கூச்சமே இருக்காதா? இவங்க தலைவரு ஆண்டுக்கு 2 கோடி வேலைன்னாரு. அண்ணாமலையோ தமிழ்நாட்டுக்கு 2.397 கோடி வேலை தருவாராம். முதல்ல உங்க தலைவர்ட்ட 100 நாள் வேலையை கொடுக்கச் சொல்லுங்க.ஒன்றிய அரசுப் பணிகளில் காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப சொல்லுங்க." என்று கூறினார்
இதனிடையே கனகராஜ் வெளியிட்ட பதிவினை டேக் செய்து பதிவிட்டிருந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "ஒரு ஒப்பீட்டுக்கு-- தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்... பாஜக கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று....அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3-இல் ஒருவருக்கு அரசு வேலையாம்! அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் இப்படி வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்கிற வாக்குறுதி கொடுத்துள்ளார் என்று நினைக்கிறீர்களா.. அதுதான் இல்லை.. இந்த வாக்குறுதியை ஏற்கனவே 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தற்போதைய எதிர்க்கட்சியும் அன்றைய ஆளும் கட்சியான அதிமுக கொடுத்தது. முன்னதாக கோவாவில் ஆம் ஆத்மி இதேபோல் வாக்குறுதி கொடுத்துள்ளது.
உண்மையில். இதுவரை அரசுப் பணிகளைப் பெறாதவர்களின் குடும்பங்களைத் தேர்வுசெய்து, அந்த வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது சாத்தியமா? என்ற கேளவி எழுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசுப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டு தோறும் ஏற்படும் காலி பணியிடங்களை தகுதித் தேர்வுகளின் மூலம் மட்டுமே நிரப்புகிறது. கடுமையான போட்டி தேர்வுகளில் வெற்றி ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் படியே பணிகள் வழங்கப்படுகிறது.
இந்த இட ஒதுக்கீட்டில், தமிழ்வழியில் படித்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், கணவனை இழந்த ஆதரவற்ற பெண்கள் உள்பட வெவ்வேறு விகிதங்களில் உள் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஆனால் அரசுப் பணியில் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பணிகளை வழங்கும் வகையில் விதிகள் ஏதும் இதுவரை இல்லை. அப்படியான சட்டத்தை தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமக இரண்டுமே எப்போதுமே கொண்டு வந்தது இல்லை.. ஏன் அப்படியான வாக்குறுதிகளை அவர்கள் அளித்ததும் இல்லை.. 2021ல் தான் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என அதிமுக வாக்குறுதி அளித்தது.. ஆனால் தேர்தலில் அதிமுக வெற்றிபெறவில்லை..
இதுபற்றி அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், டிஎன்பிஎஸ்சி விதிகளின்படி, இடஒதுக்கீடு மட்டும்தான் அளிக்க முடியும். இதுபோல முன்னுரிமை அளிக்க ஒரு விதியை உருவாக்கினால் பலர் நீதிமன்றம் சென்று வழக்குகள் தொடருவார்கள். அடிப்படை உரிமையை பாதிக்கும் என்பதால், இந்த விதியை நீதிமன்றமும் ஏற்காது. அதேபோல் டிஎன்பிஎஸ்சியில் இஷ்டத்திற்கு விதிகளை உருவாக்கி, பணியிடங்களை நிரப்ப எந்த அரசாலும் உத்தரவிட முடியாது என்றார்..












Click it and Unblock the Notifications