டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ மெயின் தேர்வு முடிவு வெளியீடு.. தேர்வர்கள் அறிய வேண்டிய அடுத்த குட்நியூஸ்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார் பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு குரூப்-2, 2ஏ போட்டித்தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ பதவிகளில் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் 1,936 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வர்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார் பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு குரூப்-2, 2ஏ போட்டித்தேர்வுகள் நடத்திதான் அதிகாரிகளை தேர்வு செய்வது வழக்கம். அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ பதவிகளில் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு தேர்வுகள் அறிவிகப்பட்டன. இந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து 3 லட்சத்து 9 ஆயிரத்து 841 ஆண்களும், 4 லட்சத்து 84 ஆயிரத்து 74 பெண்களும், 51 திருநங்கைகளும் என மொத்தம் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் இந்த காலி இடங்களுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

இதில் குரூப்-2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை போட்டித்தேர்வு கடந்த ஆண்டு (2024) செப்டம்பர் மாதம் 14-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை, விண்ணப்பித்து இருந்த 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேரில், 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதியிருந்தார்கள். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 29 ஆயிரத்து 790 பேர் தேர்ச்சி பெற்றார்கள். இதில் குரூப்-2 பதவிகளுக்கு 7 ஆயிரத்து 987 பேரும், 2ஏ பதவிகளுக்கு 21 ஆயிரத்து 803 பேரும் தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள்.
இதனிடையே, குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இதில், குரூப்-2ஏ தேர்வை 20 ஆயிரத்து 33 பேர் எழுதினார்கள். 1,936 காலிப்பணியிடங்களுக்காக நடந்த குரூப்-2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வர்கள் முதன்மை எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் இருவழித்தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை வெளியிடப்பட்டிருக்கிறது.
தேர்வர்கள், http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப்-2ஏ முதன்மை தேர்வு முடிவுகளை அறிய முடியும். தேர்வு நடைபெற்ற 56 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 12-வது முறையாக திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.
முன்னதாக 2024-ம் ஆண்டுக்கான தேர்வு காலஅட்டவணை கடந்த 20.12.2023 அன்று வெளியிடப்பட்டிருந்தது. தேர்வர்களின் நலன் கருதியும், தேர்வு முறைகளை விரைந்து செயல்படுத்தவும், தொழில்நுட்ப பதவிகளுக்காக நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளை ஒருங்கிணைத்தும் ஒருங்கிணைந்த குரூப்-2ஏ தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுத் திட்டத்தை மாற்றியமைத்தும் 2024-ம் ஆண்டுக்கான தேர்வு காலஅட்டவணை திருத்தியமைக்கப்பட்டது. இதன்படியே இந்த தேர்வுகளும் நடந்தது.
குரூப்-2, குரூப் 2 ஏ, பணிகளுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. மெயின் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. எனவே மெயின் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் வேலைக்கு சேரப்போவது உறுதி. நேர்முகத்தேர்வு இல்லை என்பதால் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு முடிவுகளை அறிய முடியும் என்பதால் தேர்வர்கள் உற்சாகமாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications