குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! அரசே நடத்தும் இலவச பயிற்சி வகுப்பு.. எங்கெல்லாம்?
சென்னை: குரூப் - 4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் எங்கெல்லாம் நடைபெறுகிறது என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை இங்கு பார்க்கலாம்.
அரசுத்துறைகளில் பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்களை அரசுப்பணியாளர் தேர்வு ஆனையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி நிரப்பப்படுகிறது. ஆண்டு தோறும் எந்த தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில், தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு காணப்படும் இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

இதன்படி 6,244 பணியிடங்கள் நிரப்புவதற்கான இந்த குரூப் 4 தேர்வு வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28. 02. 2024 கடைசி நாளாகும். குரூப் 4 பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு கல்வி தகுதி என்றாலும் முதுகலை பட்டம் முடித்தவர்களும் விண்ணப்பிக்கிறார்கள். இதனால், சில ஆயிரம் பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் போட்டி போடுவதை பார்க்க முடிகிறது.
இலவச பயிற்சி மையம்: தேர்வை பொறுத்தவரையில், தமிழ் தகுதித்தாள் தேர்வாக 100 வினாக்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக பாடம் சார்ந்த தேர்வாக 100 வினாக்களும் என 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட உள்ளது. தமிழ் தகுதித்தாள் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் பலரும் பயிற்சி மையங்களில் இணைந்து படிக்க தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், தேர்வர்களின் நலன் கருதி தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இலவச பயிற்சி மையங்களை அமைத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
38 மாவட்டங்களில்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNSURB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20000-ற்கும் மேற்பட்ட மாணவ / மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.
இலவச பயிற்சி வகுப்புகள்: மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ / மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 (TNPSC GROUP IV) தேர்விற்கு 6244 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று (30.01.2024) வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில் சிறந்த மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ / மாணவியர்கள் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இச்செய்தியினை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் திருமதி. எ.சுந்தரவல்லி தெரிவித்தார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications