For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுச்சேரியில் களமிறக்கப்பட்ட ஜெகத்ரட்சகன்.. கட்சி பணிதான்-தேர்தல் பணி அல்ல: மு.க.ஸ்டாலின் ஒரே போடு

Google Oneindia Tamil News

சென்னை: புதுச்சேரியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனை முன்வைத்து திமுக மேற்கொண்டு வருவது கட்சிப் பணிகள்தானே தவிர தேர்தல் பணிகள் அல்ல என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி இந்து நாளிதழுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:

கேள்வி: கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு சாதகமாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் அமைந்தது. தற்போது அப்பகுதியைச் சேர்ந்தவரே முதலமைச்சராக இருக்கிறார். அதை எதிர்கொள்ள தி.மு.க. என்ன செய்யப் போகிறது?

MK Stalin explains Jagathratchagans role in Puducherry DMK

மு.க.ஸ்டாலின்: அ.தி.மு.க. ஆட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டதே மேற்கு மாவட்டங்கள் தான். அங்குள்ள பல ஆயிரம் சிறு - குறு - நடுத்தர தொழில்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் மான்செஸ்டரான கோயம்புத்தூர், அ.தி.மு.க. ஆட்சியில் முற்றிலும் அனைத்து துறைகளிலும் பின்தங்கி விட்டது. முதலமைச்சர் உள்ளிட்ட அந்த பகுதியில் இருந்து அமைச்சர்களாக இருக்கும் அனைவரும் சுய லாபம் அடைந்திருக்கிறார்களே தவிர- அப்பகுதி மக்கள் எந்த பயனையும் அடையவில்லை.அமைச்சர் வேலுமணி, கோவை மாநகராட்சியைச் சூறையாடிவிட்டார்.

அமைச்சர்கள் அந்தப் பகுதிக்கு உருப்படியான எந்தத் திட்டத்தையும் செய்து தரவில்லை. பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தனித்த திட்டங்கள் இல்லை. அதுமட்டுமின்றி, பொள்ளாச்சியில் இளம்பெண்களுக்கு நடந்த பாலியல் கொடூரத்தை அப்பகுதி மக்கள் மறக்கவில்லை. அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆளுந்தரப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களைக் காப்பாற்ற அ.தி.மு.க. அரசே முயற்சித்தது என்பதையும் மேற்கு மாவட்டங்களின் மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மறக்கவில்லை.

மேற்கு மண்டலம் அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கான பகுதி என்பது 2019 நாடாளுமன்றத் தேர்தலில் உடைக்கப்பட்டு விட்டது. ஒரு தொகுதியில் கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. எத்தனை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர்கள் தோற்றுள்ளார்கள் என்பதை நீங்களே எடுத்துப் பாருங்கள். மேற்கு மாவட்டத்தில் உள்ள மக்கள் தமிழகத்தின் நலன் - ஒட்டுமொத்த முன்னேற்றம் கருதியே வாக்களிப்பார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்த நேரத்தில் எல்லாம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு - முன்னேற்றத்திற்கு பாடுபட்டு இருக்கிறது. அந்த வரிசையில் மேற்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து- அங்கு சிறு - குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும் - பெரிய தொழில் நிறுவனங்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றிருக்கிறது. அதனால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு பெருவாரியான வெற்றியை மேற்கு மண்டல மக்கள் கொடுத்தார்கள். அந்த வெற்றி சட்டமன்ற தேர்தலிலும் மேற்கு மண்டலத்தில் தொடரும்!

கேள்வி: ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதம் நடத்துவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நிபந்தனை விதித்தீர்கள். அவரோ நான் தயாராகத்தான் இருக்கிறேன், எதிர்க்கட்சித் தலைவர்தான் ஏதோ சாக்குப் போக்கு காட்டி தவிர்க்கிறார் என்கிறாரே?

ஸ்டாலின்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தக்க ஆதாரங்களுடன் தமிழக ஆளுநருக்கு ஊழல் புகார்களை கொடுத்திருக்கிறோம். அதை அமைச்சர்கள் யாரும் இதுவரை மறுக்கவும் இல்லை. எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்குப் போடும் முதலமைச்சரோ, அமைச்சர்களோ "எங்கள் மீது பொய்ப் புகார்கள் கொடுத்து விட்டார்" என்று என் மீது அவதூறு வழக்கும் போடவில்லை. முதலமைச்சர் தனது சம்பந்திக்கு நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கொடுத்ததில் உலக வங்கி விதிகள் மீறப்பட்டுள்ளன. அதன் மீது சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றது முதலமைச்சர்தான். அதை அவர்தான் வாபஸ் பெற முடியும். அதே போல் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களுக்கு அனுமதி கொடுத்து ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டியதும் முதலமைச்சர்தான். ஆகவேதான் இந்த இரு நடவடிக்கைகளையும் எடுத்து விட்டு - தன் மீதுள்ள வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு புகார் மீதும் விசாரணை நடத்த ஆளுநருக்கு அனுமதி அளித்துவிட்டு வாருங்கள். எந்த தேதி, நேரம் சொல்லுங்கள் - நான் வருகிறேன் என்று கூறிவிட்டேன். ஆனால் உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை வாபஸ் பெற முதலமைச்சருக்கு தைரியம் இல்லை.

கேள்வி: அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு இருக்கிறதோ இல்லையோ, பெரிய எதிர்ப்பு இல்லை என்கிறார்கள். கொரானாவைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசு சிறப்பாகச் செயல்பட்டது என்கிறார்கள். அதை ஏற்கிறீர்களா?

ஸ்டாலின்: தி.மு.க.வுக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத அரசியல் எதிரிகளால், சில பிற்போக்கு சக்திகளால், இப்படியொரு மாய பிம்பம் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. அரசுக்கு "எதிர்ப்பு அலை" என்பது சுனாமி போல் வீசுகிறது. 1991-1996ல் எப்படி அ.தி.மு.க.விற்கு எதிர்ப்பு அலை இருந்ததோ அதை விட பன்மடங்கு அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் எதிர்க்கிறார்கள். அதனால்தான் எதிர்கட்சியாகக் கூட அ.தி.மு.க. வர முடியாது என்கிறேன். "எப்போது போகும் இந்த ஆட்சி" என்பதுதான் எல்லா திக்குகளிலும் இன்றைக்கு தமிழகத்தில் கேட்கும் ஒரே குரல்.

கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டார் பழனிசாமி என்று யார் சொல்கிறார்கள்? தமிழ்நாட்டில் ஒரே ஒருவருக்கு கொரோனா வந்தால் கூட அம்மாவின் அரசு அவரை காப்பாற்றும் என்று சட்டமன்றத்தில் சொன்னவர் பழனிசாமி. இதுவரை பன்னிரண்டாயிரம் பேருக்கும் அதிகமானோர் இறந்துள்ளார்கள். 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா வைரஸ் பற்றிய புரிதலே இல்லாமல் முதல் மூன்று மாத காலம் அனைத்து வகையிலும் மறைத்தவர் பழனிசாமி. இறந்தவர் கணக்கில் பொய்க்கணக்கு காட்டியவர் பழனிசாமி. கொரோனாவில் ஊழல் செய்தவர் பழனிசாமி. இந்த அத்தனை கேவலங்களும் மக்களுக்குத் தெரியும்!

கொரோனா பரிசோதனை கருவி வாங்குவதில் செய்த ஊழல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிரித்தது. கொரோனா ஊரடங்கு அறிவிப்பதில் முதலில் தாமதம், முகக்கவசம் பற்றி சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தியபோது அதற்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் செய்த நையாண்டி, உயிர்காக்கும் கருவிகள் கொள்முதலில் செய்த ஊழல் இங்கு சந்தி சிரித்தது. கோயம்பேடு மார்கெட் மூடுவது, டாஸ்மாக்கை திறப்பது, பள்ளிகளை திறப்பது, மாணவர்களின் அரியர்ஸ் பாடங்களில் தேர்வு என்று அறிவிப்பதில் குளறுபடிகள் என கொரோனா நோய்த் தொற்று காலத்தில் அ.தி.மு.க. அரசு - குறிப்பாக முதலமைச்சர் திரு பழனிசாமி செய்த நிர்வாகக் குழப்பத்தை இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் - எந்த மாநில முதலமைச்சரும் செய்யவில்லை. ஆனால் பிரதான எதிர்கட்சியாக ஒன்றிணைவோம் வா பிரச்சாரத்தை தொடங்கி- ஒரு கோடி பேருக்கு உணவளித்து - மருத்துவ உதவிகளைச் செய்து- மகத்தான பணியாற்றியது திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மக்களுக்குத் தெரியும்.

பழனிசாமி கையாலாகாதவர் என்பதை இந்த கொரோனா காலம் தான் மக்களுக்கு முழுமையாக காட்டியது. மக்கள் மீது அக்கறை இல்லாதவர் என்பதையும் வெளிச்சப்படுத்தியது.இது தேர்தல் முடிவுகளில் தெரியும்!

கேள்வி: புதுச்சேரியில் தி.மு.க. முதலமைச்சர் பதவியைக் குறிவைத்து, முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனை களம் இறக்க முயற்சி நடக்கிறது என்ற செய்திகள் வருகின்றனவே?

ஸ்டாலின்: தமிழகத்தின் அரசியலை விட புதுச்சேரியின் அரசியல் மாறுபட்டது என்ற வகையில், கழகத்தை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுவை தி.மு.க. அப்பகுதிக்குச் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இது கழகப் பணிகள்தான்; தேர்தல் பணிகள் அல்ல. புதுவை சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் தேர்தல் அறிவிப்பு வெளிவரவில்லை. இதனை கூட்டணியுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

English summary
DMK President MK Stalin has explained on Former Union Minister Jagathratchagan's role in Puducherry DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X