Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MSME -க்களுக்கு இத்தனை வகையான கடன் இருக்கா! எந்த கடன் யாருக்கு ஏற்றது?

Subscribe to Oneindia Tamil

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்து கொண்டுள்ள எம்.எஸ்.எம்.இ -களுக்கு, இந்திய அரசானது பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. குறிப்பாக சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) தேவைகளை பூர்த்தி செய்ய, பல வகை கடன்கள் சலுகைகளுடன் கிடைக்கின்றன. அதில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டம் (CGS) உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் உள்ளன. இப்பதிவில் எம்.எஸ்.எம்.இ -களுக்கான பல்வேறு கடன் வகைகள் பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம்.

MSME

முக்கிய கடன் வகைகள்!

எம்.எஸ்.எம்.இ -களுக்கு என பல கடன் வகைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை தெரிந்து கொள்வோம்.

எம்.எஸ்.எம்.இ-களுக்கான கடன் உத்தரவாத திட்டம் (CGS): இந்த திட்டத்தின் மூலம் பிணை அல்லது மூன்றாம் நபர் உத்தரவாதம் இல்லாமல் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து எம்.எஸ்.எம்.இ- க்கள் கடன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் எம்.எஸ்.எம்.இ-களுக்கு 10 கோடி ரூபாய் வரை கடன் உதவிக்கு உத்தரவாதம் வழங்கப்படுகிறது. எனினும் இது குறிப்பிட்ட சதவீதத்திற்கு (பொதுவாக 75% - 85% வரையில், சில பிரிவுகளுக்கு 90% வரையில்) மட்டுமே வழங்கப்படுகிறது. இது டெர்ம் லோன் மற்றும் ஒர்க்கிங் கேப்பிட்டல் பெசிலிட்டி ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். இது புதிதாக தொழில் தொடங்குபவர்கள், பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் மைக்ரோ எண்டர்பிரைசஸ் நிறுவனங்களுக்கு அதிக பலனைக் கொடுக்கும்.

பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEG) : இந்த திட்டமானது புதிய குறு, சிறு நிறுவனங்கள் தொடங்குவோருக்கு நிதி உதவி அளிக்கிறது. இதில் அரசின் மானிய சலுகையும் கிடைக்கும். இந்த திட்டமானது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் புதிய சிறு நிறுவனங்களை அமைப்பதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட, மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டமாகும். இந்த திட்டத்தில் வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்கு இடம் பெயர்வதை தடுக்கிறது. இதில் உற்பத்தி துறைக்கு அதிகபட்ச திட்ட செலவு 50 லட்சம் ரூபாயாகவும், சேவைத் துறைக்கு 20 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் மானியத் தொகையானது 25% வரையில் கொடுக்கப்படுகிறது. கிராமப்புறத்தை சேர்ந்த சிறப்பு பிரிவினருக்கு 35% வரை மானியமும் வழங்கப்படுகிறது.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) : இது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் உள்ள பெரு நிறுவனங்கள் அல்லாத, விவசாயம் அல்லாத, சிறு தொழில் முனைவோருக்கு கடன் வழங்க உருவாக்கப்பட்ட ஒரு முக்கிய திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இது தொழில் வளர்ச்சி நிலையின் அடிப்படையில் சிசு(Shishu), கிஷோர் (kishor), தருண் (Tarun) என மூன்று வகையாக உள்ளது. அதன் கீழ் முறையே ரூ.50,000, 50,000 முதல் 5 லட்சம் வரையில், 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலும் வழங்கப்படுகிறது.

நீட்ஸ் (NEEDS - New Entrepreneur and self - employment scheme) : இந்த திட்டமும் புதிய தொழில் முனைவோருக்கு நிதி உதவி அளிக்கிறது. இந்த திட்டம் படித்த இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருப்பதை மாற்றி, வேலை வழங்குபவராக மாற ஊக்குவிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழிகளைத் தொடங்கத் தேவையான கடனை, மானியத்துடன் பெறலாம். அதிகபட்ச மானியமாக திட்ட மானியத்தில் 25% பெற வாய்ப்பு உண்டு.

யு.ஓய்.இ.ஜி.பி (UYEGP - unemployed youth employment generation programme)- இது வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட கடன் திட்டமாகும். இந்த திட்டம் தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியத் திட்டமாகும். உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த புதிய நிறுவனங்களைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள திட்டத்தில் அதிகபட்ச திட்ட செலவு உற்பத்தி பிரிவுக்கு 15 லட்சம் வரையாகும், சேவை பிரிவுக்கு 5 லட்சம் வரையாகும். மானியத்தை பொறுத்த வரையில் திட்டச் செலவில் 25% வரை வழங்கப்படும். அதிகபட்ச மானிய வரம்பு 3.75 லட்சம் ரூபாயாகும். இந்த திட்டத்தில் பயனடைய குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 35 ஆகும். சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். தமிழ்நாட்டில் நிரந்தர குடியிருப்பாளராக இருக்கும் நபர்களுக்கு ,மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், தமிழ்நாட்டின் படித்த வேலையில்லாத இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்க நிதி உதவி மற்றும் மானியம் வழங்குவதாகும்.

மேற்கண்ட கடன்களோடு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வணிகத் தேவைக்கு ஏற்ப பல்வேறு வகையான கடன்களை வழங்குகின்றன.

நிலையான மூலதன கடன்: இந்த கடன் ஆனது சிறு குறு நிறுவனங்களுக்கு நிலையான சொத்துக்கள் வாங்குவதற்கும், நிறுவுவதற்கும் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு நிறுவனம் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தும் மற்றும் அதன் உற்பத்தி அல்லது சேவையைத் தொடர அத்தியாவசியமான, நீண்ட காலச் சொத்துக்களில் செய்யப்படும் முதலீடு தான் நிலையான மூலதனம். இந்த சொத்துக்கள் உற்பத்திச் சுழற்சியில் உடனடியாகப் பயன்படுத்தப்பட்டு, அழிக்கப்படாமல், பல ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய மதிப்பைக் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு நிலம் மற்றும் தொழிற்சாலை கட்டிடம், அலுவலகம், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் அலுவலகத்திற்கு தேவையான முக்கிய சாதனங்கள் என அனைத்தும் இதில் அடங்கும்.

செயல்பாட்டு மூலதனக் கடன் (Working Capital loan): இந்த குறுகிய கால கடன்கள், அன்றாட வணிக செயல்பாடுகளுக்கு தேவையான தினசரி செலவுகளுக்காக (வாடகை, சம்பளம், மூலதன பொருட்கள் வாங்குதல்) வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவசர காலத்திற்கு தேவையான நிதியை எளிதில் பெற முடியும். இந்த கடன்கள் பொதுவாக ஒரு வருடம் அல்லது குறைவான கால அவகாசத்தைக் கொண்டிருக்கும். இது திடீர் ஆர்டர்களைச் சமாளிக்கவும், வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வரும் வரையில் சமாளிக்கவும் உதவிகரமாக இருக்கும்.

டெர்ம் லோன்: இது நீண்ட கால முதலீடுகளுக்காக வழங்கப்படும் கடன்களாகும். அதாவது வணிகத்திற்கு தேவையான இயந்திரங்கள் வாங்குதல், வணிக விரிவாக்க நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வழங்கப்படுகிறது. இது புதிய கிளைகள் திறக்க, புதிய சந்தைகளில் நுழைய அல்லது உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடும்போது பயனுள்ளதாக இருக்கும்.

உபகரண நிதி (Equipment Financing): இது எம்.எஸ்.எம்.இ-களுக்கு வழங்கப்படும் ஒரு குறிப்பிட்ட வகை கடனாகும். இதன் மூலம் சிறு வணிகங்கள் தங்கள் உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் பிற வணிக உபகரணங்களை வாங்க முடியும். இந்த வகையான கடன்களில் கடனுக்கு ஈடாக, நீங்கள் வாங்கும் உபகரணமே பயன்படுத்தப்படுவதால், தனியாக எதுவும் பிணையம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஓவர் டிராப்ட் பெசிலிட்டி (Overdraft Facility) : இந்த வகையான கடன் ஆனது ஒரு வங்கிக் கணக்கில் அனுமதிக்கப்பட்ட, முன்னரே ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன் வரம்பாகும். அதாவது உங்கள் வங்கிக் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும், அனுமதிப்பட்ட வரம்புக்குள் கடன் எடுக்கலாம். இதில் வங்கிகள் அனுமதித்த கடன் வரம்பில், பயன்படுத்தும் தொகைக்கு மட்டுமே வட்டி செலுத்தினால் போதும். மீதமுள்ள வரம்புக்கு வட்டி இருக்காது. பணத்தை திருப்பிச் செலுத்தும் போது, அது மீண்டும் கடன் வரம்பில் சேர்க்கப்பட்டு தேவைப்படும்போது மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது எதிர்பாராத, குறுகிய கால செலவுகளைச் நிர்வகிக்க பயன்படும்.

பில் டிஸ்கவுண்டிங் (Bill Discounting) : எம்.எஸ்.எம்.இ -க்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை விற்பனை செய்து, அதற்கான பணம் வருவதற்கு முன்னரே, உடனடியாக வங்கிகள் அல்லது நிதி அமைப்புகள் மூலம் பணம் பெறுவதற்காக பயன்படுத்தும் ஒரு நிதி முறையாகும்.

பிசினஸ் கிரெடிட் கார்ட்ஸ் (Business Credit Cards) : இது சிறு குறு, நடுத்தர வணிகங்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட கடன் அட்டையாகும். இது பெரிய அளவிலான கடன் வரம்பையும், வணிகத்திற்கு ஏற்றாற்போல் பல வெகுமதிகளையும் வழங்குகிறது. இதை பயன்படுத்தி சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால் கிரெடிட் ஸ்கோரும் சிறப்பாக இருக்கும். வட்டி இல்லா காலத்தின் பலனையும் அனுபவிக்க முடியும்.

பாயிண்ட் ஆஃப் சேல் (POS) பைனான்ஸ் : இது சில்லறை வணிக நிறுவனங்களின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு விற்பனையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் கடன் ஆகும். அதாவது உங்கள் பிஓஎஸ் இயந்திரங்கள் மூலம் எதிர்காலத்தில் நடக்கும் விற்பனை பரிவர்த்தனைகளின் ஒரு பகுதியை, கடனை திருப்பிச் செலுத்தும் விதமாக எடுத்துக் கொள்ளும். இது சில்லறை வணிகர்கள், உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் அதிக கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் உள்ள கடைகளுக்கு பொருத்தமானதாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+