தமிழகத்தில் இன்று
சென்னை:
இப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பேரணி; அடுத்தாண்டில் ஆட்சியை பிடித்தபின் கோட்டை நோக்கி வெற்றிபேரணி நடத்துவோம் என்று சென்னையில் புதன் கிழமையன்று சைக்கிள் பேரணியை துவக்கி வைத்த ஜெயலலிதா தனதுகட்சியினர் மத்தியில் பேசினார்.
ரேஷன் அரிசி, சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, விவசாயிகளை பாதிக்கும் விலைஉயர்வு போன்ற பிரச்னைகளுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் புதன்கிழமை அன்று சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
ஒன்றிய, நகர, மாவட்ட அளவில் நடைபெற்ற இப்பேரணியில் அதிமுக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.தி.நகர் பனகல் பூங்கா அருகில் இருந்து புதன் காலை 11 மணிக்கு சைக்கிள் பேரணி துவங்கியது. பேரணியை அதிமுக கொடிஅசைத்து ஜெயலலிதா துவக்கி வைத்துப் பேசினார்.
""மத்திய மாநில அரசுகளை கண்டித்து இப்பேரணி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இப்பேரணி மக்கள்பிரச்னைகளை முன் வைத்து நடத்தப்படுகிறது. இந்த முறை மத்திய மாநில அரசுகளை எதிர்த்துப் பேரணி நடத்துகிறோம். அடுத்தமுறை ஆட்சியை பிடித்ததும் கோட்டை நோக்கிப் பேரணி நடத்துவோம் என்றார்.
பின்னர் தினகரன் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் சைக்கிள்களில் முன் செல்ல, தொண்டர்கள் கொடி ஏந்தி பின் தொடர்ந்தனர்.சைக்கிள் பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது.
ஐந்து நிமிடங்களில் இந்நகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிளம்பிய ஜெயலலிதாவை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
சசிகலா கணவர் நடராஜனை கடுமையாக திட்டி அறிக்கை வெளியிட்டது பற்றி கேட்டனர். உங்கள் எச்சரிக்கைக்கு பின்னரும்நடராஜன் திருந்தவில்லை என்றால், அவர் மீது வழக்கு தொடருவீர்களா? என்று கேட்டதும், முதலில் "இல்லை என்றுபதிலளித்தார். ஒரு சில விநாடிகளுக்கு பின்னர் "இப்போதைக்கு இல்லை என்றார்.
இலங்கை பிரச்னையில் மதிமுக, பாமக மேற்கொண்டுள்ள நிலைகள் பற்றிய கேள்விக்கு அதுபற்றி அவர்களிடம் கேளுங்கள்என்று மட்டும் பதிலளித்து விட்டு புறப்பட்டார் ஜெயலலிதா.
மேடையை விட்டு கிழே இறங்கியதும் கடும் வெயிலில் இருந்து ஜெயலலிதாவை பாதுகாக்க, சிவப்பு நிற குடை பிடித்தனர்கட்சியினர். ஆனால், அதை மறுத்து விட்டார் ஜெயலலிதா.