தமிழகத்தில் இன்று
""அதிபர் கருணாநிதி..வெளியுறவு அமைச்சர் வைகோ..பாதுகாப்பு அமைச்சர் பிரபாகரன்..
சென்னை:
தமிழகம், யாழ்ப்பாணம், மலேசியா, சிங்கப்பூரில் உள்ள தமிழர் பகுதிகளை இணைத்து "அகண்ட தமிழ் தேசத்தை உருவாக்கி அதன் அதிபராகவேண்டும் என்பதே கருணாநிதியின் கனவு என்று அ. தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து திங்கள் கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
விடுதலைப் புலிகளின் தலைவன் பிரபாகரன் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இடங்களில் கூட அவ்வளவு அருமையாக ஒரு மாநாட்டைநடத்தி இருக்க முடியாத அளவில் ஈரோட்டில் ஒரு மாநாட்டை வைகோ நடத்தியிருப்பதற்காக பிரபாகரன் என்றென்றும்வைகோவுக்கு நன்றி உடையவராக இருப்பார்.
இந்திய அரசுக்கு இதை விட மோசமாக வைகோவால், தர்மசங்கடத்தை ஏற்படுத்தவோ சர்வதேச அரங்கில் இந்தியாவின்நற்பெயரைக் குலைத்திருக்கவோ முடியாது.
தன்னை ஒரு தேசியவாதி என்றும், இந்திய அரசின் கொள்கைகளை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறிக் கொள்ளும் வைகோ,1971ல் கருணாநிதி கடைபிடித்த உதாரணத்தையே பின்பற்றியிருக்கிறார். தான் கருணாநிதியின் ஆத்மார்த்த சீடர் என்பதை வைகோநிரூபித்துள்ளார்.
ஈரோட்டில் வைகோவை "தமிழ்நாட்டின் பிரபாகரன் என்று வர்ணித்ததுபோல், வங்கதேச விடுதலைக்கு பின் "இதயத்தில் தேசதுரோகியான கருணாநிதியை, "தமிழ்நாட்டின் முஜிபுர் ரகுமான் என்று வர்ணித்தனர்.
கருணாநிதிக்கும், பாரூக் அப்துல்லாவுக்கும் என்ன வேறுபாடு. அவருக்காவது சுயாட்சிப் பற்றிய தீர்மானத்தை காஷ்மீர்சட்டமன்றத்தில் நிறைவேற்றும் துணிச்சல் இருந்தது. ஆனால், கருணாநிதியோ ஆலடி அருணாவின் பின்னால் ஒளிந்து கொண்டு அருணாவைவிட்டு மாநில சுயாட்சி பற்றி கதற வைக்கிறார்.
காஷ்மீர் சட்டமன்றத் தீர்மானத்தை கண்டிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, தி. மு,.க கோருவதை மட்டும் அதிகாரப்பகிர்வு என்று ஏற்றுக் கொள்கிறார். ஈரோடு புலி ஆதரவு மாநாட்டில் கலந்து கொண்டு ம.தி.மு.க, பா.ம.க ஆகியவற்றுடன்வைத்துள்ள கூட்டணியை நியாயப்படுத்தி பேசுகிறார் அத்வானி. அதேபோல் கருணாநிதி முதல் நாள் தனி ஈழ ஆதரவு என்றும்,மறுநாள் அதை வாபஸ் வாங்கி பேசுவதையும் இதே அத்வானி நியாயப்படுத்தி பேசுகிறார்.
கருணாநிதியின் தடுமாற்றங்களை ஒரு புறம் பா.ஜ.க வையும், மறுபுறம் பிரபாகரனையும் திருப்திப்படுத்த வெளியிடும் முரண்பட்டகருத்துக்களாக மட்டும் ஏற்க முடியாது. அது இந்தியாவை துண்டாடி அதில் இருந்து ஒரு "அகண்ட தமிழ் தேசத்தை உருவாக்கி கருணாநிதிதலைவராகவும், வைகோ வெளியுறவு அமைச்சராகவும், பிரபாகரன் அதன் பாதுகாப்பு அமைச்சர் அல்லது தளபதியாகவும்ஆவதற்கான ஆழமான துரோகத் திட்டமாகும்.
கருணாநிதி கனவு காணும் "அகண்ட தமிழ் தேசத்தில் தமிழ்நாடு, இலங்கையில் உள்ள யாழ்பாணம் மற்றும் மலேசியா, சிங்கப்பூர்,தென்னாப்பிரிக்காவின் தமிழர்கள் பகுதிகள் கூட இருக்கலாம்.
இதில் வெட்கக்கேடான விஷயம், நாட்டை ஆளும் மத்திய பா.ஜ.க. கூட்டணியின் அங்கங்களான தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.கஆகிய மூன்று கட்சிகளும் இந்திய மண்ணில் ஒரு இந்தியத் தலைவரைக் கொன்ற கொலையாளியான முதல் குற்றவாளியாகவும்அறிவிக்கப்பட்டு தேடப்படும் குற்றவாளியாகவும் உள்ள பிரபாகரனைக் காப்பதிலும், பிரபலப்படுத்துவதிலும் கவனம்காட்டுகின்றன.
யூதர்களை கொன்று குவித்தவர்களை உலகம் முழுவதும் வேட்டையாடிய இஸ்ரேல் நாட்டை இந்தியா பின்பற்ற தேவையில்லை.குறைந்தபட்சம் இந்திய நாட்டில் படுகொலைக்காக இந்தியாவால் தேடப்பட்டு வரும் மிகவும் அபாயகரமான கொலையாளியை,அதாவது பிரபாகரனை பாதுகாப்பதையும், போற்றுவதையும் தடுக்கவாவது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.