ஆதலினால் காதல் செய்வீர் ...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் தலைவிரித்தாடும் ஜாதி வேறுபாடுகளை ஒழிக்க வேண்டுமானால் அனைவரும் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முதல்வர்கருணாநிதி வியாழக்கிழமை கூறினார்.

சென்னையில் வியாழக்கிழமை ஈரோடு தமிழன்பனின் மகன் திருமணத்தை நடத்தி வைத்து அவர் பேசியதாவது:

காதல் எல்லா இடங்களிலும் உள்ளது. நாடகம், சினிமா, நாவல்களில் வரும் காதல்களை படித்து வியக்கும் மக்கள் தங்களது குடும்பத்தினர் யாராவதுகாதலித்தால் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

சங்க இலக்கியத்தில் காதல்:
அந்தக் காலத்தில் காதலுக்கு முக்கியத்துவம் இருந்ததை சங்க இலக்கியங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அந்தக் காதல் இன்று வெறும்பேச்சளவில் இருக்கின்றது. செயல் அளவில் மறுக்கப்படுகிறது என்பதையே பாரதியாரின் கவிதைகள் பறைசாற்றுகின்றன.

காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் கலப்புத் திருமணம் ஏற்படும். கலப்புத் திருமணம் ஏற்பட்டால் தான் சாதிகள் ஒழியும்.

இந்தத் திருமணத்தைக் காண வந்திருக்கும் திருமணம் ஆனவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கலப்புத் திருமணம் செய்து வைக்க வேண்டும். அவர்கள்காதலித்தால் அதைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் ஜாதி, மதக் கொடுமைகள் அழியும்.

ஸ்டாலின் தமிழ் பெயரா?

சில வருடங்களுக்கு முன் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் தமிழ், தமிழ் என்று சொல்கிறீர்களே. ஏன் உங்கள் மகன்களுக்குத் தமிழ் பெயர் வைக்கவில்லைஎன்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

என் மூத்த மகனின் பெயர் முத்து. இது எங்கள் குடும்பப் பெயர். 2 வது மகனின் பெயர் அழகிரி. இயக்கத்துக்கு என்னை இழுத்த தலைவன் பெயர் அது.அடுத்தவனின் பெயர் ஸ்டாலின். ரஷ்யாவில் ஸ்டாலின் மறைந்த நேரத்தில் பிறந்தவர் என்பதால் 3 வது பிள்ளைக்கு ஸ்டாலின் என்று பெயர்வைக்கப்பட்டது.

அடுத்த பிள்ளைக்குப் பெயர் தமிழரசு. மொழியின் மீதும், நாட்டின் மீதும் கொண்டுள்ள ஆர்வம் காரணமாக அந்தப் பெயர் வைக்கப்பட்டது.

எனவே உலகம், இயக்கம், நாடு, வீடு என்ற அடிப்படையில் தான் இந்தப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன என்று நான் என் நண்பருக்கு பதில் கடிதம்அனுப்பினேன் என்றார் கருணாநிதி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற