பிரதமர் தலைமையில் கமிட்டி
டெல்லி:
இந்தியாவில் திடீரென்று ஏற்படும் இயற்கைச் சீரழிவுகளைத் தடுக்க பிரதமர் வாஜ்பாய் தலைமையில் தேசியக் கமிட்டி அமைக்கப்படும் என்றுஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
குஜராத்தில் திடீரென்று கடந்த ஜனவரி 26 ம் தேதி பூகம்பம் ஏற்பட்டதையடுத்து அங்கு நிவாரண நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காகவும்,இனிமேல் பூகம்பம் ஏற்பட்டால் அதை எதிர் கொள்வதற்காககவும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பிரதமர்வாஜ்பாய் தலைமையில் தேசியக் கமிட்டி அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
பூகம்ப நிவாரணம் மற்றும் இயற்கைச் சீரழிவுகளை எதிர் கொள்ளும் தேசியக் கமிட்டியின் துணைத் தலைவராக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்சரத் பவார் இருப்பார். இதுதவிர இந்தக் கமிட்டியில் உள்துறை, பாதுகாப்பு, நிதி, வேளாண்மை, ஐவுளித்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்களும் அங்கம்வகிப்பார்கள். திட்டக்கமிஷன் துணைத் தலைவர் கே.சி.பந்த், முதன்மை அறிவியல் ஆலோசகர் அப்துல் கலாம் ஆகியோரும் கமிட்டியில் இடம்பெறுவர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் பங்காரு லட்சுமண், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்ஷிராம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் மற்றும் பிறகட்சிகளைச் சேர்ந்த 20 பேர் இக்குழுவில் இடம் பெறுவார்கள்.
இந்த தேசிய கமிட்டி குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கும். இவர்கள்குஜராத்தில் பழைய நிலை திரும்பும் வகையில் குறுகிய கால, நீண்ட கால நடவடிக்கைகள், திட்டங்கள், வீடுகளை இழந்த மக்களுக்கு விரைவில் வீடுகள்கட்டிக் கொடுப்பது ஆகியவை குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள்.
இதுதவிர, திடீரென்று ஏற்படும் இயற்கைச் சீற்றங்களைச் சமாளிப்பது மற்றம் இயற்கைச் சீற்றங்களிலிருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைமேற்கொள்வது ஆகியவை குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.