For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பையில் வைகோ: புலிகளுக்கு என் ஆதரவு தொடரும் என அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று நள்ளிரவில் மும்பை வந்து சேர்ந்தார்.

கடந்த 11 நாட்களாக சிகாக்கோவில் இருந்த அவர் நேற்று மும்பை வந்தார். அவர் இன்று பகல் 1 மணிக்கு விமானம் மூலம் சென்னைவருகிறார்.

மும்பை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,

ஜெயலலிதா அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை நான் கெடுத்தேனா?. இலங்கையில் உள்ளதமிழர்களுக்கும் தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பாரம்பரியத் தொடர்பு இருந்து வருகிறது.

அவர்களுக்கு ஒரு சிரமம் வந்தால் அதற்காக குரல் கொடுப்பது தவறா? இலங்கைத் தமிழர் பிரச்சனையை புலிகளைக் குறிப்பிடாமல்பேசிவிட முடியுமா? புலிகளால் தான் இன்று அங்கு தமிழர்களுக்கு விடிவு ஏற்பட இருக்கிறது. அதைச் சொன்னால் எப்படித் தவறாகும்.

நான் புலிகளை அழைத்து தமிழகத்தில் ஒரு கிளையை ஆரம்பிக்கச் சொல்லவில்லை. புலிகளை இலங்கையில் ஆதரிக்கிறோம். புலிகள்இல்லாமல் இலங்கை தமிழர் பிரச்சனை தீராது.

பாலஸ்தீன பிரச்சனையில் யாசர் அராபத்தை குறிப்பாடமல் பேச முடியுமா? வடக்கு ஐயர்லாந்து பிரச்சனையில் போராட்டக்காரர்களைஒதுக்கிவிட்டு பேச முடியுமா? அது மாதிரி தான் இலங்கைப் பிரச்சனையில் புலிகள் குறித்தும் பேசினேன். இது தவறா?

தமிழர்கள் அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகளால் சித்தரவதை செய்யப்பட்டு படுகொலைகள் செய்யப்பட்டதை கண்டித்தேன். இந்தத்தமிழர் படுகொலைகளைத் தடுத்த புலிகளை ஆதரித்தோம். அவர்களை தமிழகத்தில் வைத்தா ஆதரித்தோம்?

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு குறித்து ஜெயலலிதா உண்மையிலேயே கவலைப்படுபவரா? ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்புவழங்கியபோது தமிழகம் முழுவதும் வன்முறையைத் தூண்டி விடுமாறு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அக் கட்சியினருக்குஉத்தரவு போனது.

அதையடுத்து பஸ்களை எரித்தார்கள். தர்மபுரியில் விவசாயக் கல்லூரி மாணவிகள் சென்ற பஸ்ஸை கொழுத்தினார்கள். உயிருக்காகமன்றாடிய அந்தப் மாணவிகளை எரித்தவர்கள் தான் ஜெயலலிதாவின் கட்சியினர். 3 பேர் பஸ்சில் சாம்பாலானார்கள்.

இந்த ஜெயலலிதா எப்படி தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கைப் பற்றிப் பேசலாம். நான் மாநிலத்தின் அமைதியை சீர்குலைப்பதாகக் கூறிஎன்னைக் கைது ஜெயலலிதா கைது செய்வது வேடிக்கையானது.

இதனால் நான் கொஞ்சமும் கலங்கிவிட மாட்டேன். எங்களுக்கு சவால் விட்டுள்ள ஜெயலலிதாவை சந்திப்போம். இந்த விவகாரத்தில்மத்திய அரசின் உதவியைக் கோர மாட்டேன். மாநில அரசின் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்று கருதுபவன் நான்.இதை சட்டப்படி சமாளிப்பேன். என்னால் மத்திய தேசிய ஜனநாயக அரசுக்கு எந்த சங்கடமும் வராமல் பார்த்துக் கொள்வேன்.

தமிழகத்தில் தனக்கு எதிராக யாரும் இருக்கக் கூடாது என்ற அகந்தையின் வெளிப்பாடு தான் இந்தக் கைது. எனது கட்சியினரை சிறையில்வைக்க ஆரம்பித்துவிட்ட ஜெயலலிதாவை சட்டரீதியில் சந்திப்போம். தெருக்களில் போராடி வெல்வோம். அதே நேரத்தில் மாநிலத்தில்எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் ஏற்படுத்த மாட்டோம்.

தமிழக மக்களின் அன்றாட பிரச்சனைகளில் இருந்தும், அரசின் தோல்விகளில் இருந்தும் திசை திருப்ப ஜெயலலிதா நடத்தும் நாடகம் தான்இந்தக் கைது என்றார் வைகோ.

முன்னதாக மும்பை விமான நிலையத்தில் வைகோவை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்னுசாமி, மரபுசாரா எரிசக்தித்துறைஇணையமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்ட கட்சியினர் வரவேற்றனர்.

பின்னர் வைகோ சென்டார் ஹோட்டலுக்குப் புறப்பட்டுச் சென்றார். இன்று பகல் 11.30 மணி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர்சென்னை வருகிறார். பகல் 1 மணிக்கு அவர் சென்னை விமான நிலையம் வருவார்.

அவரது கைதை எதிர்த்து நாளை சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட மதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X