இலங்கை: ரணிலுடன் நார்வே குழுவினர் சந்திப்பு
கொழும்பு:
இலங்கையில் சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நார்வே தூதுக் குழுவினர் இன்று பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேயை சந்தித்து அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து விவாதித்தனர்.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தாய்லாந்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் கடந்த மாதம்தொடங்கின.
கடந்த மாதம் 16 முதல் 18ம் தேதி வரை முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அடுத்தகட்டப்பேச்சுவார்த்தைகள் வரும் 31ம் தேதி தொடங்குகின்றன.
இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக நார்வே குழுவினர்இலங்கை விரைந்துள்ளனர்.
நார்வே வெளியுறவுத்துறை அமைச்சரான விடார் ஹெல்கெசன் தலைமையிலான தூதுக் குழுவினர் இன்று காலைகொழும்பில் ரணிலைச் சந்தித்து இதுகுறித்தப் பேச்சு நடத்தினர்.
வடக்கு-கிழக்கு இலங்கையில் கூட்டு அதிரடிப் படைகளை அமைத்து அவர்களின் மூலம் அங்கு நிவாரணப்பணிகளை மேற்கொள்வது குறித்து நார்வே குழுவினரும் இலங்கை அரசும் இன்று தீவிரமாக விவாதித்தனர்.
சில எதிர்க் கட்சித் தலைவர்களையும் நார்வே குழுவினர் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இதன் பின்னர் நாளை யாழ்ப்பாணம் செல்லும் நார்வே குழுவினர், அங்கிருந்து வன்னிக்கும் சென்று புலிகளின்தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்து இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தைகள் குறித்துஆலோசனை நடத்தவுள்ளனர்.
விடார் ஹெல்கெசன் தற்போது தான் முதல் முறையாக பிரபாகரனைச் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications