வீரப்பனை பிடிக்க மட்டுமே உதவி: கர்நாடக அமைச்சர்களிடம் ஜெ. கறார்
சென்னை:
வீரப்பனிடம் இருந்து நாகப்பாவை மீட்பது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே,கல்வி அமைச்சர் சந்திரசேகர் ஆகியோர் இன்று நேரில் ஆலோசனை நடத்தினர்.
அப்போது வீரப்பனிடம் தூதரை அனுப்ப உதவ வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க தமிழகம் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. வீரப்பனைபிடிக்க மட்டுமே தமிழகம் உதவும் என கர்நாடகத்திடம் முதல்வர் ஜெயலலிகா கூறிவிட்டார்.
கர்நாடக அதிரடிப்படையுடன் இணைந்து வீரப்பனைப் பிடிக்கும் நடவடிக்கையில் மீண்டும் ஈடுபட தமிழகம் தயாராக இருப்பதாக முதல்வர்ஜெயலலிதா அவர்களிடம் தெரிவித்தார்.
ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவதற்காக கார்கே தலைமையிலான 8 பேர் குழுவினர் நேற்று இரவு தனி விமானம் மூலம் சென்னை வந்துசேர்ந்தனர்.
இன்று காலை இவர்கள் தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர்நிருபர்களிடம் பேசிய கார்கே,
இந்தச் சந்திப்பு மிக நல்லபடியாக நடந்து முடிந்தது. எங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் உறுதியளித்தார்.நாகப்பாவை பத்திரமாக விடுவிப்பது குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினோம். இரு அரசுகளுக்கு இடையிலானபேச்சுவார்த்தை மேலும் தொடரும்.
தூதர் அனுப்புவது குறித்து ஏதும் பேசப்படவில்லை என்றார்.
கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று கேட்டபோது, எல்லாவற்றையும் பத்திரிக்கைகளிடம் கூற முடியாது என்று பதில் தந்தார்.
தமிழகம் விளக்கம்:
இந்தச் சந்திப்புக்குப் பின் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை கர்நாடக அதிரடிப்படையுடன் இணைந்து தமிழக அதிரடிப்படையினர் செயல்பட்டு வந்தனர். ஆனால்,கர்நாடக பகுதியில் இனி நீங்கள் தேடுதல் வேட்டை நடத்த வேண்டாம் என அம் மாநில அரசு கூறியது. இதையடுத்து தமிழக வீரர்கள்கர்நாடக வனப் பகுதியில் இருந்து விலக்கப்பட்டுவிட்டனர்.
இப்போதும் கூட வீரப்பனைப் பிடிக்க கர்நாடகத்துடன் இணைந்து செயல்பட தமிழகம் தயார். இதைத் தான் அம் மாநில அமைச்சர்களிடம்தமிழக முதல்வர் தெரிவித்தார்.
இப்போது உள்ள சூழ்நிலையில் தமிழக அரசு வேறு எந்த விதத்திலும் உதவ முடியாது. வீரப்பனைப் பிடிக்க என்ன உதவி கேட்டாலும் அதைச்செய்ய தமிழகம் தயார். வீரப்பனை பிடிப்பது தான் தமிழக அரசின் நோக்கம். இதில் எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
நாகப்பா கடத்தப்பட்டு இன்றுடன் 85 நாட்கள் ஆகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவைச் சந்தித்த கர்நாடக குழுவில் அம்மாநில தலைமைச் செயலாளர் ரவீந்திரா, டி.ஜி.பி. மடியாள் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
தமிழக அரசின் தரப்பில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் பன்னீர் செல்வம், பொன்னையன், ஜெயக்குமார், தலைமைச் செயலாளர்சுகவனேஸ்வர், உள்துறைச் செயலாளர் முனீர் ஹோதா, டி.ஜி.பி. நெயில்வால் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
-->


