ராஜ்யசபாவில் திமுகவுடன் மோதல்: அதிமுக வெளிநடப்பு
டெல்லி:
மத மாற்றத் தடை சட்டம் தொடர்பாக ராஜ்யசபாவில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்துஅதிமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்தச் சட்டம் குறித்து இன்று அதிமுக எம்.பி. பி.ஜி.நாராயணன் பேசினார். அவர் கூறுகையில், இந்தியாவின் சமூக ஒற்றுமையைப்பாதுகாக்க இது போன்ற சட்டம் தேவை. எனவே, தமிழகத்தைப் போல பிற மாநில அரசுகளும் மத்திய அரசும் மத மாற்றத் தடைச்சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
அப்போது தான் அப்பாவிகளை ஏமாற்றி மத மாற்றம் செய்யும் சமூக விரோதிகளை அடக்க முடியும். பணத்தைக் காட்டியும், பிறவசதிகள் செய்து தருவதாகவும் கூறியும் மக்களை மதம் மாற்றுபவர்களை கண்டிக்க இந்தச் சட்டம் அவசியம் என்றார்.
நாராயணன் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த திமுக உறுப்பினர் விடுதலை விரும்பி பின்னர் எழுந்து அதிமுகவை மிகக்கடுமையாகத் தாக்கினார். இந்தச் சட்டமே ஒரு விஷம் மாதிரி. இந்த விஷயத்தை இந்திய அரசியலில் ஏற்ற நினைக்கிறார்ஜெயலலிதா. இது ஒரு தேவையில்லாத சட்டம் என்றார்.
ஜெயலலிதாவை விடுதலை விரும்பி விமர்சித்ததை எதிர்த்து அதிமுகவினர் கோஷம் போட்டனர். இதற்கு எதிராக திமுகவினரும்கோஷமிட்டனர்.
அப்போது பேசிய நாராயணன், நான் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது அதற்கு எதிராகப் பேச திமுகவை அனுமதித்தது ஏன்என்று கேட்டார்.
அப்போது அவையை நடத்திய துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா, இந்த விவகாரத்தில் விடுதலை விரும்பிக்கு பேச அனுமதிதந்தவர் அவைத் தலைவர் பைரோன் சிங் செகாவத். உங்களுக்கு ஏதாவது எதிர்ப்பு இருந்தால் அதை செகாவத்துதிடம் எழுத்துமூலம் தரலாம் என்றார்.
ஆனால், நாங்கள் ஒரு சிறப்பு தீர்மானத்தின் மீது பேசும்போது எங்களுக்கு எதிரான ஒரு கட்சியை பேசவிட்டதன் மூலம்அவையின் மரபுகள் மீறப்பட்டுவிட்டன என்று கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அதிமுகவினர் வெளிநடப்பு செய்தபோது திமுக எம்.பிக்கள் மேஜைகளைத் தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மதிய உணவு இடைவேளைக்கு சிறிது நேரமே இருந்த நிலையில் இந்த வெளிநடப்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-->


