ராமேஸ்வரம் கடலில் 36 மீனவர்கள் மாயம்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 36 மீனவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. அவர்களைஇலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றார்களா என்பது குறித்தும் தகவல் ஏதும் இல்லை.
தங்கள் கடல் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்60க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். இலங்கை சிறைகளில்அடைக்கப்பட்டனர்.
தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவர்களில் 44 மீனவர்கள்விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்களில் சிலர் மட்டும்தான் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். 36 மீனவர்கள் தங்களுடைய ஒன்பது விசைப்படகுகளுடன் மாயமாகி விட்டனர். இதுவரை அவர்கள் வீடு திரும்பவில்லை.
அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனரா அல்லது இலங்கை மீனவர்கள் கடத்திச் சென்றுவிட்டார்களா என்பது குறித்துத் தெரியவில்லை.
அவர்களைத் தேடும் பணியில் இந்தியக் கடலோரக் காவற்படையினரும் வேறு சில மீனவர்களும் தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.
-->


