புத்தாண்டு முதல் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே தினசரி 138 மின்சார ரயில்கள்!
சென்னை:
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும், தாம்பரத்திற்கும் இடையே வரும் புத்தாண்டு முதல் (ஜனவரி 1 முதல்)தினமும் 138 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி தெரிவித்தார்.
கடற்கரை-தாம்பரம் இடையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதை தற்போது அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.எழும்பூர்-கடற்கரை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணியும் இருகட்டங்களாக துரிதமாக நடந்து வருகிறது.
வரும் ஜனவரி 1ம் தேதிக்குள் பூங்கா ரயில் நிலையம் வரையிலான பணிகள் முடிந்து விடும். ஜனவரி இறுதிக்குள்கடற்கரை வரையிலான பணியும் முடிவடைந்து விடும்.
இந்த நிலையில் அகல ரயில் பாதை மாற்றும் பணியை மூர்த்தி மற்றும் தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள்பார்வையிட்டனர். பின்னர் மூர்த்தி நிருபர்களிடம் பேசுகையில்,
மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது, தினசரி 86 ரயில்களே இயக்கப்பட்டு வந்தன. இனிமேல் அது 138ரயில்களாக இருக்கும். அகல ரயில் பாதை மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திட்டமிட்ட காலத்திற்குள் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 1ம் தேதி முதல் இந்தப்பாதையில் மின்சார ரயில்கள் ஓடத் தொடங்கும்.
முதல் கட்டப் பணியான பூங்கா ரயில் நிலையம் வரையிலான பணிகள் முடிந்ததும், அகலப் பாதையில் 28 ரயில்கள்விடப்படும். எழும்பூர்-பூங்கா இடையே இவை இயக்கப்படும்.
மேலும், கடற்கரை-தாம்பரம் இடையே 54 ரயில்கள் இயக்கப்படும். அதற்குப் பிறகு மேலும் 56 ரயில்கள்கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும். ஜனவரி 1ம் தேதி முதல் இந்தத் திட்டம் படிப்படியாகஅமல்படுத்தப்படும்.
கோயம்பேடு பஸ் நிலையம் செல்லும் பயணிகளின் வசதிக்காக தற்போதுள்ள ரயில்வே லைனிலேயே, அண்ணாநகர் (வில்லிவாக்கம்) வரை மின்சார ரயில்களை நீட்டிப்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது என்றார் மூர்த்தி.
-->


