பா.ஜ.கவுடன் மோதல்: கருணாநிதிக்கு ராமதாஸ், வைகோ ஆதரவு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று திடீரென சந்தித்துப் பேசினார். மத்தியஅரசின் பொருளாதாரக் கொள்கைகளை திமுக எதிர்க்கும் என கருணாநிதி அறிவித்ததையடுத்து அவரை ராமதாஸ்சந்தித்துப் பேசியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இந் நிலையில் மத்திய அரசை எதிர்க்கும் திமுகவுக்கு ஆதரவாக வைகோவும் குரல் கொடுத்துள்ளார்.
மத்திய அரசின் தனியார்மயமாக்கலை எதிர்போம் என்று கூறியிருப்பதன்மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்இருந்து வெளியேறும் முதல் முயற்சியை திமுக எடுத்துள்ளது.
இந் நிலையில் தே.ஜ.க. கூட்டணியில் இருந்தாலும் திமுகவைப் போலவே மனத் தாங்கலுடன் இருந்து வரும்பா.ம.க. தலைவர் ராமதாஸ், கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். பா.ஜ.கவுடன் அதிமுக நெருங்கி வருவதையும்,தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தமிழக கட்சிகள் ஒதுக்கப்பட்டு வருவது குறித்தும் விவாதித்தனர்.
மேலும் சாத்தான்குளத்தில் திமுக போட்டியிட்டால் ஆதரவு தர தயாராக இருப்பதாகவும் கருணாநிதியிடம் ராமதாஸ்தெரிவித்தார்.
கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் இன்று காலை இச் சந்திப்பு நடந்தது. ராமதாசுடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மற்றும் ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி ஆகியோரும் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இச் சந்திப்பு நடந்தது. கருணாநிதியைச் சந்தித்த பின்னர் வெளியே வந்தராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துக் கூறுவேன். ஆனால், இந்த ஆண்டுமுதல் நாளில் சந்திக்கவில்லை. இதனால் இன்று தான் நேரில் போய் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களைத்தெரிவித்தேன். கருணாநிதியும் எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மேலும் கருணாநிதி எழுதிய தொல்காப்பியப் பூங்கா நூல் வெளியீட்டு விழாவிலும் என்னால் கலந்து கொள்ளஇயலாமல் போனது. தமிழ் இருக்கும் வரை கருணாநிதியை யாரும் மறக்க முடியாத அளவுக்கு மிகச் சிறப்பானஇந்த நூலை அவர் எழுதியுள்ளார்.
இதற்காக அவரை நேரில் சந்தித்துப் பாராட்ட ஆசைப்பட்டேன். இன்று அதற்கு வாய்ப்பு கிடைத்தது. நாங்கள்அரசியல் ஏதும் பேசவில்லை என்றார் ராமதாஸ்.
ஆனால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து திமுக வெளியே வந்தால் கூடவே பா.ம.கவும் வெளியே வரும் என்றுடெல்லிக்கு சிக்னல் காட்டவே இச் சந்திப்புக்கு கருணாநிதி ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. திமுகவுடன்மதிமுகவும் வெளியேறுவது கிட்டத்தட்ட நிச்சயமாகிவிட்டது.
திமுகவுக்கு வைகோ ஆதரவு:
இந் நிலையில் மத்திய பா.ஜ.க. அரசின் பொருளாதாரக் கொள்கைகளை திமுகவைப் போலவே நானும்எதிர்க்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கூறியுள்ளார்.
இன்று பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,
பவானி, கபினி அணை விவகாரத்தில் கேரள முதல்வருக்கு தமிழக விவசாயிகள் தந்தி அனுப்ப வேண்டும் என்றுதிமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த விஷயத்தில் கருணாநிதியின் கருத்துத் தான் எங்கள் கருத்தும்.
மத்திய அரசின் சில பொருளாதாரக் கொள்கைகளை நானும் எதிர்த்துக் கொண்டுதான் இருந்தேன். ஏற்கனவேநெய்வேலி நிலக்கரி சுரங்கம் தனியார்மயமாவதை நான் தான பிரதமரிடம் பேசித் தடுத்தேன். தனியார்மயமாக்கலை எதிர்த்துதிமுக செயற்குழு நேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திமுகவின் கருத்து சரி தான்.
சாத்தான்குளம் இடைத் தேர்தல் குறித்து மதிமுக நிர்வாகிகள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். விரைவில் முடிவைஅறிவிப்போம் என்றார் வைகோ.
சாத்தான்குளத்தில் திமுகவின் நிலைக்காகத் தான் மதிமுக காத்துக் கொண்டுள்ளது. திமுக போட்டியிட்டால் மதிமுகதனது ஆதரவைத் தெரிவிக்கும்.
-->


