கூடுதல் நீர் தருவோம்.. தர மாட்டோம்... தருவோம்: கர்நாடகத்தின் தண்ணீர் அரசியல்
பெங்களூர்:
தமிழகத்துக்கு காவிரியில் கூடுதலாக நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் தினமும்4,500 கன அடி நீர் திறந்து விடப்படுமா என்பது குறித்து அது இன்னும் தன்னுடைய முடிவை அறிவிக்கவில்லை.
கடந்த 13ம் தேதி நடக்கவிருந்த பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையக் கூட்டம், பாண்டிச்சேரி மற்றும்கேரள முதல்வர்கள் பங்கு கொள்ளாததால் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து பிரதமர் வாஜ்பாயுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில் தமிழகத்துக்கு பிப்ரவரி இறுதி வரை தினந்தோறும் வினாடிக்கு1,200 கன அடி நீர் திறந்து விட கிருஷ்ணா சம்மதித்தார்.
ஆனால் தமிழகத்தில் தற்போது பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களைக் காப்பாற்ற வேண்டுமானால் தினமும்வினாடிக்கு 4,500 கன அடி நீர் திறந்து விடப்பட உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமரிடம்கேட்டுக் கொண்டார்.
மத்திய நீர்வளத் துறை அமைச்சக அதிகாரிகளும் காவிரி டெல்டா பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, தினமும்4,500 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று பிரதமருக்குப் பரிந்துரை செய்தனர்.வாஜ்பாயும் உடனடியாக கிருஷ்ணாவுக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதினார்.
அதன்படி தமிழகத்துக்கு தினமும் 4,500 கன அடி நீர் திறந்து விடப்படும் என்று கர்நாடக அமைச்சர் சந்திரேகெளடா நிருபர்களிடம் தெரிவித்தார். ஆனால் சில மணி நேரத்திலேயே அவர் கூறியதை கர்நாடக அரசு மறுத்து"பல்டி" அடித்தது.
இதையடுத்து நேற்று கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் மற்றும் தலைமைச் செயலாளர் பி.எஸ்.பாட்டீல் ஆகியோருடன் கிருஷ்ணா ஆலோசனை நடத்தினார்.
நேற்று காலை முதல் இரவு வரை பல முறை இவர்கள் கூடி விவாதித்தனர். நீர்வளத் துறை நிபுணர்களும் இந்தக்கூட்டங்களில் கலந்து கொண்டனர். பின்னர் நேற்று இரவு நிருபர்களிடம் எச்.கே. பாட்டீல் கூறுகையில்,
தமிழக, கர்நாடக மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை, அணைகளில் உள்ள நீரின் அளவு ஆகியவற்றைக்கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு திறந்து விடப்படும் நீரின் அளவை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
பிப்ரவரி மாதம் இறுதி வரை தினமும் வினாடிக்கு 1,200 கன அடி வீதம் நீர் திறந்து விட முதலில் முடிவுசெய்திருந்தோம்.
ஆனால் பிரதமரின் பரிந்துரையின் படி ஒரு வாரத்துக்கு திறந்து விடப்படும் நீரின் அளவை அதிகரிக்க முடிவுசெய்துள்ளோம் என்றார் பாட்டீல்.
ஆனால் வினாடிக்கு 4,500 கன அடி நீர் திறந்து விடப்படுமா என்பது குறித்து அமைச்சர் தெளிவாகக் கூறவில்லை.எவ்வளவு அதிகமான நீர் திறந்து விடப்படும் என்றும் பாட்டீல் தெரிவிக்கவில்லை.
இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அதன் பிறகே இது தொடர்பாக இறுதி முடிவை கர்நாடக அரசுஎடுக்கும் என்று தெரிகிறது.
கருகிக் கொண்டிருக்கும் சம்பா பயிர்களைத் தமிழக விவசாயிகள் வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கும்நிலையில், கர்நாடக அரசு இன்னும் இது தொடர்பாக ஒரு முடிவை எடுக்காமல் தமிழகத்தைத் தொடர்ந்து குழப்பிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே கர்நாடக அணையிலிருந்து தற்போது திறந்து விடப்பட்டுள்ள நீர் இன்னும் மேட்டூர் அணைக்குவந்து சேரவில்லை. நாளை அதிகாலைதான் அது வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வினாடிக்கு 1,200 கன அடி என்ற அளவிலேயே நீர் திறந்து விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வளவுகுறைவான நீரைக் கொண்டு சம்பா பயிரைக் காப்பாற்ற முடியாது என்று கூறப்படுகிறது.
குறைந்தபட்சம் 2 வாரத்துக்கு தினமும் தொடர்ந்து 4,500 கன அடி நீரை கர்நாடகம் தந்தால் தான் ஏதாவது பலன்கிடைக்கும். இல்லாவிட்டால் இந்த நீர் வந்தும் வேஸ்ட் தான்.
-->


