திண்டுக்கல் கோவில் யானை இறந்தது: நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள முனியப்பன் கோவிலைச் சேர்ந்த யானை நோயினால் இறந்து போனதைத் தொடர்ந்து,நூற்றுக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த முழு கோவில் மரியாதையுடன் அது புதைக்கப்பட்டது.
"தமிழ்ச் செல்வன்" என்று அழைக்கப்பட்ட அந்த யானையின் வயது 17. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அதன்காலில் புண் வந்தது.
ஆனால் கேரள கால்நடை மருத்துவர்கள் யானைக்குச் சிகிச்சை அளித்து அந்தப் புண்ணுக்கு சிறப்பான சிகிச்சைஅளித்தனர். இதையடுத்து "தமிழ்ச் செல்வன்" குணமடைந்தது.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் மீண்டும் அதே காலிலேயே "தமிழ்ச் செல்வனு"க்கு மீண்டும் புண்ஏற்பட்டது.
இதையடுத்து அந்த யானைக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இம்முறை சிகிச்சைபலனளிக்கவில்லை. குற்றுயிரும் குலையுயிருமாக உயிருக்குப் போராடி வந்த "தமிழ்ச் செல்வன்" இன்று காலைஉயிரிழந்தது.
இதனால் கோவில் ஊழியர்களும் அப்பகுதி மக்களும் மிகவும் சோகமாயினர். "தமிழ்ச் செல்வனி"ன் உடலை ஒருலாரியில் ஏற்றிய மக்கள் அதை ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.
பின்னர் ஊருக்கு வெளியே வத்தலக்குண்டு செல்லும் பாதையில் உள்ள ஒரு இடத்தில் பெரிய பள்ளம் தோண்டி,"தமிழ்ச் செல்வனை" புதைத்தனர். அப்போது நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு நின்று அந்த யானைக்கு இறுதிஅஞ்சலி செலுத்தினர்.


