மலேசியாவில் பிரதமர் வாஜ்பாய்
டெல்லி:
பாகிஸ்தான் தூண்டி விட்டு வரும் தீவிரவாதம் குறித்து மலேசியாவில் நடக்கும் அணி சேரா நாடுகள் கூட்டத்தில்முழுமையாக விவாதிக்கப்படும் என பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
116 நாடுகள் கொண்ட இந்த அமைப்பின் இரண்டு நாள் மாநாடு திங்கள்கிழமை கோலாலம்பூரில் தொடங்குகிறது.இதில் பங்கேற்க வாஜ்பாய் இன்று மலேசியா புறப்பட்டுச் சென்றார்.
டெல்லி விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,
தீவிரவாதத்துக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற அணி சேரா நாடுகள் திட்டமிட்டுள்ளன. இந்தக்கூட்டத்தில் பாகிஸ்தானின் தீவிரவாதம் குறித்து இந்தியா பிரச்சனையைக் கிளப்பும்.
சர்வதேச தீவிரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக் கொள்ளும் சில நாடுகள், தீவிரவாத நாடுகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கின்றன. அது குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.
4 நாட்கள் மலேசியாவில் தங்கியிருக்கும் வாஜ்பாய் அந் நாட்டுப் பிரதமர் மகாதிர் முகம்மது உள்பட பலதலைவர்களை தனியே சந்தித்துப் பேசுகிறார்.


